செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு?
ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 40). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர். தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
இவர் கடந்த 27–ந் தேதி மாதனூர்–ஒடுகத்தூர் சாலையில் பாலூர் அருகே சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (33), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கண்ணமங்கலம் அருகே உள்ள இரு முடிபுலியூரை சேர்ந்த பெருமாள் (27), தங்கராஜ் (25), சத்தியமூர்த்தி (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது 4 பேரும் செம்மர கடத்தல் கும்பல் என்பதும், அவர்கள் வெட்டி கடத்தும் செம்மரங்களை சின்னபையனின் கோழிப் பண்ணைக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.
அந்த செம்மரங்களை சின்னபையன் தனது கோழிப்பண்ணையில் பதுக்கி பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பார். இதன் மூலம் சின்ன பையனுக்கு கிலோவுக்கு ரூ.40 கிடைக்குமாம். எனவே அதனை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த தம்பதி நாகேந்திரன் (42), ஜோதி லட்சுமி (40) ஆகியோருக்கும் சின்னபையனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது.
இந்த பணத்தை பெறுவதற்காக நாகேந்திரன்–ஜோதி லட்சுமி தம்பதி வேலூர் கலால்துறை டி.எஸ்.பி. தங்கவேலுவின் உதவியை நாடி உள்ளனர். டி.எஸ்.பி. தங்கவேலு தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை மிரட்டி பணம் பறிப்பவர் என்று கூறப்படுகிறது.
எனவே டி.எஸ்.பி.யும் சின்ன பையனிடம் இருந்து பணம் பெற்று தர உதவுவதாக தெரிவித்தார். அதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. தக்க தருணத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்திய மூர்த்தி ஆகியோர் சின்னபையனின் கோழிப்பண்ணைக்கு 7 டன் செம்மரங்களை அனுப்பி வைத்தனர். அந்த செம்மரங்கள் கோழிப் பண்ணைக்கு வந்தது நாகேந்திரன்–ஜோதிலட்சுமி தம்பதிக்கு தெரியவந்ததும் டி.எஸ்.பி. தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு, கலால்துறை ஏட்டுகள் சவுந்தர்ராஜன், சாமுவேல், போலீஸ் டிரைவர்கள் ராஜேஸ், சீனிவாசன் ஆகியோர் கோழிப்பண்ணைக்கு சென்றனர். சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த அவர்கள் சின்ன பையனை பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் அங்கிருந்த 7 டன் செம்மரங்களை அங்கிருந்து பறித்து சென்றதாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபையன் இது தொடர்பாக வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்திய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை தங்களுக்கு தெரியாமல் சின்னபையன் செம்மரங்களை விற்பனை செய்திருந்ததால் இப்போதும் செம்மரங்களை விற்றுவிட்டு தங்களை ஏமாற்றுவதாக வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாகத் தான் அவர்கள் பாலூருக்கு சென்று சின்னபையனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த தம்பதி நாகேந்திரன்–ஜோதிலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பங்களா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 3 டன் செம்மரம், ரூ.32 லட்சம் பணம், 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல கலால் துறை ஏட்டுகள் சவுந்தர் ராஜன், சாமுவேல், போலீஸ் டிரைவர்கள் ராஜேஸ், சீனிவாசன் ஆகியோரும் கைதானார்கள்.
டி.எஸ்.பி. தங்கவேலு போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் வேலூரில் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் அருகே ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டி.எஸ்.பி. தங்கவேலுவின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சென்னையிலும் வீடு உள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவர் காஞ்சிபுரம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.
இவர் எரிசாராயம் கடத்துவது, மரம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை மிரட்டி பணம் பறிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அதிக பணம் சம்பாதித்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
எனவே சின்னபையனிடம் இருந்து செம்மரம் பறித்தது போல வேறு யாரையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்துள்ளாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது கைதாகி உள்ள நாகேந்திரன்–ஜோதிலட்சுமி தம்பதியிடம் 6 சொகுசு கார்கள் உண்டாம். வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர்.
எனவே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 கார்கள் போக மீதி 2 கார்களும், மீதி பணமும் டி.எஸ்.பி.யிடம் உள்ளதா? என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரிலும் டி.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அவர் வேலை பார்த்த இடங்களிலும் அவர் இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்த விவகாரத்தில் டி.எஸ்.பி. தங்கவேலுவுடள் மேலும் சில போலீசார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating