*உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாண கோலத்தில் கொண்டு செல்லப்பட்டதற்கு ஆயர் கண்டனம் / *கரும்புலிகள் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாலேயே நாம் உடைகளை நீக்கினோம் -இராணுவப் பேச்சாளர்
உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய முறையில் பேணி அதற்கு மரியாதை செலுத்த வேண்டியது மனித நாகரிகமென அநுராதபுரம் மாவட்ட ஆயர் பி.பி.சி.செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படைத்தளத்தில் தாக்குதல் நடத்திய புலிகளின் உடல்கள் நிர்வாணமாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் நேரடியாக அங்கு சென்று பார்க்கவில்லை. உடல்களை நேரில் பார்த்தவர்கள் என்னிடம் வந்து இவை சரியான நடைமுறையில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். யாருடைய உல்கள் என்பது முக்கியமல்ல. அவை நிர்வாணமாக வைக்கப்பட்டிருந்தமை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். பாரிய மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் தான் என்றாலும் அவர்களின் உடல்களை உரிய முறையில் கொண்டு சென்றிருக்க வேண்டும். இறந்த மனித உல்களை நாகரிகமான முறையில் கையாள வேண்டியது அவசியமானது என்றும் ஆயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், புலிகளின் உடல்கள் வேண்டுமென்று அவ்வாறு நிர்வாணமாக வைக்கப்படவில்லை. வந்தவர்கள் அனைவரும் புலிகளின் தற்கொலைதாரிகள் அணியும் உடைகளை அணிந்திருந்தார்கள். எனவே, அவர்களுடைய தற்கொலை அங்கிகளைக் களையவேண்டி இருந்தது. இல்லாவிடில் அவர்கள் உடம்பில் பொருத்தியிருந்த குண்டுகள் வெடித்து பல சேதங்களை ஏற்படுத்தியிருக்கும். இதனால் தான் நாங்கள் அந்த உடைகளை அகற்றினோம். அவர்கள் வேண்டுமென்று நிர்வாணமாக கொண்டு செல்லப்படவில்லை என்றார். தற்கொலை அங்கிகளை களையாமல் அப்படியே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாது. அவ்வாறு கொண்டு செல்கின்ற போது குண்டு வெடித்துவிட்டால் வைத்தியசாலையில் இருக்கின்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதனால் தான் அந்த தற்கொலை அங்கிகளை களைந்து சடலங்களை வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டு சென்றோம். முகாமிற்கும் வைத்தியசாலைக்கும் இடையே சிறிது தூரம் இருப்பதனால் அவ்வாறு கொண்டு சென்ற சடலங்களை பொதுமக்கள் பார்வையிட்டிருக்க கூடும். எனினும் சடலங்களை கொண்டு செல்கின்றோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு சடலங்களை நாம் எடுத்து செல்லவும் இல்லை வேண்டுமென்றே காட்டவும் இல்லை என்றார் .
அநுரதபுரம் விமானப்படைத்தளத்திலிருந்து மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் 21 சடலங்களும் பொலிசாரினூடாக அநுராதபுர வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனைகளும் விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை சம்பவங்களில் காயமடைந்த படையினர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் பலியான படையினரின் சடலங்கள் மரண விசாரணைகளுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தகவல் உதவிக்கு நன்றி:- அதிரடி இணையம்…