குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி: தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டார்
குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் தாழம்பூர் அடுத்த நல்லம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஏழுமலை(வயது 33). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயா(29). இவரும் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகி 12 ஆண்டுகளாகும் இந்த தம்பதிக்கு செல்வராஜ்(12), ராஜா(11), மாலதி(8) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். ஏழுமலைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயா கோபித்துக் கொண்டு சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் சுமார் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு உறவினர்கள் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர். இதனை அடுத்து விஜயா குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு சென்றார். கொஞ்ச காலம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர்.
தாலி அறுப்பு
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஏழுமலை மறுபடியும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. குடிபோதையில் பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் இவர்களுக்குள் தகராறு முற்றியது. அப்போது ஏழுமலை, “உன்னோடு வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் வேறு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ வீட்டை விட்டு வெளியே போடி” என்று கூறியதோடு மனைவி விஜயாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து எடுத்துக் கொண்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து அழுது கொண்டிருந்தாள்.
கொலை
பின்னர் ஏழுமலை வீட்டிற்குள் சென்று தூங்கி விட்டார். தாலி அறுப்பு சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த விஜயா குடித்து விட்டு வந்து செக்ஸ் தொல்லை தரும் கணவரை தீர்த்து கட்டி விட்டால் என்ன? என்று தீர்மானித்தார். நைசாக வீட்டிற்குள் எட்டி பார்த்தார். கணவர் குறட்டை விட்டு தூங்கும் சத்தம் கேட்டது. உடனே அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி சென்று கணவர் ஏழுமலையின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
பிறகு விஜயா தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தப்பி சென்றார். குழந்தைகளை தனது தாய் வீட்டில் விட்டு தலைமறைவானார்.
இதற்கிடையில் நேற்று காலை ஏழுமலையின் அண்ணன் சின்னபையன் தம்பியை பார்க்க நல்லம்பாக்கத்துக்கு வந்தார். அங்கு வீட்டிற்குள் ஏழுமலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக இது குறித்து அவர் கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், தாழம்பூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், பத்மாவதி ஆகியோர் போலீசாருடம் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிடிபட்டார்
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயாவை தேடினர். இந்த நிலையில் விஜயா தாம்பரம் வந்து பஸ்சுக்காக காத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து வந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.