வாலிபர் கொலை: ரூ.4½ லட்சம் தராததால் சித்ரவதை செய்து கொன்றேன்- கைதான மாணவர் வாக்குமூலம்!!
வேலூர் மாவட்டம், கஸ்பாவை சேர்ந்தவர் செய்யது சதாம் (வயது 21). சென்னையில் தங்கி தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அவர் அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவமேத்தா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவர்கள் சக்திவேல், ஸ்டீவ் மாயமாகி இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
மாணவர் சக்திவேல் வாலாஜா பேட்டையில் பதுங்கி இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது. விரைந்து சென்ற தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சக்திவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
செய்யது சதாம் எங்கள் கல்லூரியில் படித்த சீனியர் ஆவார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்றும் வந்தார். எங்கள் அறையிலும் அடிக்கடி வந்து தங்குவார்.
அவர் சுங்கத்துறை அதிகாரிகளை தனக்கு நன்றாக தெரியும். எனவே வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பிடிபடும் டி.வி., செல்போன் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதலாக விற்று சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பி நான் ஊரில் உள்ளவர்களிடமும், நண்பர்களிடமும் ரூ.4½ லட்சம் வரை கடன் வாங்கி செய்யது சதாமிடம் கொடுத்தேன். ஆனால் அவர் கூறியபடி பொருட்கள் தரவில்லை. பல மாதங்கள் ஆகியும் பணத்தை தராமல் இருந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவரை பழிவாங்க நினைத்தேன்.
கடந்த 2–ந் தேதி கல்லூரி தேர்வு முடிந்ததும் உடன் தங்கி இருந்த ஸ்டீவ் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதையடுத்து அன்றே செய்யது சதாமை அறைக்கு வரவழைத்தேன். அப்போது பணம் குறித்து கேட்ட போது மீண்டும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் அவரை தாக்கியதில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரது கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டியும், வாயில் துணியை திணித்தும் கழிவறையில் அடைத்து வைத்தேன்.
எனக்கு கோபம் வரும் போதெல்லாம் அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தேன். சுமார் 25 நாட்கள் அவரை கொடுமை படுத்தினேன். இதில் செய்யது சதாம் மிகவும் சோர்வடைந்ததால் ஒரு நேரம் மட்டும் உணவு கொடுத்தேன்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கிய போது பலத்த ரத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார். உடனே நான் அறையை பூட்டி விட்டு தப்பி சென்று விட்டேன்.
உடல் அழுகி துர்நாற்றம் வீசயதால் பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
செய்யது சதாமை தான் மட்டுமே கொலை செய்ததாக சக்திவேல் கூறி உள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சக்திவேலுடன் தங்கி இருந்த ஸ்டீவ் செல்போன் தொடர்ந்து சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையில் 2 தனிப்படை போலீசார் தர்மபுரி விரைந்து உள்ளனர்.
ஸ்டீவ் சிக்கினால்தான் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? வேறு யாரேனும் கொலையாளி சக்திவேலுக்கு உதவினார்களா? என்பது தெரியவரும்.
Average Rating