தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை பகிரங்கமாக சந்திப்பேன்: வைகோ
கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் கோவை மாநகர், புறநகர் ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொருளாளர் மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நிர்வாகிகளையும், பேரவை உறுப்பினர்களையும் ம.தி.மு.க.விலிருந்து பிரிக்க ஆசை வார்த்தை பேசுகிறார்கள். இதற்கு எந்த வேளையிலும் நாங்கள் மயங்கிவிட மாட்டோம். ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்குப் பதவி, பணம் முக்கியமல்ல.
கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. வலுவாக இருப்பது தி.மு.க.வுக்கு உறுத்துகிறது. அதனால், இங்குள்ளவர்களை எங்களிடமிருந்து பிரித்து விடலாம் என நினைக்கின்றனர். நாங்கள் கொள்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ம.தி.மு.க.வை அழித்து விடலாம் என முதல்வர் கருணாநிதி நினைக்கலாம். ஆனால் அது நடக்காது.
ஓய்வு இல்லாமல் உழைத்ததால் பலர் வற்புறுத்தியதின் பேரில் கேரளாவுக்கு ஆயுர் வேத சிகிச்சைக்கு சென்று 15 நாட்கள் ஓய்வு எடுத்தேன். ஆனால் இதை கோபாலபுரத்து சூத்திரதாரி திரித்து, விடுதலை புலிகளை சந்திக்க சென்றாராப என்ற செய்திகளை பரப்புகிறார்கள். நான் ஏன் ரகசியமாக சந்திக்க செல்ல வேண்டும்?
புலிகளையோ, அவர்களின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தையோ சந்திக்க வேண்டும் என்றால் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாக பகிரங்கமாகவே சென்று சந்திப்பேன். ஈழத்தமிழர்களுக்காக ம.தி.மு.க. என்றும் குரல் கொடுக்கும்.
ஆனால் பயங்கரவாத அமைப்புடன் எனக்குத் தொடர்பு உள்ளது. இதன் மூலம் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உயிருக்கு என்னால் ஆபத்து என பிரதமரிடம் புகார் கொடுத்துள்ளனர். தயாநிதிமாறனுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்கட்டும். அதில், எங்களுக்கு ஆட்சேபனையில்லை. வன்முறையிலும், தீவிரவாதத்திலும் ம.தி.மு.க.வுக்கு எப்போதும் உடன்பாடில்லை என்பதே உண்மை.
ம.தி.மு.க.வுக்கு வேறு கட்சிக்கு இருக்கும் பணபலம் கிடையாது. தி.மு.க.வுக்கு இருக்கும் தொலைகாட்சி பலம் இல்லை. கொள்கை உறுதி கொண்ட தொண்டர் பலம் உள்ளது. தி.மு.க.வில் அதிகாரம் உள்ளது. கோடி, கோடியாக பணம் உள்ளது. ஆனால் அண்ணா உருவாக்கிய குடும்ப பாசம் இல்லை. இங்கே நாம் குடும்ப பாசமாக உள்ளோம்.
எங்கள் பயணத்தில் எந்த காலத்திலும் தளர்ச்சி இருக்காது. எங்கள் கட்சி எடுக்கும் முடிவு தொண்டர்கள் உணர்வுகள் எடுக்கும் முடிவுகளாக இருக்கும்.
வெற்றிகள் கிடைக்கிறபோது கட்சியை நடத்துவது எளிது. ஆனால் வெற்றி பெறாதபோது, எதிர்ப்புகள் வருகிறபோது காப்பது தொண்டர்கள்தான். ஒவ்வொரு செங்கற்களாக வைத்து, நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கிய இயக்கம் ம.தி.மு.க. தமிழ் உணர்வு இருக்கிற, தமிழர்கள் உள்ளத்தில் எல்லாம் இந்த இயக்கம் நிறைந்து இருக்கிறது.
கலைஞர் குடும்பத்தில் 6 அதிகார மையங்கள் உள்ளன. தங்களது சுயநலத்துக்காக கட்சி நடத்துகிறார்கள். ஆனால் சிதைவு வரும்போது காப்பாற முடியாது. நிந்தனைகள் எனக்கு வரட்டும் தாங்கிக் கொள்வேன்.
நாம் நேர்மையின் நெருப்பு. ஊழல் கரையான் நெருங்க முடியாது. நான் நல்லவன், என்ற புகழோடு வாழ நினைப்பவன். இந்த கட்சியில் யாருக்கும் சுயநலம் கிடையாது. தமிழக சட்டசபை வரலாற்றில் பலகீனமான அரசு இப்போதுதான் அமைந்து உள்ளது. அ.தி.மு.க. தோழர்கள் நம்முடைய தோழர்கள் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.