சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வாலிபர் ஒருவர் பேசி, தனது பெயர் சுரேஷ் என்றும், வங்கியில் கடன் வாங்க உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதை கேட்ட பெருமாள், வங்கியில் பல லட்சம் கடன் பெற முடிவு செய்தார். பின்னர் சுரேசை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது சுரேஷ், உங்களது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்த்த பின்னரே வங்கி அதிகாரிகள் கடன் தருவார்கள். உங்களது வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும். நான் கடன் வாங்கி கொடுத்த பின்னர் 10 சதவீதம் கமிஷன் தனக்கு தரவேண்டும் என்றார். இது உண்மை என நம்பிய பெருமாள், தனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் டெபாசிட் செய்தார். பின்னர் இதுபற்றி அவர் சுரேசிடம் தெரிவித்தார்.
அப்போது சுரேஷ், வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தால் போதும். ரூ.30 ஆயிரத்தை எடுத்து கொள்ளுங்கள் என கூறினார். இதன்படி ரூ.30 ஆயிரத்தை பெருமாள் எடுத்து கொண்டார். அதே நாளில் பெருமாளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நெட்பேங்கிக் முறை மூலம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெருமாள் வங்கி அதிகாரிகளிடம் சென்று விளக்கம் கேட்டார். அப்போது அவர்கள் நெட்பேங்கிங் முறை மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். பின்னர் பெருமாள், சுரேசின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தார். இவரை போல் மேலும் 20–க்கும் மேற்பட்டோர் தங்களது வங்கி கணக்கில் இருந்து நெட்பேங்கிங் முறை மூலம் லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தனிப்படை அமைத்தார். இதில் துணை கமிஷனர் செல்வராஜன், உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விஜயக்குமாரி, சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏட்டுக்கள் கலை, சுரேஷ் ஆகியோர் விசாரித்து ராஜேஸ் என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 32) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். இவர் சேலம் டவுனில் உள்ள மணல் மார்க்கெட் பகுதி அருகில் வசித்து வருகிறார். பாலிடெக்னிக் படித்துள்ள இவர், பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் பறித்து வந்துள்ளார்.
இவர் சுமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கைதான ராஜேஸ், போலீஸ் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்து கொடுத்து வந்தார். போலீசாருடன் நெருக்கம் இருப்பதுபோல் காண்பித்து கொண்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இவர் மேலும் பல பெயர்களில் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார்.
கைதான இவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வேறு யார் யாரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.
இந்த கைது செய்து உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–
கைதான ராஜேஸ் பொது மக்களை நூதன முறையில் ஏமாற்றி வங்கியில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்துள்ளார். பல பெயர்களை வைத்து கொண்டு ஏமாற்றி உள்ளார். இவர் பேசுவதை கேட்ட பலரும் அவர் கூறுவது உண்மை என எண்ணி பணத்தை இழந்து உள்ளனர். பொதுமக்கள் வங்கியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும்போது ஏடிஎம் எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது. வங்கி எண், பேன்கார்டு எண் போன்ற விவரங்களையும் தெரிவிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating