மாணவி வித்யா கொலையின் துப்பு துலங்குமா?
புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள்.
இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவருடைய சாரத்தில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அதனைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அறியப்படும் நிலையில்….
மேலதிகமான தகவல்களும் கசியத் தொடங்கியுள்ளன…
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் புங்குடுதீவில் நடைபெற்ற கொலை ஒன்றின் சூத்திரதாரிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அக்கொலை நடைபெற்ற பின்னர் மாணவி வித்தியாவும் அக்கொலை தொடர்பாக சாட்சியமளித்திருந்தாள். அவளுக்கு அப்போது வயது பதினாறு. அன்றே கொலையாளிகள் வித்தியாவைக் குறிவைத்தார்கள் என்பது தெரிந்திராத செய்தியாகும்.
இன்னுமொன்று வித்தியா கல்வி கற்கச் சென்றுவரும்வேளை கடற்படைச் சிப்பாய்கள் என அடையாளம்காணப்பட்ட ஓரிருவர் வித்தியாவை மோட்டார் சைக்கிள்களில் வந்து பின்தொடர்ந்ததாகவும் அதற்கு அஞ்சிய வித்தியா வீட்டிற்கு நேரடியாகச் செல்லாமல் தனது நண்பியின் வீட்டில் நின்றுவிட்டு பின்னர் பாதுகாப்பாக விடுசென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வித்யாவின் வீட்டில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு நடந்தே செல்வதாகவும் சிலவேளைகளில் பாதுகாப்பான பாதைவழியாகச் செல்வதாகவும், சிலவேளை ஆள் நடமாட்டமில்லாத அழிந்து காடுபற்றிப் போயுள்ள குடியிருப்புக்களுக்கூடாக நடந்து செல்வதாகவும் அறியப்படுகின்றது. அன்றைய நாள் வித்தியா தனியாகவே பாடசாலைக்கு ஆள்அரவமற்ற குறுக்கு வழியால் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
கொலைசெய்யப்பட்ட வித்யாவின் தலைமுடி அழகான மிக நீளமானது என்றும் அத்தலைமுடியே அவளின் கைகளைக் கட்டுவதற்கு ஏதுவாக அமைந்தது எனவும் பேசப்படுகின்றது.
இதைவிட யாருடனும் அளவளாவிப் பேசாத வித்தியாவை எளிதில் எவரும் அணுகமுடியாது என்பதும் தெரியவருகின்றது.
வித்தியாவின் கொலை நடந்த இடத்தில் கொலைக்கான காரணத்தை அறிந்து குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் ஏன் மோப்ப நாய்களைப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. சாதாரண கடைகளில் களவு நடந்தால் மோப்பநாய்களுடன் பிரசன்னமாகும் போலீசார் வித்தியாவின் கொலைக்கு ஏன் நாய்களைப் பயன்படுத்தவில்லை.
இன்னுமொரு அதிர்ச்சி தரும் விடயம் நல்லாட்சி தொடங்கி நூறு நாட்கள் கடந்த நிலையிலும் கூட தீவகப் பிரதேசம் முழுவதும் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. அவர்கள் சாதாரணமாக மக்களோடு மக்களாக பெருமளவாக நடமாடுவதாக அறியப்படுகின்றது.
கொலை நடைபெற்ற பிரதேசம்கூட புலனாய்வாளர்களின் நடமாட்டம் மிகுந்த பிரதேசம் எனவும், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் கடற்படையின் முகாம் அமைந்துள்ளது எனவும் சொல்லப்படுகின்றது.
இக்கொலை நடைபெற்ற பிரதேசத்தில் முன்னரும் கொலைகள் நடந்தன என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.
இன்னுமொன்று புங்குதீவு மகாவித்தியாலய மாணவர்கள் தங்கள் சக மாணவியின் இழப்புக்காகச் செய்கின்ற ஆர்ப்பாட்டங்களையும் அழுகைகளையும் நிறுத்துவதற்காக பாடசாலையில் எவ்விதமாக போராட்டங்களும் இனிமேல் நடைபெறக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதகவும் தெரியவருகின்றது.
இத்தனை விடயங்களையும் வாய்திறந்து சொல்லும் அளவுக்கு எவரும் அங்கு இல்லை. காரணம் இருப்பது சொற்ப குடியினரே. அவர்களும் பயந்து நடுங்கி மௌனமாக உள்ளனர்.
இத்தனை துப்புக்களோடும் துலங்குமா வித்தியாவின் படுகொலை மர்மம் என எல்லோரும் ஏங்கிநிற்கின்றனர்.
புங்குடுதீவில் இருந்து பாலா.
Average Rating