இலங்கைக்கு தரங்குறைந்த ஆயுதங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி
இலங்கைப் படையினருக்கு தரம் குறைந்த ஆயுதங்களை விநியோகம் செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள தகவலில்; விடுதலைப் புலிகளுடனான மோதல் காரணமாக இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் தேவை அதிகரித்துள்ளது. இலங்கைக்கு தேவையான ஆயுதங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தற்போது 25 பீரங்கிகளை (ஆட்லறிகள்) வாங்கும் திட்டத்தில் இலங்கை இராணுவம் உள்ளது. பாகிஸ்தானின் அல் ஜர்ரார் பீரங்கிகள் தரம் குறைந்தவை என இலங்கை ஏற்கனவே நிராகரித்து விட்டது. இதற்கு பதிலாக பெலாரஸ் நாட்டில் இருந்து ரி-72 ரக பீரங்கிகளை வாங்குவது குறித்து இலங்கை அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இவ்வகை பீரங்கிகள், பாகிஸ்தானை விட சிறந்த தொழில்நுட்பம் கொண்டவை. நான்கு மடங்கு விலையும் குறைவு. பாகிஸ்தான் பீரங்கி ஒன்றின் விலை 6 கோடியே 40 இலட்சம் ரூபா. 25 பீரங்கிகள் வாங்க 160 கோடியை இலங்கை அரசு செலவிட வேண்டும். ஆனால், பெலாரஸ் பீரங்கிகளை வாங்கினால் இலங்கை அரசுக்கு 80 கோடி மிச்சப்படும். ஆனால், இலங்கையின் இந்த திட்டத்தை முறியடிக்க, பாகிஸ்தான் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இலங்கை இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளையும் பாகிஸ்தான் வளைத்துப் போட்டுள்ளது. புதிய தொழில் நுட்ப குழுவை ஏற்படுத்தி பாகிஸ்தான் பீரங்கிகளை மீண்டும் பார்வையிடச் செய்ய ஏற்பாடும் நடந்துள்ளது.
இந்த வகையில் பீரங்கிகள் விற்பனை செய்யப்பட்டு விட்டால், அடுத்ததாக பாகிஸ்தான் அரசு மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு தரப்பினர் இடையே கமிஷன் விஷயத்தில் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு முதல் 2.5 சதவீத கமிஷன் வழங்க பாகிஸ்தான் முன் வந்துள்ளது. ஆனால், கூடுதல் கமிஷனை இலங்கை தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்கள் தேவைப்படும் என்பதால் இந்த கூடுதல் கமிஷனுக்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும் என்றே கருதப்படுகிறது.
800 கோடி ரூபாவுக்கு இராணுவ தளபாடங்கள் விற்பனை இருக்கும் என்பது பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு. இத்துடன் தரம் குறைந்த இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு தள்ளி விடும் திட்டத்திலும் பாகிஸ்தான் உள்ளது. கூடுதல் கமிஷன் அளித்தால் இது நிச்சயம் சாத்தியப்படும் என பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் இலங்கைக்கு 350 ரேடியோ செட்கள், 25 பற்றரி சார்ஜர்கள், பீரங்கிக்கு தேவையான வெடிபொருட்கள் பாகிஸ்தானுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆனால், இவை மிகவும் தரம் குறைந்து காணப்படுகின்றன என்று இலங்கை இராணுவ வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதை இலங்கை இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளில் ஆயுத தரகர்களாக இருப்பது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே. இவர்கள் பதவியிலுள்ள அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்கிறார்கள். தங்களுக்கு வரும் ஆதாயத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளை தளர்த்தி தரம் குறைந்த ஆயுதங்களை வாங்கி குவிப்பதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர் என்று கூறப்படுகிறது.