மனிதரில் இத்தனை நல்லவர்களா?: பொருட்கள் திருடப்பட்டு தனியாக தவித்தவரின் நாளை, மிகச்சிறந்த நாளாக மாற்றிய மாமனிதர்கள்!!
பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவரான மும்பையை சேர்ந்த இளைஞர் சச்சின் பண்டாரி, வேலையில் இருந்து ஒரு ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு அசாமின் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூர ரெயிலில் தனது கனவு பயணத்தை மேற்கொண்டார். அன்றைய பகல் இனிமையாக கழிந்த நிலையில், இரவில் உறக்கத்தை தழுவிய பண்டாரிக்கு காலையில் அதிர்ச்சி காத்திருந்தது.
காலையில் கண் விழித்தபோது, செல்போன், கேமரா, பர்ஸ் மற்றும் பேக் உட்பட அனைத்து பொருட்களும் திருடு போயிருப்பதை கண்ட பண்டாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். அனைத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது, அவருடன் பயணம் செய்த முகம் தெரியாத பயணியான ஜாங்கலி பாசுமட்டரி தன்னுடைய பர்சை திறந்து அதிலிருந்த 540 ரூபாயில் 500 ரூபாயை சச்சினிடம் கொடுத்துள்ளார். நிச்சயமாக இந்த பணம் திரும்ப கிடைக்கபோவது இல்லை என்று தெரிந்தும் 40 ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் தனக்கு 500 ரூபாய் தந்தது சச்சினுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.
தன்னுடைய பொருட்கள் திருடு போன போது அடைந்த அதிர்ச்சியை விட, ஜாங்கலி செய்த நிதியுதவி பண்டாரியின் மனதை மிகவும் கவர்ந்தது. ஜாங்கலியை அடுத்து மேலும் ஒரு நபர் செய்த உதவியும் பண்டாரியின் மனதை மிகவும் தொட்டது. இது பற்றி பண்டாரி கூறுகையில், “ரயிலில் இருந்து இறங்கி போலீஸ் ஒருவரின் உதவியுடன் அருகில் இருந்த வங்கிக்கு சென்றேன். அந்த வங்கியின் மேலாளரிடம் என் நிலைமையை எடுத்து சொல்லியவுடன், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் எனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதித்தார்” என்று கூறினார்.
அடுத்து ப்ரவுசிங் மையத்திற்கு சென்ற பண்டாரி தன்னுடைய நிலைமையை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். இதை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் ஒரு கேள்வி கூட கேட்காமல், உடனே பணம் அனுப்ப தயாரானதுடன், சிலர் பண்டாரி இருக்கும் இடத்திற்கே வருவதற்கு தயாராக இருந்தனர். இது பண்டாரியின் நெஞ்சை நெகிழச்செய்தது. அடுத்ததாக பண்டாரி சந்தித்த பிரன்ஞால் கலிதா, பிரச்சனைகளை தீர்க்க உதவியதுடன் தனது வீட்டிற்கும் அழைத்து சென்று உணவு பரிமாறியுள்ளார். கலிதாவும் அவரது மனைவியும் அற்புதமான அசாமி உணவை அளித்து விருந்தோம்பலில் தாங்கள் சிறந்தவர்கள் என்பதை உணர்த்தினார்கள். இதற்குள்ளாக பண்டாரியின் அம்மா, நண்பர்களின் உதவியுடன் புதிய சிம் மற்றும் போன் வாங்கி அனுப்பிவைத்தார். பொருட்களை தொலைத்ததற்காக தன்னை தாய் திட்டுவார் என எதிர்பார்த்தற்கு மாறாக “கொஞ்சம் கவனமாக இருக்க கூடாதா” என்று கேட்டது பண்டாரியை திகைப்படைய செய்தது.
அனைத்து பொருட்களும் திருடு போனவுடன் தனது வாழ்வின் மிகக் கடினமான நாளாக இருக்க போவதாக நினைத்திருந்த பண்டாரி, தான் சந்தித்த அன்பான மனிதர்களால், வாழ்வின் மிக சிறப்பான அர்த்தமுள்ள நாளாக மாறியது கண்டு மகிழ்ச்சி பெருக்கில் தெரிவித்ததாவது;
‘உண்மையில் என் பொருட்களை திருடியவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சில பொருட்களை இழந்தாலும் அற்புதமான மனிதர்கள் மற்றும் விலைமதிப்பற்ற அனுபவங்கள் எனக்கு கிடைத்துள்ளது’ என அளவற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Average Rating