கடத்தல் மன்னர்கள் வலையில் சிக்கிய சினிமா நாயகிகள்!!
சமீபகாலமாக ஆந்திரா–தமிழகத்தை செம்மரக் கடத்தல் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது.
சாதாரண கூலித்தொழிலாளி முதல் திரைப்பட நடிகை வரை இதில் உள்ள தொடர்பு அம்பலமானது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது.
திருப்பதி காட்டுக்குள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வீழ்த்தப்பட்டு கிடந்த அப்பாவி தொழிலாளர்களை பார்த்து இதயம் துடித்து போனது. சோகத்தின் பிடியில் சிக்கி கிடக்கும் மலையோர கிராமங்களில் விசாரிக்கும் போது வெளிவரும் உண்மைகளை கேட்டால் ரத்தம் கொதிக்கிறது. செம்மரம் கடத்தி கோடி கோடியாய் சம்பாதித்து பணத்தில் புரளும் பெரிய மனிதர்கள்தான் பல மடங்கு கூலி தருவதாக ஆசைகாட்டி அப்பாவி தொழிலாளர்களை கடத்தல் தொழிலுக்கு இழுக்கிறார்கள்.
திரை மறைவில் இருக்கும் இந்த பெரும் புள்ளிகள் அரசியல் துறை, கலைத்துறை அத்தனையையும் தன் கைக்குள் போட்டு கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.
ஆந்திராவின் செம்மர கடத்தல் தாதாக்களில் ஒருவர் மஸ்தான் வலி. இவர் மீது 30–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆனால் இந்த வலியின் வலிமையால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
சாதாரண எலுமிச்சை ஜூஸ் வியாபாரியாக இருந்த மஸ்தான் வலி அரசியல்வாதிகள் தொடர்பால் பல சமூக விரோத செயல்களிலும், அடிதடி சம்பவங்ளிலும் ஈடுபட்டு பிரபலமானார். 20–க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன. அவற்றையெல்லாம் ‘ப்பூ….’ என்று ஊதி தள்ளிவிட்டு என் வழி தனி வழி என்று செம்மர கடத்தல் தொழிலுக்குள் கால் பதித்தார். அவர் வந்த நேரம் பணம் கொட்டியது. தெருவோர வியாபாரி மாளிகை வீட்டின் அதிபதியாக மாறினார்.
பணம் வந்ததும் மனம் அடுத்து நாடுவது… பெண்.
மஸ்தான் வலியும் அழகான பெண்களை நாடினார். சினிமா துறையில் படத்தயாரிப்புக்கு பணத்தை கொட்டியதால் பல நடிகைகளின் பார்வை மஸ்தான் வலி மீது திரும்பியது.
‘பிரேம பிரயாணம்’ என்ற தெலுங்கு படத்தை மஸ்தான் வலி தயாரித்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நீத்து அகர்வால் நிஜமாகவே மஸ்தான் வலியுடன் காதல் பிரயாணத்தை தொடங்கினார்.
மஸ்தானின் பணவாசம் நீத்துவை காந்தம் போல் கவர்ந்தது. கணவன்–மனைவியாக வாழத் தொடங்கினார்கள்.
நீத்து ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயானவர். கணவரை தனது அண்ணன் என்று கேட்பவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். செம்மர கடத்தலை விசாரிக்கும் போலீஸ் வலையில் சிக்கிய நீத்து அகர்வால் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
கடத்தல் புள்ளிகளின் வலையில் சினிமா நடிகைகள் வீழ்ந்து வாழ்வை தொலைப்பது இது புதிதல்ல.
அழகும், இளமையும் இருக்கும் வரைதான் மார்கெட். அதன் பிறகு சீண்டுவார் இருக்காது என்பது நடிகைகள் உணர்ந்த பாலப்பாடம். எனவே மார்கெட் இருக்கும்போதே எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தோடு இருப்பார்கள். அதை குறி பார்த்து அடித்து வீழ்த்துவதில் இந்த பணம் கொட்டும் பெரும்புள்ளிகள் கெட்டிக்காரர்கள்.
கடத்தல் என்றால் நினைவுக்கு வருவது மஸ்தான் மட்டும்தான். மும்பையை கலங்கடித்த முதல் தமிழ் தாதா இன்றும் யாராவது தவறு செய்து விட்டால் நீ பெரிய மஸ்தானா? என்று கேட்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அந்த மஸ்தானை நாம் பார்த்திருக்கா விட்டாலும் பெயர் பரிச்சயமாகி விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த மஸ்தான் குடும்பம் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடியது. எனவே 1934–ல் குடும்பத்தோடு மும்பைக்கு குடிபெயர்ந்தனர்.
கிராபோர்டு மார்கெட் பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து தினமும் ரூ.5 சம்பாதித்தார். தொடர்ந்து கார் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டார். அப்போது கடத்தல் தொழிலில் ஈடுபட்ட சுகுர் நாராயண பாக்யா என்பவரது நட்பு கிடைத்தது. மஸ்தானும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டார். காலப்போக்கில் குருவை மிஞ்சினார் சிஷ்யன். உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலில் தங்கம் கடத்தி மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார்.
மஸ்தானின் பண பலமும், அரசியல் செல்வாக்கும் அவரை மேலும் மேலும் கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறக்க வைத்தது. மும்பையில் சின்ன குழந்தையும் மஸ்தான் பெயரை கேட்டால் ‘கப்சிப்’ என்றாகிவிடும்.
மஸ்தானும் கடத்தலில் குவிந்த பணத்தை இந்தி திரை உலகில் வாரி இறைத்தார். இதனால் பாலிவுட் திரை உலகிலும் மஸ்தான் பிரபலமானார்.
இந்தி திரை உலகில் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை சோனாவை தனது மனைவியாக்கி கொண்டார். இந்தியா முழுவதும் கடத்தல் மன்னன் என்று அறியப்பட்ட மஸ்தான் காதலிலும் மன்னனாகவே வலம் வந்தார். தமிழ் திரை உலகிலும் பிரபல நடிகை ஒருவரை அவரோடு இணைத்து அந்த காலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
மும்பையில் மக்களின் மதிப்பை பெற்ற தாதாவாக வலம் வந்த அவரை எமர்ஜென்சி காலகட்டத்தில் (1975–77) கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அப்போதுதான் இந்தி மொழியை கற்றுக் கொண்டார். மஸ்தானின் வாழ்க்கை பயணம் 1994–ல் திடீரென்று முடிந்தது.
கொட்டிய அருவி நீரில் மெல்லிய வெள்ளுடை… மின்னிய தேகத்தில் கெட்டியாய் ஒட்டிக் கொள்ள மந்தார பூவாய் மயக்கிய கனவு நாயகி மந்தாகினி சினிமா ரசிகர்களின் இதயத்தை விட்டு அவ்வளவு எளிதில் மறையமாட்டார்.
ராம்தேரி கங்கா மைலி என்ற படத்தில் 16 வயது பருவசிட்டாய் அவர் வந்து மயக்கிய காட்சிகள் இரண்டு. அதில் இன்னொன்று குழந்தைக்கு பாலூட்டும் காட்சி. படு கவர்ச்சியாய் ரசிகர்களுக்கு விருந்தளித்த மந்தாகினியும் பின்னாளில் மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன், மிகப்பெரிய மாபியா கும்பல் தலைவன் தாவூத் இப்ராகிமுக்கு விருந்தானார்.
தாவூத் இப்ராகிமை உலகமே பூதக்கண்ணாடி போட்டு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் கருப்பு கண்ணாடியில் கலக்கலாய் தாவூத் இப்ராகிம் அமர்ந்திருக்க அவர் அருகே கொஞ்சியபடி மந்தாகினி அமர்ந்து இருந்து அரபு நாட்டில் கிரிக்கெட்டை ரசித்த காட்சி 1994–ல் வெளியான போது நாடு முழுவதும் பரபரப்பானது. போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட மந்தாகினி தீவிரமாக விசாரிக்கப்பட்டார். ஆனால் தாவூத் மட்டும் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார்.
தாவூத்தின் மற்றொரு கூட்டாளி அபுசலீம். இவரது காதலி பிரபல இந்தி நடிகை மோனிகாபெடி. வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களில் மோனிகா அபுசலீமுடன் காதல் தொடர்பு மட்டும் வைத்திருந்ததால் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அபுசலீம் சிறையில் இருக்கிறார்.
இப்படி சமூக விரோத கும்பல்கள், தீவிரவாதிகள், கடத்தல் பேர்வழிகளிடம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த திரை உலக நாயகிகள் சிக்கி சீரழிவதுதான் அவலம்.
காசு, பணம், துட்டு, மணி….. மணி….
Average Rating