மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). டிப்ளமோ படித்து விட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 26–ந்தேதி மணப்பாறை பூச்சொரிதல் விழா அன்று உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் முத்துக்குமாருக்கும் வேறு யாருக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மணப்பாறை பெஸ்டோ நகர் பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவருக்கும், முத்துக்குமாருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மோட்டார் சைக்கிள்களில் மோதிக்கொண்டதில் முன் விரோதம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அருண் பாண்டியனை போலீசார் பிடித்து விசாரணை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தது தெரிய வந்ததால் அவர்தான் கொலை செய்திருப்பார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சம்பட்டி என்ற இடத்தில் அருண்பாண்டியன் உள்பட 4 பேர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் ராஜராஜன், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் மஞ்சம்பட்டிக்கு விரைந்து சென்று 4 பேரையும் பிடித்து வந்து மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தான் முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:– கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருண்பாண்டியன்–முத்துக்குமார் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். ஆனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவும் இல்லை. அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கலைந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் முத்துக்குமாரை எப்படியாவது தாக்கிட வேண்டும் என்று முடிவு செய்து பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. இருப்பினும் கடந்த 26–ந்தேதி பூச்சொரிதல் விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துக்குமார் செய்து கொண்டிருந்தார். அப்போது அருண்பாண்டியன் (19) மற்றும் அவனது தம்பி அலெக்ஸ் குமார் (18), நண்பர்கள் அண்ணாவி நகரைச்சேர்ந்த கார்த்திக் (20), பாலாஜி (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்துக்குமாரை இடிப்பது போன்று சென்று அருகில் நிறுத்தி உள்ளனர்.
இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் நான்கு பேரையும் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் முத்துக்குமாரை கொலை செய்திட முடிவு செய்து அதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் பூச்சொரிதல் விழா முடிந்து முத்துக்குமார் அவரது நண்பர்கள் விக்னேஷ், ஹரிகிருஷ்ணன் மற்றும் வடக்கிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி ஆகியோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மாரியம்மன் கோவில் மண்டபம் அருகே சென்ற போது உருட்டுக்கட்டை மற்றும் தடியுடன் வந்த அருண் பாண்டியன், அலெக்ஸ் பாண்டியன், கார்த்திக், பாலாஜி மற்றும் சிலர் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரா மறியாக தாக்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதில் முத்துக்குமார் இறந்து விட்டார். இந்த தகவலை அறிந்ததும் கொலையாளிகள் மணப்பாறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் அருண்பாண்டியன், கார்த்திக், பாலாஜி ஆகியோரை மே 11 ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் அலெக்ஸ் குமார் மட்டும் மைனர் என்பதால் திருச்சி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த கொலை சம்மந்தமான வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating