“செக்ஸ் சாமியார்” எனும், ஆன்மீக குருவான பிரேமானந்தா சுவாமியின் சீடர்களை விடுவிக்க கோரி, வம்பில் மாட்டிக் கொண்ட “வடமாகாண முதல்வர்”..!! (கட்டுரை)!
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்… – மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கடிதமொன்றை (15.03.2014)அண்மையில் அனுப்பி வைத்திருக்கின்றார்.
அவரது அரசியல் வருகையின் போது அவர் மெத்தப்படித்த நீதிமான் என்று எல்லோரும் நம்பினர். பாழ்பட்டுகிடக்கும் சாமானிய மக்களின் வாழ்வில் பால் வார்ப்பார் என்று 132255 மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
அவரோ முப்பது வருட யுத்தத்துக்கு பின்னர் உருவான ஒரேயொரு தீர்வான மாகாணசபையினை சேடமிளுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு தன் ஆன்மீக குருவான பிரேமானந்தா என்னும் பாலியல் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகளுக்கு பஜனை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.
இதன்காரணமாகவே “பிரேமானந்த ஆச்சிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆசாமிகளை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடித்தத்தினை எழுதியுள்ளார்.
பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்த பாலேந்திரன சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு அவர் பிரதமரை கேட்டுள்ளார். பிரேமானந்தா ஆசிரமத்தையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால் அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில் அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு பாலியல் வன்புணர்வு, படுகொலை குற்றவாளி என்பதுபற்றி அவர் ஒருபோது வெட்கப்பட்டது கிடையாது .மாறாக அதையிட்டு முதலமைச்சர் பெருமை கொண்டே வந்திருக்கின்றார்.
ஆன்மீக தேடல் என்பது அவரவர் உரிமையே என்றாலும் கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் வன்புணர்வுகளிலும் படுகொலைகளிலும் ஈடுபடும் இதுபோன்ற சமூகவிரோத பாதாள கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பதையிட்டு அவர் ஒருபோதும் மனம் வருந்தியது கிடையாது. இது பற்றி அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியுமே நாணி தலை கவிழ வேண்டும்.
பற்றற்றவனே துறவியாவான் என்பர் முன்னோர். ஆனால் வெளிநாடுகளில் பலகோடி கறுப்பு பணங்களை முதலிட்ட சர்வதேச மாபியா பிரேமானந்தாவை நமது முதலமைச்சர் துறவி என்று கொண்டாடுகின்றார்.
1997ல் பிரேமானந்தாவுக்கு தீர்ப்பு வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம் அவன் மீதான குற்றப்பட்டியலில் இந்த பண மோசடிகள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளமை முக்கியமானதொன்றாகும்.
ஒரு சந்நியாசிக்கு ராம் ஜெத்மலானி போன்ற கோடிக்கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர்கள் இலவசமாகவா வாதாட முன்வருவர்? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? இவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?
தற்போது சிறையில் வாடும் பிரேமானந்தாவின் சகபாடிகள் மீண்டும் வெளியே வரவேண்டுமாம் ஆச்சிரமத்தின் சொத்துக்களை பராமரிக்க ஆள்தேவையாம் என்பதே முதலமைச்சரின் வேண்டுகோளுக்கான கவலையாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வடமாகாணத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய 1500 கோடி ரூபாயில் பாதிக்கு மேல் மாகாண சபையின் செயலூக்கமற்ற தன்மையினால் திரும்பி செல்வது பற்றி முதல்வருக்கு ஒருபோதும் கவலையில்லை.
இலங்கையில் உரிய விசாரணைகளோ, தீர்ப்புகளோ இன்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் இந்த ஏன் முதல்வர் அக்கறை செலுத்துவதில்லை? இவர்களின் உறவினர்கள் எத்தனையோ பேர் தினம் தினம் உங்களை வந்து சந்தித்து கொண்டு தானே இருக்கின்றனர்?
காணாமல் போனோருக்காகவும் சிறையில் வாடுவோருக்காகவும் நாளும் பொழுதும் நடைபெறும் உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் உங்கள் ஆன்மீக நிஷ்டையை ஒருபோதும் குலைப்பதில்லையா?
அவர்களுக்காக நீங்களும் உங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நல்லாட்சி வேண்டி தேர்ந்தெடுத்த ஜனாதிபதியிடம் ஒரு தீர்க்கமான வேண்டுகோளை இதுவரை விடுத்தீர்களா?
ஏன் இந்தியாவில கூட எத்தனையோ ஈழத்தமிழர்கள் புலிகள் என்னும் சந்தேகத்தில் சிறையில் வாடுகின்றார்களே? அதைப்பற்றி அவர்களின் விடுதலை பற்றி மோடிக்கு ஏன் ஒரு வேண்டுகோளை விடுக்கவில்லை? இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா?
இப்படி எத்தனையோ ஈழத்தமிழர் சிறையில் வாட உங்கள் அவதானம் மட்டும் இந்த கிரிமினல்களை நோக்கி திரும்புவதன் காரணம் யாது? இதற்காகவா இவரை முதல்வராக எமது மக்கள் தெரிவு செய்தனர்? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பாவது உங்களை தட்டிக்கேட்காதா?
மோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பிபிசிக்கு அவர் அளித்த விளக்கத்தில் சிறையிலிருப்பவர்கள் மூவரும் வடமாகாண பிரசைகளாம் என்று அக்கறைப்பட்டார். ஆனால் இந்த பிரேமானந்தா ஆச்சிரமத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பதின்மூன்று அபலை பெண்களும் கூட அதே வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் தானே?
பெண்கள் என்றால் அப்படித்தான் அவர்கள் எங்களது பாலியல் சொத்துக்கள் என்கின்ற மன உணர்வுக்கு நெருக்கமானவர்தான் நமது முதலமைச்சர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டல் தகும் என எண்ணுகின்றேன். அவரது உரைகளும் பேச்சுகளும் எப்போதும் பெண்களை கொச்சைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கும்.
நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்படியிருந்தன. இது நிர்ப்பந்த திருமணம் ஆனாலும் விரும்ப பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தத் தானே வேண்டும்” இப்படி பெண்களை பாலியல் பண்டங்களாக அவர் கிளுகிளுப்பாகவே வர்ணிப்பதை அவரது பேச்சுகளில் தாராளமாக காணலாம். முதல்வரின் பேச்சினை அடிக்கடி அவதானித்தால் நான் சொல்லவருவது மிகைப்படுத்தல் அல்ல என்பதை உணரலாம்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலமைச்சர் நடத்திய நடமாடும் சேவையை புறக்கணித்த அவரது அதிகாரிகளையிட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையை பாருங்கள்
“இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது. அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும் கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.
கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்துங்கள் எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்”.
இந்த உரை முதலில் பெண்களை இழிவுபடுத்தும் கயமைத்தனமான உரையாகும் அரசியல் தலைவர்களே இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் வைத்து உரையாற்றினால் பெண்கள் எப்படி சமுகத்தில் மதிக்கப்படுவர்? பெண்கள் வாழ்வு எப்படி மேம்படும்?
கடந்த வருடம் கூட முதலமைச்சர் இந்தியா சென்றபோது இந்த பிரேமானந்தாவின் ஆச்சிரமத்துக்கு சென்று அக்குள்ள பிரேமானந்தாவின் சமாதியை வணங்க தவறவில்லை .கடவுளை வணங்குவதே ஒரு முட்டாள்தனம் என்பார் ஈ.வே.ரா.பெரியார்.
ஆனால் நாமோ நமது சமூகத்தை இழிவுபடுத்தி பெண்களை மானபங்கப்படுத்தி கொலைகளை செய்து ஆச்சிரமத்துக்குள்ளே புதைக்கும் கயவர்களை வணங்கும் மனிதர்களை புத்திசாலிகள் என்று கொண்டாடுகின்றோம்.
இந்தியாவில் இந்த பஞ்சமா பாதகங்களை எல்லாம் செய்து வரும் பிரேமானந்தா ஆச்சிரமத்தினர் இலங்கையிலும் தமது கிளை ஆச்சிரமங்களை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
முறிகண்டி பகுதியில் அதற்கான இடமொன்றை முதலமைச்சர் ஒதுக்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் தப்பி உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழ்விழந்து நாதியற்று நிற்கும் எமதுமக்களே இந்த ஆசாமிகளின் இலக்கு ஆகும்.
பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளையும், இளம் விதவைகளையும் நோக்கி ஆச்சிரமங்கள் வாழ்வாதார உதவித்திட்டங்கள் என்னும் பெயர்களில் இந்த ஆன்மீக வேடதாரிகள் வலைவிரிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கூடாது.
–மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்–
Average Rating