கலசபாக்கம் அருகே காதல் தகராறில் வாலிபர் எரித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கோவில்மாதி மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
ஜெயக்குமாரும், கோவில்மாதி மங்கலம் கிராமம் அருகே உள்ள பூலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகளும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவர பெற்றோர் கண்டித்தனர்.
மேலும் இதுதொடர்பாக இரு குடும்பத்துக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது இளம்பெண்ணின் தந்தை ராஜா, ஜெயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயக்குமார் திடீரென மாயமாகி உள்ளார். ஜெயக்குமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரை ராஜா கடத்தி சென்று இருக்கலாம் என ராஜேந்திரன் கடலாடி போலீசில் புகார் அளித்தார்.
மாயமான ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணின் தம்பி ராமு என்கிற ராமன், அவரது நண்பர்கள் கோபி, செல்வநாயகம் ஆகியோர் நேற்று செஞ்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.
அப்போது அவர்கள் 3 பேரும், காதல் தகராறில் ஜெயக்குமாரை எரித்து கொன்றதாக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போளூர் டி.எஸ்.பி. கணேசன், கடலாடி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் மோப்பநாய் ராம்போவுடன் மேல்படூர் காட்டு பகுதிக்கு சென்றனர். அங்குள்ள தாதன்குட்டை பகுதியில் புதரில் முகம் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஜெயக்குமார் கொலையானதை அறிந்த அவரது உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் ஜெயக்குமாரின் பிணத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஜெயக்குமாரின் பிணம் அனுப்பி வைக்கப்பட்டது.
செஞ்சி கோர்ட்டில் ஆஜரான ராமுவை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த கொலையில் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்யக் கோரி, ஜெயக்குமாரின் உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டோர் கோவில்மாதி மங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
Average Rating