பாக். திரும்பினார் பெனாசிர்-ஆயிரக்கணக்கானோர் வரவேற்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டு வெளிநாட்டு வாசத்திற்குப் பின்னர் இன்று பாகிஸ்தான் திரும்பினார். கராச்சி விமான நிலையத்தில் பெரும் திரளானோர் கூடி அவரை வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கிய பெனாசிர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க காணப்பட்டார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு முஷாரப் ஆட்சியைப் பிடித்தவுடன் பெனாசிர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் லண்டனிலும், துபாயிலுமா கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார் பெனாசிர். இந்த நிலையில் முஷாரப்புக்கும், பெனாசிருக்கும் இடையே, அதிபர் தேர்தலையொட்டி சில சமரசப் பேச்சுக்கள் நடந்தன. அதில் சில உடன்பாடுகளும் ஏற்பட்டன. இதையடுத்து நாடு திரும்ப தீர்மானித்தார் பெனாசிர். நாடு திரும்புவதை சற்று தாமதப்படுத்துமாறு முஷாரப் தரப்பில் பெனாசிருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் அதை பெனாசிர் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி நாடு திரும்புவேன் என்று கூறியிருந்தார் அவர். அதன்படி இன்று அவர் பாகிஸ்தான் திரும்பினார். பெனாசிர் வருகையெயாட்டி கராச்சி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெனாசிரின் உருவப் படங்கள், தோரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்க துபாயிலிருந்து கராச்சிக்கு வந்து சேர்ந்தார் பெனாசிர்.
விமானத்திலிருந்து வெளியே வந்த அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் கைகளை கூப்பி கடவுளுக்கு நன்றி சொல்லியபடி கண்ணீரைத் துடைத்துக் ெகாண்டு விமானத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது அவர் பேசுகையில், அற்புதங்களின் மீது எனக்கு நம்பிக்ைக உண்டு. நான் நாடு திரும்பியதும் கூட ஒரு அற்புதம்தான் என்றார் பெனாசிர்.
பெனாசிருடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் மக்தூம் அமீன் பாஹிம், நஹீத் கான், ரஹ்மான் மாலிக், சனம் பூட்டோ, லைலா உள்ளிட்ேடாரும் உடன் வந்தனர். கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் வந்தனர். கராச்சி நகரே விமான நிலையத்திற்குத் திரண்டு வந்தது போல விமான நிலையத்திற்கு வெளியே மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.
பெனாசிர் உயிருக்கு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் மூலமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்திய நேரப்படி கராச்சி விமான நிலையத்திற்கு பெனாசிர் பயணித்த விமானம் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தது. குண்டு துளைக்காத வாகனத்தில் அங்கிருந்து பெனாசிர் அழைத்துச் செல்லப்பட்டார். நேராக ஜின்னா நினைவிடம் அமைந்துள்ள பிலவல் ஹவுஸிற்கு அவர் செல்கிறார்.