8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்!!
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா சாலுஹூனிசே கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரியம்மா. இந்த தம்பதிக்கு ராதா (வயது 7) என்ற மகள் இருக்கிறாள். பிறக்கும்போது ராதா நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தாள். இந்த நிலையில் ராதாவை மர்ம நோய் தாக்கியது. அதனால் அவளது தலை மற்றும் உடலில் பிறந்த 3 மாதங்களில் இருந்து மாற்றம் ஏற்பட தொடங்கியது. அதாவது நாளுக்கு நாள் ராதாவின் தலை பெரிதாகி எடை அதிகரித்ததோடு, அவளது உடல் மெலிந்து கொண்டே சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாவின் பெற்றோர் அவளை தங்கள் கிராமத்தின் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனால் அனைத்து ஆஸ்பத்திரி டாக்டர்களும் ராதாவை சோதனை செய்துவிட்டு, அவளது தலையில் நீர் அதிகளவில் சேர்ந்து வருகிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், ஈரண்ணா-காயத்ரியம்மாவின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பதாலும், பொருளாதார வசதியின்மையாலும் அவர்கள் தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வரவில்லை. இதனால் தற்போது 7 வயது நிரம்பிய ராதாவுக்கு அவளது தலை உடல்பகுதியை காட்டிலும் அளவில் பெரிதாகவும், 8 கிலோ எடையுடனும் உள்ளது. இதனால் அந்த சிறுமி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடி வருகிறாள்.
ராதாவிற்கு சிறு வயதில் இருந்ததை விட தற்போது தலையின் அளவு தொடர்ந்து பெரிதாகி வருகிறது. மேலும் தங்களின் குழந்தையின் நோய் குணமாக வேண்டும் என ஈரண்ணா-காயத்ரியம்மா தம்பதி பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளுடன் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால், சிறுமியின் நோய் இன்னும் குணமாகவில்லை. இதனால் ஈரண்ணா-காயத்ரியம்மா தம்பதி பெரும் மன வருத்தத்தில் உள்ளனர். மேலும் ராதாவின் வயதுடைய சிறுமிகள் சாலையோரம் ஓடி, ஆடி விளையாடுவதை பார்க்கும் ஈரண்ணா-காயத்ரியம்மா தம்பதியினர் தனது மகளால் நடக்க முடியவில்லை என நினைத்து தினமும் கண்ணீர் சிந்தும் காட்சி கல்மனதையும் கரைய வைப்பதாக உள்ளது.
இருப்பினும் தற்போது சிறுமி ராதாவுக்கு சித்ரதுர்காவில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்கள் சிறுமிக்கு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் குணமாகும் என ராதாவின் பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதற்கு ஈரண்ணா-காயத்ரியம்மா பதில் அளிக்கையில், ‘தினமும் கூலி வேலை செய்து நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இப்படி இருக்கும்போது ராதாவின் அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவழிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ராதா எவ்வளவு காலம் வரை உயிரோடு இருப்பாளோ அவ்வளவு நாள் உயிருடன் இருக்கட்டும்’ என கூறியுள்ளனர். மேலும் அவர்கள், எங்கள் மகள் நோய் குணமாகி உயிரோடு இருக்க மாநில அரசு கருணை காட்டி நிதி உதவி அளித்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
Average Rating