ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 விடுதலைப் புலிகள் பலி; ராணுவ வீரர்கள் 9 பேர் சுட்டுக் கொலை
இலங்கையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 34 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 9 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். நேற்று முன்தினம் மாலை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் ராணுவம் பெரும் படையுடன் நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தியது. முதலில் ராணுவ வீரர்கள், வன்னி பகுதியில் உள்ள முல்லைக்குளம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்த பல்வேறு நிலைகளுக்கு முன்னேறிச் சென்று தீவிர தாக்குதலைத் தொடுத்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் நீண்ட நேரம் நடந்த சண்டையில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். 7 பேர் படுகாயமடைந்தனர். சண்டைக்குப் பின் நடந்த தேடுதல் வேட்டையின்போது, 5 பெண் விடுதலைப்புலிகள் உள்பட 7 பேர் அங்கு இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் சண்டை நடந்த இடத்திலிருந்து 6 எந்திர துப்பாக்கிகளையும், பல்வேறு பயன்பாடு கொண்ட எந்திர துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதேபோல் யாழ்ப்பாணம் அருகே முகமலை என்னுமிடத்தில் ராணுவம் நடத்திய மற்றொரு தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்து கைத்துப்பாக்கி, வெடிபொருட்கள் போன்ற ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மற்றொரு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேர் படுகாயமடைந்தார்கள். மேற்கண்ட தகவலை இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்காரா தெரிவித்தார். இந்த சண்டை குறித்து விடுதலைப்புலிகள் கூறும்போது, `தங்களது தரப்பில் 20 புலிகள் வீரமரணம் அடைந்ததாகவும், 15 பேர் காயமடைந்தாகவும்’ தெரிவித்தனர்.
இலங்கையின் தென் கிழக்கில் உள்ள தல்காஸ்மாண்டா பகுதியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் யாலா என்னும் புகழ்பெற்ற உயிரியல் பூங்கா இருக்கிறது. இதன் அருகில் பனாமா என்னுமிடத்தில் ராணுவம் முகாம் ஒன்றை அமைத்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலை விடுதலைப் புலிகள் இந்த முகாம் மீது பயங்கர தாக்குதலை நடத்தினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த தகவலையும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்காரா வெளியிட்டார்.
தேடுதல் வேட்டை
மேலும் அவர் கூறுகையில், “பலியான உடல்களை நேற்று காலை ராணுவ வீரர்கள் ஒரு டிராக்டரில் மீட்கச் சென்றனர். அப்போது, விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தார்கள். தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளை பிடிக்க ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது” என்றார்.