புத்திசாலியான இளைய மகனின் ரத்தத்தை மூத்த மகனுக்கு செலுத்த முயன்ற கொடூரம் : விபரீத செயலில் ஈடுபட்ட டாக்டர் தம்பதி கைது
புத்திசாலி இளைய மகனின் ரத்தத்தை சராசரி அறிவுள்ள மூத்த மகனுக்கு செலுத்தினால் அவனும் புத்திசாலியாகிவிடுவான் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டாக்டர் தம்பதியின் குடும்பத்தில் புயல் வீசிவிட்டது. இதில், இளைய மகன் இறந்து விட் டான். மூத்த மகனும், தாயும் படுகாயம் அடைந்தனர். விபரீத செயலில் ஈடுபட்ட டாக்டர் தம்பதி கைது செய்யப் பட்டனர். அரியானா மாநிலம் ரோடக் நகரை சேர்ந்தவர் அசோக் மாலிக். இவரது மனைவி பிரமீளா மாலிக். இருவரும் டாக்டர்கள். இவர்களது மூத்த மகன் அபிஷேக் (18); இளைய மகன் பியூஷ். இதில், அபிஷேக் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இளைய மகன் பியூஷ் பள்ளியில் படித்து வருகிறார்; மிகவும் புத்திசாலி. இவர்களது வீடு ரோடக் நகரில் உள்ள பி.ஜி.ஐ. எம்.எஸ்., மருத்துவமனை வளாகத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் வினோத சம்பவம் நடந்ததாக தகவல் வெளியானது. உடனடியாக அந்த வீட்டுக்கு சென்ற போலீசார், அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இளைய மகன் பியூஷ், ரத்த வெள் ளத்தில் மிதந்தபடி இறந்து கிடந்தார். பிரமீளா மாலிக்கும், அபிஷேக்கும் படுகாயத்துடன் காணப் பட்டனர். அந்த இடத்தில் கடுகு இறைக்கப் பட்டும், கெரசின் தரையில் கொட் டப்பட்டும் இருந்தது. ஊதுபத்திகள் ஏற்றப்பட்டு இருந்தன. புகை மூட்டமாக காணப்பட்டது. பக்கத்திலேயே தீப்பெட்டிகளும் காணப்பட்டன.
நடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கிய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அந்த தகவல்கள் வருமாறு:அபிஷேக் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என டாக்டர் தம்பதிக்கு தணியாத ஆசை. ஆனால், படிப்பில் மிகவும் சராசரி என்பதில் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. பிரமீளா மாலிக்குக்கு மாந்திரீகம் மீது நம்பிக்கை உண்டு.
மூத்த மகன் பற்றிய கவலையுடன் அவர் ஒரு நாள் படுத்து உறங்கிய போது கனவில் ஆன்மிக குரு வந்தார். “படிப்பில் சுட்டியாக விளங்கும் இளைய மகன் பியூஷ் ரத்தத்தை மூத்த மகன் அபிஷேக் உடலில் செலுத்தினால், அவனும் படிப்பில் சுட்டியாகி விடுவான். ரத்த மாற்றம் நடக்கும் போது தரையில் திரவ பொருளை ஊற்றி வைக்க வேண்டும். அந்த இடம் முழுக்க புகையால் சூழப்பட்டு இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார். கனவில் கண்டதை உண்மை என நம்பிய பிரமீளா மாலிக், அதை நிறைவேற்றவும் முயன்றார்.
ஆனால், நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட தவறினால், ரத்தக் கசிவு அதிகளவில் ஏற்பட்டு, இளைய மகன் பியூஷ் இறந்து விட்டான். மூத்த மகன் அபிஷேக்குக்கும், பிரமீளாவுக்கும் எப்படி காயம் ஏற்பட்டது என்பது தான் போலீசாருக்கு புரியவில்லை. முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் தன்னையும், தாயையும் தாக்கியதாக அபிஷேக் கூறியதை போலீசார் நம்பவில்லை.
தண்டணை : இந்த வினோதமான ரத்த மாற்று முயற்சி பற்றி அசோக் மாலிக்குக்கு தெரியும். ஆனால், சம்பவம் நடக்கும் போது அவர் வீட்டில் இல்லை. டில்லி சென்று விட்டார். வீட்டில் நடந்த சம்பவங்களை 14 வயது பணியாள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தி கொண்டனர். பின்னர், பிரமீளா மீது இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவின்( மரணத்துக்கு காரணமாக இருத்தல்) கீழும், அசோக் மாலிக் மீது 120பி பிரிவின்( கிரிமினல் குற்றத்துக்கு துணையாக இருத்தல்) கீழும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பிரமீளாவும், அபிஷேக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர் தந்தை அசோக் மாலிக், போலீஸ் காவலில் உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.