ஆண்களுக்கு நிகராக மின்கம்பம் ஏறும் 3 குழந்தைகளின் தாய்: கடின உழைப்பால் மின்வாரிய ஊழியர் ஆனார்!!
விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமராயப்பா. விவசாயி. இவரது மனைவி ஷோபா ரெட்டி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷோபா ரெட்டி தொழிற்பயிற்சி கல்லூரியில் எலெக்டரீக்கல் பாடப்பிரிவை படித்து முடித்து உள்ளார்.
திருமணம் ஆன புதிதில் தனது கணவருடன் விவசாயத்தில் ஷோபா ரெட்டி ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், திடீரென்று அவருக்கு கர்நாடக மின்வாரிய அலுவலகத்தில் எப்படியாது பணியில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் அவர் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து மின்வாரிய ஊழியர் பணிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
அதாவது தனது கணவருடன் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் அவர் தனது தோட்டங்களில் உள்ள மின்கம்பங்களில் வேகமாக ஏறி, இறங்குவது, மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவது என்பன போன்ற பணிகளில் ஈடுபட்டு தனது திறமையை கூர்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மெஸ்காம்’ மின்வாரிய அலுவலகத்தின் லைன்மேன் பணிக்கு தேர்வு நடைபெற்றது. மின்கம்பத்தில் வேகமாக ஏறி, இறங்குதல், எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு உள்பட 4 வகையான தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் தான் லைன் மேனாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் ஷோபா ரெட்டி கலந்து கொண்டார். முதலில் நடந்த மின்கம்பம் ஏறி இறங்கும் தேர்வில் ஆண்களுக்கு நிகராக ஷோபா ரெட்டி வேகமாக செயல்பட்டு அதிகாரிகளின் கவனத்தை தன்பக்கம் இழுத்தார். அதைத்தொடர்ந்து நடந்த எழுத்து, நேர்முகம் உள்பட 3 தேர்வுகளிலும் ஷோபா ரெட்டி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று ‘மெஸ்காம்’ அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி ஷோபா ரெட்டிக்கு மங்களூரு ‘மெஸ்காம்’ மின்வாரியம் அதிகாரிகள் பணி ஆணைய கடிதத்தை கொடுத்தனர். அதில் ஷோபா ரெட்டி சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா அனவட்டி கிராமத்தில் உள்ள ‘மெஸ்காம்’ அலுவலகத்தில் உதவி லைன்மேனாக பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
ஷோபா ரெட்டியின் விடா முயற்சி கடின உழைப்பு காரணமாக அவருக்கு இந்த பணி கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி ஷோபா ரெட்டி அனவட்டி கிராமத்தில் உள்ள ‘மெஸ்காம்’ அலுவலகத்தில் லைன்மேன் உதவியாளராக பணியில் சேர்ந்து கொண்டார். மேலும் தனது குடும்பத்துடன் அவர் அனவட்டி கிராமத்தில் குடியேறினார். முதற்கட்டமாக ஷோபா ரெட்டி அனவட்டி ‘மெஸ்காம்’ அலுவலகத்திற்கு உட்பட்டு உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று மின்கட்டணம் வசூலிக்கும் பணி மற்றும் மின்கட்டணம் செலுத்த தவறியவர்களின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கும் பணி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
ஷோபா ரெட்டி குறித்து ‘மெஸ்காம்’ மின்வாரிய தேர்வுகுழு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேன் பணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் தேர்வாளர்களுக்கு மின்கம்பத்தில் ஏறி இறங்குதல், எழுத்து தேர்வு உள்பட 4 வகையான தேர்வுகள் நடத்தப்படும். இதில் மின்கம்பம் ஏறி இறங்கும் தேர்வு முக்கியமானது. இந்த தேர்வு உள்பட 4 தேர்வுகளிலும் ஷோபா ரெட்டி சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததோடு வெற்றியும் பெற்றார். ஷோபா ரெட்டி உண்மையில் மிகவும் திறமையான வீரமங்கை தான்’ என்றார்.
Average Rating