பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!
பெண்ணாடம் அருகே கூடலூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவரது மனைவி செல்வராணி (30). இவர்களுக்கு பிரியதர்சினி (6), ரம்யா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
பிரகாஷ் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். செல்வராணி தனது மகள்களுடன் கூடலூர் காலனியில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு செல்வராணி தனது மகள்களுடன் வீட்டில் தூங்கினார். நேற்று காலை வெகுநேரமாகியும் செல்வராணியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. ஆனால் வீட்டில் குழந்தைகள் அழும் சத்தம் வந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் செல்வராணி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கும், சென்னையில் உள்ள செல்வராணியின் கணவர் பிரகாசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆவினங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்வராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் கிருஷ்ணமூர்த்தி (25) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு செல்வராணி வீட்டுக்கு கிருஷ்ணமூர்த்தி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் செல்வராணியை தாக்கி அவரது முகத்தில் தலையணையை அமுக்கி கிருஷ்ணமூர்த்தி கொலை செய்தார். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று மாலை அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் செல்வராணியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது:–
பிரகாஷ் எனக்கு உறவினர் ஆவார். எனக்கு அண்ணன் முறையான பிரகாஷ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். அப்போது பிரகாசின் மனைவி செல்வராணியிடம் பேசி பழகி வந்தேன். பிரகாஷ் சென்னையில் தங்கி வேலை செய்து வந்ததால் செல்வராணிக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது செல்வராணியின் வீட்டுக்கு சென்று அவருடன் ஒன்றாக இருப்பேன்.
அதுபோல் நேற்று முன்தினம் இரவு செல்வராணியின் வீட்டுக்கு சென்றேன். அப்போது செல்வராணி தனது குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
செல்வராணியை தட்டி எழுப்பி ஆசைக்கு இணங்க அழைத்தேன். ஆனால் செல்வராணி வர மறுத்தார்.
இதனால் செல்வராணியை அடித்து உதைத்தேன். இதில் செல்வராணி முகத்தில் காயம் அடைந்தது. எனினும் எனக்கு ஆத்திரம் தீரவில்லை. அருகில் கிடந்த தலையணையை எடுத்து செல்வராணியின் முகத்தில் வைத்து அமுக்கி அவரை கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் கண்டறிந்து என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
Average Rating