ஆண் குழந்தை மோகத்தால் தாய்ப்பால் கொடுக்காமல் பிறந்த பெண் குழந்தையை சாகவிட்ட தாய்!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 2 பெண்களுக்கும் ஒரே பெயர் ஜி.அனிதா, கே.அனிதா. வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள்.
கடந்த வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு ஒரு பெண்ணுக்கும், 2.10 மணிக்கு இன்னொரு பெண்ணுக்கும் பிரசவம் நடந்தது. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்ததால் 2 பெண்களும் மயக்க நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் ஜி.அனிதாவின் உறவினர்களிடம் மருத்துவமனை ஆயா வந்து உங்கள் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என்றார். இதனால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை பயன்படுத்தி மகிழ்ச்சியான தகவலை சொன்னதற்காக எனக்கு ரூ.1000 கொடுங்கள் என்றார்.
ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஜி.அனிதா குடும்பத்தினர் ஆயாவுக்கு ரூ.600 கொடுத்தனர்.
ஆனால் உண்மையில் ஜிஅனிதாவுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. கே.அனிதாவுக்குதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது ஆயாவுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. செய்த தவறை வெளியில் காட்டிக் கொள்ளால் ஆயா நகர்ந்து விட்டார்.
ஜி.அனிதாவை பார்க்க வந்த உறவினர்கள் அவரது அருகில் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆயா கேட்ட ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் ரூ.600 கொடுத்ததால் அவர் தான் குழந்தையை மாற்றி வைத்து விட்டார் என்று சந்தேகப்பட்டனர்.
இதனால் அவர்கள் ஆயாவிடம் தகராறு செய்தனர். மயக்கம் தெளிந்த ஜி.அனிதாவும் இதனை உண்மை எனக் கருதி ‘ஓ…’ வென்று அழுது புலம்பினார். பூதகரமாக வெடித்த இந்த பிரச்சினை மருத்துவமனை அதிகாரி காதுகளுக்கும் சென்றது.
அவர் டாக்டரிடம் விசாரணை நடத்தினார். அதில் ஜி.அனிதாவுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது என்பதை உறுதி செய்து உறவினர்களிடம் எடுத்து கூறினார். ஆனால் அதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். பெண் குழந்தையையும் வாங்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே பிறந்த பெண் குழந்தைக்கு சிறு குடலில் பிரச்சினை இருப்பதை குழந்தைகள் நல மருத்துவர் கண்டு பிடித்தார். அதற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து குழந்தையின் தாய் ஜி.அனிதாவிடம் கையெழுத்து வாங்கினர். கையெழுத்தை போட்ட பின்பும் குழந்தையை ஏற்க மறுத்தார். அதற்கு பால் கொடுக்கவும் மறுத்தார்.
இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை மோசமானது. சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. பிணத்தை வாங்கவும் ஜி.அனிதா மற்றும் அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லபட்டது.
இது குறித்து ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி கூறும் போது, ‘‘ரத்த பரிசோதனை மூலம் பெண் குழந்தை ஜி.அனிதாவுக்கு பிறந்ததுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் குழந்தையை ஏற்க மறுத்து வருகிறார்கள். 2 நாள் குழந்தை உடல் பிணவறையில் பாதுகாக்கப்படும். அதன் பிறகும் அதனை வாங்கவில்லை என்றால் நகராட்சி ஊழியர்கள் மூலம் அடக்கம் செய்யப்படும் என்றார்.
பெண் குழந்தை என்பதற்காக அதனை ஏற்க மறுத்து உயிரை பறித்த தாயின் செயல் ஆஸ்பத்திரி ஊழியர்களை கண்கலங்க செய்தது.
Average Rating