மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து ரேஷன் அட்டை வழங்க அலகாபாத் கோர்ட் உத்தரவு!!
குடும்ப ரேஷன் அட்டைகள் மூலம் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் உணவு பாதுகாப்பை பெறும் வகையில் அவர்களை குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டுமென அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைபயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள், உலகம் முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்படுவதுடன், அற்ப புழுக்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
தாங்கள் செய்தறியாத தவறுக்கு தேவையற்ற தண்டனையை அனுபவித்து வரும் திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயர தொடர்கதை என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு அல்ல.
இந்த துயர தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி ‘தேசிய சட்டப் பணிகள்’ என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன், 15-4-2014 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. ‘திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் வழங்க வேண்டும். சுகாதாரக் காப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்’ எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மூன்றாம் பாலினத்தவரை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவே கருத வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்ததும் நினைவிருக்கலாம்,
இதன் வெளிப்பாடாக, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதுவரை 40 லட்சத்து 90 ஆயிரம் பேர் தங்களை மூன்றாம் பாலினத்தவர்களாக பதிவு செய்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு உணவு பாதுகாப்புக்கான தனி ரேஷன் அட்டைகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் இவர்களையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து தங்குதடையின்றி தனி ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஸ்ரீ நரைன் சுக்லா கொண்ட ஆகியோரை கொண்ட அமர்வு, மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
’சட்டம் என்பது பாகுபாடு, பாரபட்சத் தன்மைக்கு அப்பாற்பட்டு பொதுவானதாக இருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. உணவுப் பாதுகாப்பு என்பது சமூகப் பாதுகாப்பின் அஸ்திவாரம் ஆகும். சமூகப் பாதுகாப்பும், உணவுப் பாதுகாப்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
சமூக புறக்கணிப்பு, ஏழ்மை போன்றவை மூன்றாம் பாலினத்தவர்களை எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தலாக இருப்பதால் மற்றவர்களுக்கு அளிக்கப்படும் உணவுப் பாதுகாப்பு இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்’ என இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
Average Rating