சோளிங்கரில் இளம்பெண் கொலையில் அக்காள் கணவர் கைது!!
சோளிங்கர் கிழக்கு பஜார் தெருவில் கடந்த மாதம் 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் சென்னை செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜாபர்உசேன் என்பவரது மனைவி நூர்ஜகான் (வயது 35) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். நூர்ஜகானுக்கும் அவரது கணவர் ஜாபர்உசேனுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததும் கருத்து வேறுபாட்டால் 2 வருடங்களுக்கு முன்பு நூர்ஜகான் கணவரை விட்டு பிரிந்ததும் தெரியவந்தது.
அதன்பின் நூர்ஜகான் சோளிங்கர் கிழக்குபஜார் வீதி நாரைக்குளம் அருகே உள்ள பாண்டியநெல்லூர் செல்லும் ரோட்டின் அருகே உள்ள வீட்டில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு கூலி வேலை செய்து வந்தார்
கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் வசித்துவரும் நூர்ஜகானின் அக்காள் சான்மாவின் கணவர் அப்துல்கபூர் மகன் முகமதுசெரிப் (வயது 48) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முகமதுசெரிப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையில் சிக்கி வந்துள்ளார். நூர்ஜகான் இறந்த பிறகு கடனில் ஒரு பகுதியை அடைத்துள்ளார்.
இவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்ற சந்தேகத்தின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்று முகமதுசெரிப்பை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் முகமதுசெரிப் தன் மனைவியின் தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் கூறியதாவது:–
எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கடன் சுமையானது. இந்த நிலையில் நூர்ஜகானிடம் நான் கடன் வாங்கியிருந்தேன். அக்காள் கணவர் என்று கூட பார்க்காமல் என்னிடம் நூர்ஜகான் கறாராக வட்டியை வசூலிப்பார். பணம் கொடுக்கவில்லை என்றால் அசிங்கமாக திட்டுவார்.
கடந்த வருடம் நூர்ஜகானுக்கு பூர்வீக சொத்து வந்ததில் அதைவிற்று அவர் சோளிங்கர் அடுத்த பத்மாபுரம் கிராமத்தில் ஒரு வீட்டுமனை வாங்கினார். மீதி உள்ள பணத்தை குடும்ப செலவுக்காக வைத்துக்கொண்டு அதிலிருந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு கடன்கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
எனக்கு கடன் தொல்லைகள் அதிகம் ஆனதால் நூர்ஜகானை கொன்று விட்டால் அவரிடம் இருக்கும் பணமும் நமக்கு வரும், அந்த வீட்டுமனையையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஆசை இருந்தது.
மேலும் நான் வாங்கிய கடன் தொகையை கறாராக கேட்பதால் எனக்கு அவர் மீது ஆத்திரமும் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 17–ந்தேதி அதிகாலை நூர்ஜகான் நடந்து செல்வதை பார்த்தேன். உடனே அவருக்கு பின்னால் சென்று கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தேன். அதன்பிறகு அவரது வீட்டிற்கு சென்று அங்கு இருந்த 20 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்து நான் வாங்கிய இருசக்கர வாகன கடனுக்காக ரூ.11 ஆயிரத்து 500ஐ செலுத்தினேன். மீதி சிறு சிறு கடனை அடைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போலீசார் முகமதுசெரிப்பை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Average Rating