இரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்!!
இரணியல் அருகே அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிரில் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி அனுசுதா (23). நிறைமாத கர்ப்பிணியான அனுசுதா பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6–ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் மாலை அனுசுதா தங்கியிருந்த அறைக்கு வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை எடை பார்க்க வேண்டும் என்று கூறி எடுத்துச்சென்றார். அந்த பெண் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சு என நினைத்து அனுசுதாவும் கொடுத்தனுப்பினார். நீண்டநேரமாகியும் குழந்தையை திரும்ப கொடுக்காததால் அனுசுதா தேடத்தொடங்கினார். அப்போது குழந்தையை அந்த பெண் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதுபற்றி நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆஸ்பத்திரியின் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்சென்றது தெரியவந்தது.
அந்த வீடியோவில் பதிவாகி இருந்த பெண்ணை போலீசார் தேடினர். ஆரல்வாய்மொழி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது திருடப்பட்ட குழந்தையுடன் வீடியோவில் பதிவான பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது பெயர் ரக்சனா (வயது 20), நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு தாயார் அனுசுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைதான அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரக்சனா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனக்கும், வேல்முருகனுக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கினோம். இதில் நான் கர்ப்பமானேன். இந்த நிலையில் எனது கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.
கர்ப்பமான சில மாதங்களில் எனது கரு கலைந்து விட்டது. இதை தாயாரிடமும் மாமியாரிடமும் சொல்ல முடியாமல் தவிர்த்தேன். வயிற்றில் துணியை கட்டி தொடர்ந்து நான் கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்து வந்தேன். அடிக்கடி பரிசோதனைக்கு செல்வதாக கூறி விட்டு எனது தோழி வீட்டுக்கு சென்று வந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து எனது தாயார் எனக்கு வளைகாப்பு நடத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திங்கள்சந்தையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சு வேலை தேடி சென்றேன். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நான் அங்கு வந்தபோது, இரவு அந்த ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அறைகளை சென்று பார்த்தேன். நர்சுகள் சிலருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அங்கு வேலை கிடைக்காததையடுத்து மறுநாள் வீட்டிற்கு திரும்பி விட்டேன்.
நான் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வந்ததால் ஏதாவது ஒரு குழந்தையை திருடி உறவினர்களை சமாளிக்கலாம் என நினைத்தேன். அப்போது நான் ஏற்கனவே தங்கியிருந்த ஆஸ்பத்திரி நினைவுக்கு வந்தது. அந்த ஆஸ்பத்திரி அறைகள் எனக்கு பரிச்சயமாக இருந்ததால் அங்கேயே குழந்தையை திருட முடிவு செய்தேன்.
உடனடியாக ஊரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தேன். ஆஸ்பத்திரிக்கு நேராக சென்று நோட்டமிட்டேன்.
அங்குள்ள ஒரு அறையில் கைக்குழந்தையுடன் 2 பெண்கள் மட்டும் இருந்தனர். இதனால் அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என நினைத்து குழந்தையை எடை போட எடுத்துச்செல்வதாக கூறி தூக்கினேன். அப்போது குழந்தையின் தாயாருடன் இருந்த உறவுக்கார பெண் நானும் வருகிறேன் என புறப்பட்டார். அவரை தடுத்து நீங்கள் வர வேண்டாம், எடை எடுத்து விட்டு உடனே கொண்டு வந்து விடுகிறேன் என கூறினேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பினர். நான் குழந்தையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.
பின்னர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எனக்கு வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. உடல் சோர்வாக இருப்பதால் என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் என கூறினேன். அங்கு டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டு எனக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அங்கிருந்து அனுப்பி விட்டார்.
நான் உடனே அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்று எனது உறவினர்களிடம் எனக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறினேன். அவர்களும் சந்தேகப்பட்டனர். இரவு முழுவதும் குழந்தையை பத்திரமாக பார்த்தேன். மறுநாள் ஆரல்வாய்மொழிக்கு குழந்தையுடன் வந்தபோது போலீசார் என்னை மடக்கி பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரக்சனா குழந்தையை ஆஸ்பத்திரியில் எடுத்து சென்ற விவகாரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ரக்சனாவை ஆஸ்பத்திரிக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
எனவே ரக்சனாவின் போனில் பதிவாகி இருந்த செல்போன் எண்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது ரக்சனாவுக்கு உதவிய நர்சு யார்? என்பது தெரியவரும். அவரையும் போலீசார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
Average Rating