அம்பத்தூர் பகுதியில் தாலி செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு!!
அம்பத்தூர் திருமலை பிரியா நகர் சுஜாதா கிளினிக் அருகே டீக்கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் என்ற கிட்டு. இவரது மனைவி கலைச்செல்வி.
இவர்களது வீடு ராஜீவ் நகர் 3–வது மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு குமரன் தெருவில் டியூஷன் படிக்கும் மகனை அழைத்து வருவதற்காக கைக்குழந்தையுடன் செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 8½ பவுன் தாலி செயினை பறித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத கலைச்செல்வி திருடன்… திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.
அந்த வழியாக வந்த எலக்ட்ரீஷியன் சண்முகம் திருடர்களை ‘பைக்கில்’ விரட்டினார். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
ஹெல்மெட் அணியாமல் நகை பறிப்பில் ஈடுபட்ட அந்த வாலிபர்கள் கல்லூரி மாணவர்கள் போல் தோற்றம் அளித்ததாக எலக்ட்ரீஷியன் சண்முகம் தெரிவித்தார்.
அம்பத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் இதுவரை 13 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
திருமலைப்பிரியா நகர் 6–வது, 8–வது தெரு, சந்திப்பு ராஜீவ் நகர் மெயின்ரோடு, பானுநகர் 3–வது அவென்யூ பெந்தகொஸ்தே சர்ச் சந்திப்பு பகுதிகளிலும் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
புழல் ஆசிரியர் காலனி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 54). அண்ணா நகரில் தங்கை வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை பஸ்சில் செந்தில் நகரில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பத்மாவதி கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
திருநின்றவூர் அன்னை இந்திரா நகர் 6–வது தெருவில் வசிப்பவர் பிச்சையம்மாள் (வயது 30) நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பிச்சையம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர்.
திருநின்றவூர் பிரகாஷ் நகர் 8–வது தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்.
இவரது மனைவி கனகா இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி கனகா அணிந்திருந்த 4½ பவுன் செயினை பறித்துச் சென்று விட்டான்.
ஊரப்பாக்கம் காளிதாசன் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி உமா (60).
கணவன்–மனைவி இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராகவேந்திரர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சந்திரமோகனை தடுத்து நிறுத்தினார்கள்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும், பின்னால் உட்கார்ந்து இருந்த உமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனர். அவர்கள் ‘திருடன்’ என்று கத்தினார்கள். அதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டனர்.
சென்னையில் தாலி செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பெண்கள் பலர் தங்க நகையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு, கவரிங் நகையை அணிந்து கொண்டு வெளியில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஆந்திராவுக்கு தப்பி ஓடிய கொள்ளையர்கள் அனைவரும் பயமின்றி சென்னைக்கு வந்து கைவரிசை காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
Average Rating