ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? -யதீந்திரா (கட்டுரை)!!

Read Time:15 Minute, 55 Second

timthumb (1)அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு.

இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி இயங்குவோர், அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான புறச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும்.

அவ்வாறானதொரு புறச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை என்னவென்றால், எங்களின் பயணத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, அதேவேளை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் அந்த அடிப்படையாகும்.

இந்த விடயத்தை கற்றுக் கொள்வதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. தெற்கின் சிங்களத் தலைவர்களின் அணுகுமுறைகைளை உற்று நோக்கினாலே போதுமானதாகும்.

நேற்றுவரை தங்களுக்குள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்தும் கொண்டுமிருந்த தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் திடீரென்று தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஓரங்கட்டிவிட்டு, தேசிய அரசு ஒன்றிற்குள் ஜக்கியமடைந்திருக்கின்றனர்.

இது எவ்வாறு சாத்தியப்பட்டது?..

தமிழ் தலைவர்கள் என்போரும், தமிழ் மக்களை காப்பாற்றப் போவதாக எக்காளமிட்டு வரும் தமிழ் தேசியவாதிகள் என்போரும் இது குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா?

ஏன் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும் திடீரென்று ஒரு தேசிய அரசிற்கு இணங்கியது மட்டுமல்ல, அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்?

தேர்தலின் போது அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்போவதாக வாக்குறுதியொன்றும் அளிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், இன்று அந்த வாக்குறுதியையும் மீறியே இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் வழிமுறைக்கும் நிமல் சிறிபாலடி சில்வாவின் வழிமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இந்த விடயங்களை தொகுத்து பார்த்தால் தற்போதைக்கு முரண்பட்டு நின்ற அனைவரும் ஒரு விடயத்திற்குத்தான் முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இங்கு ரணில், மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காக ஆகிய முவரதும் முதலாவது இலக்கு மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் தெற்கில் எழுந்துவிடக் கூடாது என்பது மட்டுமேயாகும்.

அவ்வாறு எழாமல் இருக்க வேண்டுமாயின் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்னும் பெயரில் ஒரு வலுவான குரல் தெற்கில் இருக்கக் கூடாது.

இது நிகழ வேண்டுமாயின் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் அரசிற்குள் கொண்டு வர வேண்டும்.

அதற்கு ஒரே வழி அனைவரையும் இணைக்கும் ஒரு தேசிய அரசு மட்டுமே. அதேவேளை, நேற்றுவரை அரசிற்கு வெளியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு தேவை இருந்தது.

அதாவது, அவர்கள் அனைவரும் அடிப்படையில் எதிரணியாக இருந்தாலும் கூட, அவர்கள் எவருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ மீது தனிப்பட்ட விசுவாசம் எதுவுமில்லை.

அவர்கள் அரசில் இல்லாதிருந்த போது தாங்கள் சாய்ந்துகொள்வதற்கான ஒரு தூணாகவே மஹிந்தவை பயன்படுத்திக் கொண்டனர்.

அவர்கள் அனைவரும் மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டதும் கூட, மஹிந்தவின் தலைமைத்துவம் நாட்டுக்கு தேவை என்பதால் இல்லை. புதிய அரசு அவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என்னும் அச்சமே அவர்களை மஹிந்தவின் ஆட்களாக காண்பித்தது.

அதேவேளை அடுத்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் சிங்கள மக்களை எதிர்கொள்ள வேண்டுமாயின், அதற்கு அதிகாரம் தேவையென்றும் அவர்கள் விரும்பினர்.

இந்த பின்புலத்தில்தான் மேற்படி இருதரப்பினரும் ஒரு நேர்கோட்டில் சந்தித்தனர். இங்கு வெற்றிபெற்றது ரணிலின் சாணக்கியம்தான்.

இங்கு ரணில் மற்றும் மைத்திரிபால கைக்கொண்டிருக்கும் அரசியல் அணுகுமுறைதான். நான் மேலே குறிப்பிட்டவாறான ஒரு குறிப்பிட்ட இலக்கை வெற்றிகொள்வதற்கான புறச்சூழலை பேணிக்கொள்வதற்கான அரசியல் சாணக்கியமாகும். ஆனால், எம்மவரிடம் அப்படியொரு சாணக்கியம் எப்போதாவது இருந்ததுண்டா?

இன்றுவரை கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் விவாதம் முற்றுப்பெற முடியாத ஒன்றாகத்தானே தொடர்கிறது. ஏன் இந்த நிலைமை?

கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்னும் வாதம் எந்தவகையிலும் குறைத்துமதிப்பிடப்பட முடியாத ஒன்று. சிலர் வாதிடலாம் அதில் சிலருக்கு தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்கலாம் என்று.

அப்படி இருப்பதிலும் என்ன தவறு இருந்துவிடப் போகிறது. ஒரு இலக்கை நோக்கி முன்னகரும் பலதரப்பட்ட கருத்துள்ள மனிதர்கள் சங்கமிக்கும் கூட்டில் நிச்சயம் ஒரு சில தனிப்பட்ட ஆர்வங்களும் நலன்களும் இருக்கத்தான் செய்யும்.

பிரபாகரன் இவ்வாறானதொரு கட்சிகளின் கூட்டமைப்பு தேவை என்னும் அடிப்படையில் அதனை உருவாக்குவதற்கான பச்சைக் கொடியை காண்பித்த போது, அவருக்கு தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்கவில்லையா?

அதேபோன்று அதுவரை பிரபாகரனின் பரம வைரிகளாக இருந்தவர்கள், இன்றைய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜயா உட்பட, அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்கவில்லையா?

விடுதலைப் புலிகள் தன்னை போட்டுத் தள்ளும் பட்டியலில் வைத்திருந்ததாக சம்பந்தன் ஜயாவே நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார்.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அனைவரது தனிப்பட்ட ஆர்வங்களையும் கடந்துதானே அன்று அனைவரும் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஆனால், புலிகளின் அழிவைத் தொடர்ந்து ஒரு பிரதான தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளித்தெரிந்த பின்னர்தான் தேவையற்ற முரண்பாடுகள் எழத் தொடங்கின.

தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை காண்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளடங்கலான அனைத்துலக சக்திகளின் ஆதரவை திரட்டப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் கூட்டமைப்ப, தனக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் கூட நிவர்த்திசெய்து கொள்ள முடியாத அளவிற்கல்லவா திணறிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இது பற்றி நேரடியாகவே குறிப்பிட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை பேணிப் பாதுகாக்க வேண்டும். அதனை தளரவிடக் கூடாதென்றல்லவா கூறிச் சென்றிருக்கிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர், இந்தளவு கூட்டமைப்பின் ஒற்றுமையை அழுத்திச் சொல்ல வேண்டிய நிலைக்கல்லவா கூட்டமைப்பின் நிலைமை காணப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புடைய ஒருவர் குறிப்பிடும் போது, அங்கு கூட்டமைப்பு தொடர்பில் பெரியளவு நம்பிக்கை காணப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது – கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தங்களின் உண்மையான நிலைமை தெரியவில்லை போலல்லவா தெரிகிறது என்று, அவர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு நிலைமைகள் காணப்படுகின்றன.

உண்மையில் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கில் குறிப்பாக, வடக்கில் இருந்து அரசியல் பேசும் பெரும்பாலானவர்களுக்கு, தமிழர்களின் இன்றைய நிலைமை தெளிவாக விளங்குவதாக என்னால் சொல்ல முடியாது. தமிழர்கள் இந்த உலகத்திற்கே தேவையானவர்கள்.

எனவே, எங்களுக்கு எல்லோரும் அரசியல் பணிவிடை செய்ய வேண்டியது அவர்களின் கடமை போன்றே பலரும் பேச முற்படுகின்றனர்.

ஆனால், நாங்கள் எப்போதுமே மற்றவர்களின் நலன்களை விளங்கிக் கொள்ள மாட்டோம். ஆனால், அவர்கள் அனைவரும் எங்களின் நலன்களை விளங்கிக்கொண்டு எங்களுக்காக பேச வேண்டும் என்பதே எங்களில் அனேகரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதலில் இப்படியான மனநிலையிலிருந்து வெளியில் வர வேண்டும்.

இன்றைய சூழலில் தமிழர்களிடம் என்ன இருக்கிறது? இதற்கல்லவா முதலில் விடையை நாம் தேட வேண்டும்.

இதற்கான விடையை தெளிவாக கண்டுகொண்டல்லவா அடுத்து எங்கு போகலாம் என்பது தொடர்பில் விவாதிக்க வேண்டும். இங்கு தமிழர்களுக்கென்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட குரலாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே ஒரு ஒருமித்த குரல் இல்லை.

ஜந்து வருடங்கள் முயன்றும் இன்றுவரை அதில் ஒரு முற்னேற்றத்தைக் காண முடியவில்லை. உண்மையில் இது தொடர்பில் ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

விரைவில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படும் சூழலில், மீண்டும் எங்களுக்கு குழிபறிக்கப்படுமோ என்னும் எண்ணம் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகள் மத்தியில் உருவாகிவிட்டது.

குறிப்பாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியை சேர்ந்தவர்களில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களுக்கு மட்டுமே ஆசனம் வழங்குவதாக ஒரு தகவல் உலவவிடப்பட்டுள்ளது.

இது ஏனைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தடுமாற்றத்தையும் ஒருவித கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

உண்மையில் ஒருவேளை முன்னரை போன்று ஆயுதங்கள் பயன்படுத்தும் சூழலில் இருப்பின் நிச்சயம் சில தலைவர்கள் கொல்லப்பட்டுமிருக்கலாம் என்னுமளவிற்கு இன்றைய கூட்டமைப்பின் முரண்பாடுகள் பாரதூரமானது.

இந்த நிலைமையில்தான் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் மேலெழுந்திருக்கின்றன.

உண்மையில் எதுவரை இந்த விவாதத்தைத் தொடரப் போகிறோம், வடக்கு கிழக்கில் வாழும் ஒட்டுமொத்த ஏழை தமிழ் மக்களும் அழியும்வரையிலா?

ஆகக் குறைந்தது ரணில், மைத்திரிபால போன்ற சிங்களத் தலைவர்களிடமிருந்தாவது கூட்டமைப்பினர் கற்றுக் கொள்ள மாட்டார்களா?

ஒரு இலக்கிற்காக, தெற்கில் முரண்பட்டு நின்றவர்கள் ஒன்றுபட முடியுமென்றால், தமிழ் மக்களின் உரிமையை வெற்றிகொள்ளுதல் என்னும் மிக உயர்ந்த ஒரு இலக்கிற்காக ஏன் எங்களால், எங்களது பேதங்களை குழிதோண்டி புதைக்க முடியாமல் இருக்கிறது?

பிறகெதற்கு எங்களுக்கு உரிமைக் கோசங்களும் வெற்று அறிக்கைகளும்? இன்று தெற்கில் ஏற்பட்டுள்ள நிலைமையை ரணில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்திற்கான ஆரம்பம் என்று வர்ணித்திருக்கின்றார்.

65 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை மறுதலித்துவந்தவர்களால் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிப் பயணிக்க முடியுமென்றால், ஏன் அவர்களுக்கு எதிராகப் போராடிய தமிழர் தரப்பால் இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒரு புதிய தமிழ் அரசியல் கலாசாரத்தை நோக்கிச் செல்ல முடியாமல் இருக்கிறது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தவரின் போனுக்கு அனுப்பிய SMS அழிக்க புதிய APP…!!!
Next post முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!