மர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை? – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு!!
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 33), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30).
இவர்கள் இருவரும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் பிரிவில் ஒப்பந்த மேற்பார்வையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26–ந்தேதி நண்பர்கள் இருவரும் திருச்சி அருகே இனியானூரில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் தனசேகர் இறந்தார். சதீஷ் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோமரசம் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நண்பர்கள் இருவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்திருப்பதாக கூறப்பட்டது.
நண்பர்கள் இருவரும் தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன்? என்பது மர்மமாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் பாங்காங் நாட்டிற்கு சூட்கேஸ்களில் மறைத்து 492 ஆமைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக ஆமைகளை கடத்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
அன்று விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கான ஸ்கேனர் பிரிவில் தனசேகரும், சதீஷ்குமாரும் பணியில் இருந்துள்ளனர். பயணிகளின் உடைமைகளை ஸ்கேனில் சோதனை செய்யும் போது சந்தேகப்படும் படி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஆமைகள் கடத்தப்பட்ட 5 சூட்கேஸ்களை இருவரும் ஸ்கேன் செய்து ‘சோதனை முடிந்தது’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு சுங்க துறை வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வந்து திடீரென சூட்கேஸ்களை சோதனை செய்த போது தான் ஆமைகள் கடத்தல் விவகாரம் வெளியே தெரிந்தது. சூட்கேஸ்களில் ஒட்டப்பட்ட 5 ஸ்டிக்கர்களும் பழைய ஸ்டிக்கர்கள் என்று தெரிய வந்தது.
இது தொடர்பாக தனசேகரையும், சதீஷ்குமாரையும் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் மட்டும் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவினார்களா? வேறு கடத்தலுக்கும் உதவினார்களா? என்று இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஏற்கனவே இது போன்று 2 முறை அதிகாரிகள் தனசேகரையும், சதீஷ் குமாரையும் எச்சரித்து உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இருவரும் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தினர்.
கடத்தல் கும்பலுக்கு இவர்கள் தொடர்ந்து உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதற்கிடையே மிகவும் குறுகிய காலத்தில் தனசேகர் வீடு கார், மோட்டார் சைக்கிள் என சொத்துக்கள் வாங்கியதும் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடத்தல் ஆசாமிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு அவர்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
எனவே விசாரணை தீவிரமடைந்தது. இந்த நிலையில் தான் இருவரும் விஷத்தை மதுவில் கலந்து குடித்த நிலையில் கிடந்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணைக்கு பயந்து இருவரும் விஷம் கலந்த மது குடித்ததாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்களை கடத்தல் கும்பல் அடித்து உதைத்து வாயில் மது கலந்த விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இருவரது உடலிலும் காயங்கள் இருந்துள்ளது. மேலும் தினேஷ்குமாரின் சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது தினேஷ் குமார் விஷம் கலந்து மது குடித்ததால் ரத்த வாந்தி எடுத்திருக்கலாம், இதனால் சட்டையில் ரத்தம் படிந்துள்ளது, பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றனர்.
சிகிச்சை பெற்று வரும் சதீஷ்குமார் பேச முடியாத நிலையில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
Average Rating