திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையம் முன்சிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 16). பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்த இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான கொட்டகையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்தது. மாணவியின் சைக்கிள் அந்த கொட்டகை அருகே கிடந்தது.
இந்த கொலை தொடர்பாக எலச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ரிக் தொழிலாளி சிவா என்ற திலீப்குமார் (22), அவரது நண்பர் சந்தோஷ்குமார் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 17 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
ஒருதலை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கைதான திலீப்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 120பி,201, 302, 6 (எல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாணவி கொலையில் கைதான திலீப்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–
நான் திருச்செங்கோட்டில் ரிக் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். நானும், ஸ்ரீஜாவும் உறவினர்கள். நான் அவளை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நான் அவளிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவள் மறுத்து விட்டாள். இதனால் விரக்தி அடைந்த நான் ஏற்கனவே 2 முறை விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்.
மேலும் அவள் என்னிடம் பழகுவதையும், பேசுவதையும் குறைத்துக்கொண்டாள். அவள் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவருடன் பழகி வந்தது எனக்கு தெரியவந்தது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த நான், வேறு ஒருவருடன் பழகுகிறாயா? என்று கூறி அவளை கண்டித்தேன். ஆனாலும் அவள் அந்த மாணவருடன் பேசி, பழகுவதை கைவிடவில்லை.
சம்பவத்தன்று ஸ்ரீஜா பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள காலி குடிசை வீட்டில் சக மாணவரிடம் பேசி கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் அவளிடம் சென்று இந்த இடத்திற்கு எதற்கு வந்தாய்? என கேட்டேன். மேலும் நீ என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறாயே? என்று கேட்டேன். இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவளுடன் பழகி வரும் அந்த மாணவரும் அங்கு இருந்தார். அவருடன் எனக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் போன் செய்து எனது நண்பர் துஞ்சாம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரை அங்கு வரவழைத்தேன்.
பின்னர் மாணவி ஸ்ரீஜாவின் துப்பட்டாவை எடுத்து, அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். பின்னர் அவளது பிணத்தை சாக்குமூட்டையில் திணித்து விட்டு அங்கிருந்து நாங்கள் வந்து விட்டோம்.
இவ்வாறு போலீசாரிடம் திலீப்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
மாணவியின் பள்ளி சீருடை கிழிக்கப்பட்டு இருந்ததால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் சங்கீதா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து முதற்கட்ட அறிக்கையை போலீசாருக்கு அளித்துள்ளனர். அதில் மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைதான திலீப்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கிளைச் சிறையிலும் கொலையை மறைத்ததாக கைதான மாணவர் சேலம் சிறுவர் சீர்திருத்த சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Average Rating