ஜெர்மனி கனவை தகர்த்த இத்தாலி: 2-0
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு டார்ட்மண் டில் நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந் தவை என்பதால் ஆட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தொடக்கத்திலேயே இத்தாலி வீரர்கள் ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் இத்தாலிக்கு `ப்ரீகிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை டோடி அடித்தார். ஆனால் ஜெர்மனி கோல் கீப்பர் ஜெனஸ் லெக்மன் அபாரமாக கோல் விழாமல் தடுத்தார். 15, 16-வது நிமிடத்தில் இத் தாலிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெர்ட்டரி, பெரோட்டோ இதை தவற விட்டனர். 34-வது நிமிடத் தில் ஜெர்மனி அணிக்கு கோல் அடிக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. பல்லாக் அடித்த பந்தை, குளூஸ் பெற்று அதை ஸ்நைடரூக்கு பாஸ் செய்தார். ஆனால் அவரோ பந்தை கோல் கம்பத்திற்கு மேலே அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை இரு அணியும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. கோல் விழாமல் இருந்தாலும் முதல் பாதியில் இத்தாலியே ஆதிக்கம் செலுத்தியது.
2-வது பாதியில் ஜெர்மனி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. 49-வது நிமிடத்தில் ஜெர்மனியின் குளூசும் 61-வது நிமிடத்தில் இத்தாலியின் பின்கள வீரர் குரஸ்கோவும் கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர். 82-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு `ப்ரீகிக்’ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதையும் அந்த அணி கோலாக மாற்ற தவறியது.
பல்லாக் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. 84-வது நிமிடத்தில் இத்தாலியின் பரொட்டோ கோல் கம்பத்தை நோக்கி முன்னேறி சென்று கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் ஜெர்மனி கோல் கீப்பர் அருமையாக பாய்ந்து தலையால் முட்டி கோல் அடிக்கும் வாய்ப்பை முறியடித்தார்.
2-வது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரம் பரபரப்பின் உச்சக்கட்டத்திற்கு சென்றது. கூடுதல் நேரத்தில் இத்தாலி அணி ஆதிக்கம் செலுத்தியது. 91 மற்றும் 92-வது நிமிடத்தில் கிலார்டினோ, சமர்பர்ட்டோ ஆகியோர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் தப்பியது.
109-வது நிமிடத்தில் ஜெர்மனியின் போடோல்ஸ்கிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் பந்தை தலையால் முட்டி கோல் கம்பத்திற்கு வெளியே தள்ளினார். அடுத்த 6 நிமிடங்களில் இத்தாலியின் பிர்லோ அடுத்தடுத்து இருமுறை கோல் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். கூடுதல் நேரம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த நிலையிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் `பெனால்டி’ ஷூட்டை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இத்தாலி கோல் அடித்தது. 119-வது நிமிடத்தில் பிர்லோ தந்திரமாக ஜெர்மனி யின் பல்லாக் மற்றும் பரோ வோஸ்கியை ஏமாற்றி பந்தை கிராஸ்கோவுக்கு பாஸ் செய்தார். அவர் தனது இடது காலால் கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடித்தார்.
இத்தாலி இந்த கோலை அடித்துமே ஜெர்மனி வீரர்கள் மனம் தளர்ந்து விட்டனர். இதை இத்தாலி நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்தது.
இந்த கோலை மாற்று வீரராக களம் இறங்கிய டெல்பியரோ அடித்தார். இதன் மூலம் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டி பெர்லின் நகரில் 9-ந் தேதி நடக்கிறது.