ஏற்காட்டில் கணவன்–மனைவி கொலை: சொத்து தகராறில் தீர்த்து கட்டிய கொடூரம் அக்காள் மகனிடம் விசாரணை!!
ஏற்காடு பட்டிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) தோட்ட தொழிலாளி. இவரது மனைவி வாசுகி (30). இவர்களுக்கு வாரிசு இல்லை. சக்திவேல் நேற்று இரவு தனது மனைவியுடன் சொனைப்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது வேலூர்–பட்டிப்பாடி இடையே அவர்கள் வந்த போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கணவன்–மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி, டி.எஸ்.பி. சந்திரசேகரன், ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அப்போது கணவன்–மனைவி 2 பேரும் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் சீதா நள்ளிரவு 12.30 மணிக்கு வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது.
பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட சக்திவேல், வாசுகி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சக்திவேல்–வாசுகி ஆகியோர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவை வருமாறு:–
கொலை செய்யப்பட்ட சக்திவேலுக்கு, சுகந்தி (40). என்ற அக்காள் உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. சுகந்தி தனது தம்பியிடம் தனக்கு 3 ஏக்கர் நிலத்தை பங்கு பிரித்து தர கேட்டார். அதற்கு சக்திவேல் மறுத்து விட்டார்.
இதையடுத்து சுகந்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கோர்ட்டு சுகந்திக்கு 3 ஏக்கர் நிலத்தை பிரித்து தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சுகந்தி திடீரென இறந்து விட்டார்.
தொடர்ந்து சுகந்தியின் மகன் கனகராஜ் (25) என்பவர் தனது தாய் மாமாவான சக்திவேலிடம் தனது தாய்க்கு சேர வேண்டிய 3 ஏக்கர் நிலத்தை பிரித்து கேட்டார். அதற்கு சக்திவேல் தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சக்திவேலுக்கும், அவரது அக்காள் மகன் கனகராஜிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் தான் சக்திவேல் அவரது மனைவி வாசுகி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் கனகராஜை பிடித்து கொலை நடந்த இடத்துக்கு கொண்டு வந்தனர்.
அப்போது கனகராஜ் எனக்கு ஏதும் தெரியாது என்றார். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிலர் மது குடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கனகராஜை தீவிரமாக விசாரித்தபோது தான், தனது நண்பர்களான சந்திரன், குமார், கணேசன் ஆகியோருடன் மது குடித்தேன் என்றார்.
எனவே மது போதையில் இருந்த இவர்கள் 4 பேரும் சேர்ந்து திட்டமிட்டு சக்திவேல் அவரது மனைவி வாசுகி ஆகியோரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கனகராஜியுடன் மதுகுடித்த சந்திரன், குமார், கணேசன் ஆகிய 3 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் தான் இந்த கொலை குறித்த முழு விபரம் தெரிய வரும்.
Average Rating