ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: புதுவை போலீஸ்காரர் அடித்துக்கொலை!!
புதுவை முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). புதுவை ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக இருந்து வந்தார். அவருக்கு ஜெயிலில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது.
புதுவை வில்லியனூரை சேர்ந்த நித்தியானந்தம் என்ற பிரபல ரவுடி ஒரு வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது மனைவி சுகுணா அடிக்கடி நித்தியானந்தத்தை பார்ப்பதற்காக ஜெயிலுக்கு வருவார். அப்போது போலீஸ்காரர் ரகுபதி அவருக்கு உதவி செய்து வந்தார். இதனால் அவர்களுக்குள் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
நித்தியானந்தம் ஜெயிலில் இருந்த நிலையில் ரகுபதியும் சுகுணாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த விஷயம் நித்தியானந்தத்திற்கு தெரியவந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நித்தியானந்தம் ஜெயிலில் இருந்து விடுதலையானார். கள்ளக்காதல் விஷயம் குறித்து மனைவியை கண்டித்தார். மேலும் ரகுபதியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.
கடந்த வியாழக்கிழமை இரவு சுகுணாவை ரகுபதியிடம் போனில் பேசி வீட்டுக்கு வரவழைக்கும்படி கூறினார். அதன்படி அவர் ரகுபதியை போனில் பேசி வீட்டிற்கு வரும்படி கூறினார். உடனே ரகுபதி தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார்.
அப்போது நித்தியானந்தமும், அவரது கூட்டாளிகளும் தயாராக இருந்தனர். வீட்டிற்குள் வந்ததும் ரகுபதியை நித்தியானந்தமும், அவரது ஆட்களும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் ரகுபதியை காரில் ஏற்றி விழுப்புரம் நோக்கி சென்றனர்.
வழியிலேயே கட்டையால் தலையில் அடித்து ரகுபதியை கொலை செய்தனர். திருநாவலூர் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் பிணத்தை ரோட்டில் வீசினார்கள். ரகுபதியின் மோட்டார்சைக்கிளை நித்தியானந்தத்தின் கூட்டாளி ஒருவர் கூடவே ஓட்டி சென்றார். அந்த மோட்டார் சைக்கிளையும் பிணம் அருகே போட்டுவிட்டு வந்துவிட்டனர். சாலையில் பிணமும் மோட்டார் சைக்கிளும் கிடந்தால் அதை விபத்து என போலீசார் கருதுவார்கள் என இப்படி ஜோடித்து இருந்தனர்.
சாலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரகுபதியின் தலையில் பலத்த காயம் இருந்தது. காலில் வெட்டுக்காயம் இருந்தது. அது விபத்துதான் என கருதி போலீசார் வாகன விபத்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ரகுபதியின் மனைவி தாமரைச்செல்வி கணவரை காணவில்லை என்று புதுவை முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருநாவலூர் அருகே பிணம் ஒன்று கிடந்த தகவல் ஒன்று புதுவை போலீசாருக்கு கிடைத்தது. மேலும் திருநாவலூர் போலீசார் வாட்ஸ்அப் மூலம் பிணத்தின் படத்தை அனுப்பி இருந்தனர். அதை பார்த்த போலீசார் இறந்தவர் ரகுபதிதான் என உறுதி செய்தனர்.
ரகுபதியின் பிணம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. ரகுபதியின் தந்தை அழகானந்தம் மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அது ரகுபதியின் உடல் என்று அடையாளம் காட்டினர். அதைத்தொடர்ந்து ரகுபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே முதலியார்பேட்டை போலீசார் ரவுடி நித்தியானந்தத்தின் சுகுணாவை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்தியானந்தமும், கூட்டாளிகளும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating