சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது!!
சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாமல் செய்ய மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் அனைத்து பகுதியிலும் கண்காணித்து வருகிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலத்தில் 14 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் ஒருவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுபற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில் சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர். இதன் விவரம் வருமாறு:–
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ளது சிங்காரப்பேட்டை. இந்த பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 40). காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை விற்று வருகிறார். இவருக்கு கனகா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் உள்ளார். கனகா 5–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்,
இந்த நிலையில் செல்வியை பார்க்க சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் (வயது 32) அடிக்கடி வந்து செல்வார். இவர் சிறுமியின் அழகில் மயங்கி சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க கனகாவின் தாயார் செல்வியிடம் கேட்டார். இதற்கு செல்வியும் சம்மதித்தார்.
பின்னர் திருமண ஏற்பாடுகள் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி அவரது மகள் கனகாவை அழைத்து கொண்டு சேலம் அருகில் உள்ள அதிகாரப்பட்டிக்கு சென்றார். இங்குள்ள பெரியாண்டிச்சி கோவிலில் மணக்கோலத்தில் ஆட்டோ டிரைவர் மோகன் மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். பின்னர் இந்த கோவிலில் மோகனுக்கும், கனகாவிற்கும் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் குறித்து செல்வி அவரது உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. சிறுமிக்கு திருமணம் நடப்பதை யாரும் அறிந்து திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டால் என்ன செய்வது என எண்ணி அவர் யாரிடமும் திருமணம் பற்றி தெரிவிக்கவில்லை.
பின்னர் மோகன் சிறுமியை அழைத்து கொண்டு பெரியவீராணம் பகுதியில் வசித்து வந்தார். சிறுமியை மோகன் திருமணம் செய்து வந்ததை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இவர்கள் இதுபற்றி சேலம் அன்பு இல்லத்தில் உள்ள நிர்வாகிகளிடம் சென்று குழந்தை திருமணம் நடந்து உள்ளது. இதன் மீது விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுதது அன்புஇல்ல ஒருங்கிணைப்பாளர் நிர்மலாதேவி மற்றும் நிர்வாகிகள் விசாரித்தனர். அப்போது கனகாவின் சம்மதம் பெறாமல் அவருக்கு 18 வயது ஆகாமலேயே திருமணம் செய்து வைத்துள்ளது கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர்.
இதை அறிந்த அவர் இதன் மீது விசாரிக்க சேலம் அம்மாப்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் போலீசார் விசாரித்தனர். பிறகு ஆட்டோ டிரைவர் மோகன், அவரது உறவினர் மோகன் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சிறுமி கனகா மீட்கப்பட்டார். இதை அறிந்த சிறுமியின் தாயார் செல்வி தலைமறைவாகி விட்டார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating