“போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி” என்ற பெயரில் இடம்பெறும், உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)!!
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத் தீர்மானித்திருந்தது போரினாலே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய முக்கியமான வெற்றி ஆகும்.
பாதிக்கப்பட்டவர்களுடைய கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு உண்மைகள் பயமற்ற முறையிலும், பக்கச்சார்பற்ற வகையிலும் வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். அத்துடன், நீதியும், பரிகாரங்களும், மீட்சியும் அவர்களுக்குக் கிடைப்பதற்கு வேண்டிய செயன்முறைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
போரின் போது மேற்கொள்ளப்பட்ட பிழைகள், உரிமை மீறல்களினை ஒரு தரப்பினர் மாத்திரம் செய்யவில்லை. நீதிக்கு முன்னுரிமை அளித்து, நீதிபதிகளின் தீர்ப்பிற்காக மரியாதையுடனும், தன்னடக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பொறுமையாக இருப்பதுவும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்திற்கு மதிப்பளித்தலின் ஒரு பகுதி என்பதனை நாம் உணர வேண்டும்.
ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழ்த் தலைமைத்துவத்தினைக் கைப்பற்றும் நோக்குடன், சேறு பூசுவதும், ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டுவதும், கொடும்பாவி எரித்தலும் மிகவும் வெறுக்கத்தக்க முறையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கல்வியாளர்களிற் சிலர் இனத் துரோகிகளினை அடையாளங்காட்டுவதனையும், அவர்கள் மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கைகளையும் முன்னின்று செய்ய ஆசைப்பட்டனர்.
தமது வீரப் பேச்சுக்களால் சமூகத்தினை மீண்டும் அபாயகரமான ஒரு சூழ்நிலைக்குள்ளே தள்ளுவதற்கு இவர்கள் முற்படுகின்றனர்.
சுதந்திர தின வைபவங்களிலே கலந்து கொண்டைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டனர்.
வெளிவர இருக்கின்ற ஐ.நா. அறிக்கைக்கு முன்னோட்டமாக, வட மாகாண சபையிலே பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அன்று நிறைவேற்றப்பட்ட ‘இனஅழிப்புப் பற்றிய’ தீர்மானம் ஒன்றுடன் ‘இனஅழிப்புப் பற்றிய அறிக்கை’ ஒன்றையும் வட மாகாண முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைத்தார்.
வெளிவர இருக்கின்ற ஐ.நா. அறிக்கையினை அரசியல் மயமாக்கக் கூடாது என்ற கருத்தினையும், அறிக்கையினை அரசியல் மயமாக்காது இருப்பதன் மூலமே சிங்கள மக்கள் அறிக்கையினைத் திறந்த மனத்துடன் நோக்குவதற்கு வழி ஏற்படும் என்ற கருத்தினையும் பல்கலைக்கழக ஆசிரியர்களிலே ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கொண்டிருந்தனர்.
புதிய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அறிக்கையினை வெளியிட தாமதிப்பதற்கு ஐ.நா. குழு முடிவெடுத்தமைக்கு எந்த விதமான எதிர்ப்பும் இருக்கவில்லை. எனினும், இந்த மிதவாத நிலைப்பாடு நடந்து முடிந்த நிகழ்வுகளின் வேகத்திலே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
ஐ.நா. அறிக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் மாதத்திலே வெளியிடப்பட வேண்டும் எனப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வலியுறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள் என பெப்ரவரி 13ஆம் திகதி ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது.
அன்றைய தினமே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தினைத் தான் வரவேற்பதாகவும், ஐ.நா. அறிக்கை வெளியிடப்படுவதனை இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்தார்.
அறிக்கை விரைவாக வெளியிடப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ஊர்வலம் ஒன்றிலே பங்கேற்கும்படி பல்கலைக்கழக ஆசிரியர்கள் விடுத்த அழைப்பிற்கு அவர் பின்னர் ஆதரவும் வெளியிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களை மிதவாதமான நிலைப்பாட்டினைக் கைவிட ஊக்கப்படுத்தும் தீவிரத் தன்மையான கருத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வெளியிடப்படவுள்ள அறிக்கையின் முக்கியத்துவம் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதிகமான சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே, இந்தத் தீவிரத் தன்மை மிக்க கருத்துக்கள், விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மிக்க காலப்பகுதியிலே எழுப்பப்பட்ட ‘பொங்கு தமிழ்’ சுலோகங்களை மீளவும் நினைவூட்டும் அறிக்கைகளினை பிரசுரிக்க மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்தன.
இவை எல்லாமே ஐ.நா. ஆணையாளர் தான் நிச்சயமாக வெளியிடுவேன் என்று சொன்ன ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து அரங்கேற்றப்பட்டன.
பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை காணாமற் போனோருக்கான பெண்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்றிலே வைத்து எரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்கு ஊறுசெய்யும் வகையில், அவர்களின் முக்கியமான பிரச்சினையினை அரசியலாக்கும் ஒரு முயற்சியே இது.
இந்தச் சம்பவம் நடைபெற்று முடிந்தவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடத்தினை அல்லது அதன் தலைமைத்துவத்தினைக் கைப்பற்ற முயல்வோர் மேலும் பல உருவப் பொம்மைகளினை எரித்துவிடக் கூடும் என்ற அச்சத்தினாலோ என்னவோ, கூட்டமைப்பின் மற்றொரு தலைவர் மாவை சேனாதிராஜா பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டார்.
சுமந்திரன் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்களுக்கு வெளியிலே சொல்லப்பட்ட காரணம், வெளியிடப்படவுள்ள ஐ.நா. அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளினை நிறைவேற்றுவதற்கென நாட்டினுள் நிறுவப்படவுள்ள ஒரு பொறிமுறை தொடர்பாக சுமந்திரன் அரசுடன் உரையாடி வருகின்றார் என்பதாகும்.
எங்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய மிகச் சிறந்த செயன்முறை இது. அரசு மாறியிருக்காவிட்டால் ஐ.நா. அறிக்கை மிகவும் எளிதாக நிராகரிக்கப்பட்டிருக்கும்.
அத்துடன், அந்த அறிக்கையின் மூலமாக ஏதாவது நன்மைகளினைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும். தேசிய நல்லிணக்கமே இன்று எமக்கு இருக்கக் கூடிய ஒரே நம்பிக்கை. நாம் எந்த விதமான ஈடுபாட்டினையும் காட்டாது, உள்நாட்டுப் பொறிமுறைகளினை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பங்களை முற்று முழுவதுமாக இல்லாது செய்துவிடும்.
உள்ளகப் பொறிமுறைகள், வாய்ப்புக்கள் யாவும் முழுவதுமாகப் பயன்படுத்தப்படாத நிலையிலே, ஐ.நா. ஒருபோதும் சர்வதேச விசாரணைக்குப் பரிந்துரை செய்யமாட்டாது. அவ்வாறான ஐ.நாவின் நிலைப்பாடு சரியானதே.
உள்ளகப் பொறிமுறைகள் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவது என்பதனுள் குற்றமிழைத்த தரப்புக்களின் தலைமைகளினைப் பொறுப்புக் (Command Responsibility) கூற வைப்பதற்கான சட்டங்களை உருவாக்கக் கோருவதும் அடங்குகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை, அரசு இன அழிப்பினை மேற்கொண்டதாக அரசின் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கும் என்ற வாதத்தினையும் சமூகத்திலே பரப்பி மக்களினை ஏமாற்றும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, 31 மார்ச் 2011இல் வெளியிடப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழு அறிக்கையிலே குறிப்பிடப்பட்ட விடயங்களினை மேலும் விரிவாக்கிச் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், முன்னைய அறிக்கையின் முடிவுகளில் இருந்து அது முக்கியமான வகையில் வேறுபட்டிருக்கும் என்று நாம் எதிர்வுகூற முடியாது. 31 மார்ச் 2011இல் வெளியிடப்பட அறிக்கை பின்வரும் குற்றங்களுக்கு அரசு காரணம் எனக் குறிப்பிடுகிறது:
பரவலான ஷெல் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களினைக் கொலை செய்தமை
மருத்துவமனைகள் மீதும், மனித நேய அமைப்புக்களின் மீதும் ஷெல் தாக்குதல்களினை மேற்கொண்டமை
மனிதாபிமான உதவிகளைப் பொதுமக்கள் பெறுவதற்கு அனுமதிக்காமை
பாதிக்கப்பட்டவர்களும், உயிர் தப்பியோரும் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள்
யுத்த வலயத்துக்கு வெளியிலே இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் (ஊடகங்கள் மீதான தாக்குதல் மற்றும் கடத்தல்கள் போன்றன)
அந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் எனப் பின்வருவனவற்றினைக் குறிப்பிடுகிறது:
பொதுமக்களினை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை.
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முற்பட்ட மக்களினைக் கொன்றமை.
பொதுமக்களுக்கு அருகில் வைத்து இராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தியமை.
சிறுவர்களைப் பலவந்தமாக புலிகள் அமைப்பில் சேர்த்தமை.
பொதுமக்களினை பலவந்தமாக வேலை செய்ய வைத்தமை (உதாரணமாக பொதுமக்களினைப் பதுங்கு குழிகள் தோண்டுமாறு பணித்தமை).
பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினை மேற்கொண்டமை.
தமிழ்த் தேசியவாதிகள் திட்டமிட்டு மறைக்க முற்படும், விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் கொடூரத் தன்மை அரசுக்கு எதிராக மட்டும் முன்வைக்கப்படும் இன அழிப்புக் குற்றச்சாட்டினை நிலைகுலைச் செய்கிறது.
தமிழ்ச் சமூகம் தனது அரசியலின் திசையினைத் தீர்க்கமான முறையிலே மாற்றியமைப்பதற்கு அதனைத் தூண்டக் கூடிய உண்மைகளினைப் பேசுவதனைத் தவிர்ப்பதுவும், பொய்களைக் கூறுவதும் தமிழ் அரசியலில் ஆரம்ப காலந்தொட்டே இருந்து வருகின்ற ஒரு நிலைமையாகும். உதாரணமாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அண்மைய அறிக்கையினை எடுத்துக்கொள்ளுவோம்.
இனவழிப்புத் தொடர்பான பட்டியலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் 1974ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துயரத்தினை உள்ளடக்கியுள்ளார். ஆனால், இது தொடர்பான உண்மைகள் நீதிபதிகள் ஓ. எல். டி கிறேற்ஸர் மற்றும் வி. மாணிக்கவாசகர் மற்றும் பேராயர் எஸ். குலேந்திரன் ஆகியோரின் தலைமையில் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் விசாரணைகளின் மூலமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவர்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற அரசியல்வாதி சட்ட விரோதமாக இலங்கைக்குள் வந்து மாநாட்டில் பங்குபற்றிய போது அவரைக் கைது செய்வதற்குப் பொலிஸாருக்கு இருந்த அதிகாரத்தினை மறுக்கவில்லை. பொலிஸாரினால் ஜனார்த்தனைக் கைதுசெய்ய முடியவில்லை.
தீர்ப்பிலே பின்வரும் விடயங்களை தீர்ப்பு வழங்கிய மூவர் குழு குறிப்பிடுகிறது: இந்தக் கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டால் மக்கள் ஒருவரை ஒருவர் நெரித்து மிதிக்கும் நிலைமை ஏற்படும் என்பது பொலிஸாருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
எனவே, அவர்கள் கைது நடவடிக்கையில் இறங்காது விட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து அவர்கள் அசட்டைத்தனமாகச் செயற்பட்டனர். அந்தத் தீர்ப்பிலே குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களுக்கும், இன அழிப்புக்கும் வெகுதூரம் என்பதனைத் தீர்ப்பை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், அன்றைய காலத்தில், தமிழ்த் தேசியவாதம், எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம் அன்றைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவே எனக் குற்றம் சாட்டியது.
துரையப்பாவே பொலிஸ் நடவடிக்கையினைத் தூண்டினார் எனவும், அதனால், தேசிய நோக்கிலே அவர் கொலைசெய்யப்பட வேண்டிய துரோகி எனவும் முத்திரை குத்தப்பட்டார்.
அப்போது தான் தோற்றம் பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அடுத்த வருடம் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் வந்த காலப்பகுதிகளில் இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் உரையாடல்களில் ஈடுபட்டமைக்காகப் பல்வேறு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் துரோகிகள் என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியவாதத் தலைமைகளால் உருவாக்கப்பட்ட கொலை அரசியல் 35 வருடங்களுக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு மாபெரும் துயரத்துடன் முடிவுக்கு வந்தாலும், அது தொடர்ந்தும் தமிழ்த் தேசியத் தலைமைகளினை ஓயாது வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
பட்டியலில் உள்ள கடைசி இனவழிப்புச் சம்பவத்தினை முதலமைச்சர் “வன்னி இன அழிப்பு” எனக் குறிப்பிடுகிறார். எனினும், வன்னிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களினைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தினர்.
இதன் மூலம், 1974இல் நடைபெற்றது போல அரசு தனது நடவடிக்கையினை நியாயப்படுத்திக் கொண்டது. போரிலே அகப்பட்ட மக்கள் அரசு போரினை நிறுத்தி, எதுவுமே செய்யாது விட்டால் நல்லது என்றும் அல்லது தமக்குப் பாதிப்புக்கள் குறைவாக இருக்கக் கூடிய ஒரு சர்வதேச முயற்சியினூடாகத் தாம் வெளியில் எடுக்கப்பட வேண்டும் எனவும் விரும்பினார்கள்.
அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான எமது மதிப்பீடுகள், படையினர் பல தசாப்தங்களாக எவ்வாறு மக்களை நடாத்தினர் என்பது பற்றிய அனுபவங்களினதும், இறுதிக் கட்டப் போரின் போது இது தொடர்பான எமது மதிப்பீடுகள், 2ஆம் திகதி ஜனவரி மாதம் 2006ஆம் ஆண்டில் ஐந்து தமிழ் இளையவர்கள் திருகோணமலையில் வைத்துச் சுடப்பட்டமை, மூதூரில் ஏ.சி.எப். நிறுவன உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்தன.
இராணுவ நடவடிக்கைகளின் போது ஷெல் வீச்சினை மேற்கொண்டு குறித்த பிரதேசம் ஒன்றில் வாழும் அனைத்துச் சனத்தொகையினையும் இடம்பெயரச் செய்து, அதன் மூலம் அந்த நிலங்களைக் கைப்பற்றிப், பின்னர் அந்த நிலங்களின் சனத்தொகைப் பரம்பலினை இன ரீதியில் மாற்றியமைப்பதுவும், அரசினால் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனஞ் செய்யப்பட்ட பிரதேசங்கள் மீது இடைவிடாது ஷெல் தாக்குதல்களினை மேற்கொள்வதும் இராணுவ நடவடிக்கைகளின் போது நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்.
இந்த விடயங்கள் பற்றி ஐ.நாவினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை தனது அவதானங்களை முன்வைக்கும் என நாம் நம்புகிறோம்.
விடுதலைப் புலிகள் மக்களினைப் பணயமாக வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையினையும், அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற மக்கள் மீது சுடுகிறார்கள் என்ற உண்மையினையும் தமிழ்த் தலைமைகள் மறுத்தமை,
2009இல் நடைபெற்ற போரில் மாட்டிக் கொண்ட பொதுமக்களின் நிலைமையினை மேலும் மோசமாக்கியது. பொய் கூறுகின்ற, கொலை அரசியலினைத் தோற்றுவிப்பதில் தனக்கு இருந்த பங்கினைப் பற்றி சுய விமர்சனம் செய்ய மறுக்கின்ற இந்த நீண்ட வரலாறு, தமிழ் அரசியல் தலைமைகளைத் தொடர்ந்தும் தாக்கியபடி இருக்கிறது.
இந்தப் பித்தலாட்டம் இன்றும் தொடர்கிறது. முதலைமச்சர் விக்கினேஸ்வரனின் இன அழிப்புத் தீர்மானம் அரசுடன் பிரச்சினைகள் தொடர்பில் உரையாட முற்படும் தரப்புக்களை அரக்கர்களாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தச் செயற்பாடுகள் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தினைக் கைப்பற்றுவதனை நோக்கி முன்னெடுக்கப்படுகின்றன.
இன அழிப்பு (Genocide) என்ற பதப்பிரயோகம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் ஒரு அரசியல் சுலோகமாக இன்று பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் சுலோகத்தினைக் கையில் எடுத்துள்ள அரசியல்வாதிகள் பலரின் கைகள் இரத்தக்கறை படிந்தவை என்பதனையும் நினைவுப்படுத்த வேண்டும்.
பொதுமக்களின் நலன் குறித்து எந்த விதமான கரிசனையும் இல்லாது எல்லாத் தரப்பினராலும் இந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. விடுதலைப் புலிகள் பொதுமக்களினை இந்த அழிவு மிக்க போர்ப் பொறிக்குள் தொடர்ந்தும் சிக்க வைத்தனர்.
அத்துடன், பெருமளவான மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்படக்கூடிய சூழ்நிலைகளினையும் புலிகள் வேண்டுமென்றே உருவாக்கினர். ஏதோ ஒரு காரணத்துக்காகப் பொதுமக்களைத் தம்முடன் பலவந்தமாக அடையாளப்படுத்தக் கூடிய சூழலினைப் புலிகள் ஏற்படுத்தினர்.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் எல்லோரும் இராணுவத்தினரின் மூர்க்கத்தனத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையினப் புலிகள் ஏற்படுத்தினர்.
இந்த நிலைமையினால் ஏற்பட்ட பயம் மக்களினைப் புலிகளுடன் இணைவதற்கு நெருக்குவாரப்படுத்தியது. அல்லது இந்த நிலைமையினால் மக்கள் புலிகளுடன் சேர்ந்து அவர்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்றனர்.
விடுதலை என்ற பெயரில் 1995இல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாபெரும் இடப்பெயர்வினையும், 1990இல் வட பகுதியில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமையினையும் நாங்கள் மறந்து விட்டோமா?
மக்களினை அவர்கள் விரும்பாத போர்ச் சூழலில் விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப அகப்படச் செய்தமையினையும், மக்களினை அவர்கள் கொலை செய்தமையினையும், மக்களினை அவர்கள் ஒரு தற்கொலைக்கு ஒப்பான பாதையில் தள்ளியமையினையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்பினை மேற்கொண்டார்கள் என எம்மால் சொல்ல முடியுமா?
முஸ்லிம் மக்களினை வட பகுதியில் இருந்து விரட்டியமையும், முஸ்லிம் மக்களினைப் பள்ளிவாசல்களில் வைத்துக் கொலை செய்தமையினையும் விடுதலைப் புலிகள் புரிந்த இன அழிப்பு நடவடிக்கைகள் என எம்மால் சொல்ல முடியுமா?
இலங்கையில் இடம்பெற்ற போர் பற்றி ஒவ்வொரு தரப்பும் தமக்கு சார்பான விவரணத்தை முன்வைப்பர். ஆனால், அக்குரூரப் போரானது பல பரிமாணங்களைக் கொண்டது.
எமது கடந்த கால அரசியலினைப் பற்றியும், எமது தற்கொலை அரசியல் எவ்வாறு எம்மைப் பாதித்தது என்பது பற்றியும் மக்களாகிய நாம் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வதற்கு வேண்டிய வெளிகளினையும், சந்தர்ப்பங்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், எந்த அரசியல் எம்மை அழிவினை நோக்கிக் கொண்டு சென்றதோ அந்த அரசியல் மீளவும் வளருவதனை ஊக்குவிப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இலங்கை அரசு சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்குத் தவறியமையும், அது ஒரு சிங்கள அரசாக உருவாகியமையும், அதனால் சிறுபான்மையினர் அந்நியப்படுத்தப்பட்டதும் மறுக்க முடியாத உண்மைகள். இந்த உண்மைகளினைப் பல சிங்கள அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், எப்போதெல்லாம் இந்தப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டனவோ அப்போதெல்லாம் இரண்டு பகுதியிலும் உள்ள தீவிரத் தரப்புக்கள் அந்த முயற்சிகளைச் சீர்குலைத்தனர். தமிழ், சிங்கள, முஸ்லிம் தரப்புக்கள் திறந்த முறையில் மனத்தூய்மையுடன் உரையாடுவதும், எமது கடந்த காலத் தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில் செயற்படுவதும் மிகவும் அவசியம்.
இதுவே நன்மை அளிக்கக் கூடிய அரசியற் கலாசாரம் ஒன்றினை எம்மத்தியில் உருவாக்கும். இது நாட்டுக்குள்ளே இடம்பெறக் கூடிய செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியப்படும். இதற்காகப் பங்களிக்கக் கூடிய ஒவ்வொரு சமூகத்திலும் ஏற்கனவே உள்ள வளங்களினையும், சந்தர்ப்பங்களையும் நாம் இனங்காண வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக் கூடிய செயன்முறைகளில் நாம் ஈடுபடவேண்டும்.
ஐ.நாவின் ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை ஐ.நாவினது சாசனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். தன்னுடைய குடிமக்களின் உரிமைகளை இலங்கை பாதுகாக்கத் தவறின் அதன் விளைவுகளை இலங்கை உடனடியாகவோ அல்லது காலந் தாழ்த்தியோ நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
ஆனால், சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அந்த முயற்சிகளினை முன்னெடுப்போரின் குறுகிய பொருளாதார மற்றும் மேலாதிக்க நலன் அடிப்படையிலுருவாகும் பார்வைகளினால் மழுங்கடிக்கப்படுகின்றன.
அத்துடன், அவை நாட்டின் உள்ளே இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களுக்கும், ஆற்றல்களுக்கும் முன்னுரிமை அளிக்கப் பல சந்தர்ப்பங்களிலே தவறியுள்ளன. இவ்வாறான சர்வதேச முயற்சிகளினால் நாம் பெற்ற பலன்கள் குறைந்த அளவிலேயே முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கின்றன.
எங்களுடைய கவனம் ஜனநாயகச் செயற்பாடுகளினை உறுதி செய்வதன் மீதும், எல்லா சமூகங்களினையும் இணைத்த கூட்டணிகளை உருவாக்குவதன் மீதும் பிரதானமாக இருக்க வேண்டும். இதுவே எமது நாட்டினைப் பீடித்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமக்குள்ள வழியாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே தனக்குப் பேராதரவு வழங்கிய தமிழ் மக்களின் நீதியான கோரிக்கைகளை ஜனாதிபதி விரைவாக நிறைவேற்ற வேண்டும். போரின் காரணமாக உள் நாட்டிலே அகதிகளாக வாழும் பெருந் தொகையான மக்கள் தமது சொந்த நிலங்களிலே மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும்.
நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் இருப்போரும், வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு குற்றப் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
எல்லா சமூகங்களும் நல்லெண்ணத்துடனும், புரிந்துணர்வுடனும், சேர்ந்து வாழக்கூடிய வகையில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
எங்களுடைய உதவியுடன் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசுடன் உரையாட வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. தமிழ் மக்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் எது நன்மையானதோ அதனைப் பெறுவதற்காக நாம் பாடுபட வேண்டும். நாம் எதிர்த்தரப்பினரையும், அரசினையும் நிதானமும் பொறுமையுமற்ற முறையில் விமர்சிப்பது தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் தீவிர சிங்களத் தரப்புக்களுக்கு ஓர் ஊக்குவிப்பாக அமைகிறது.
தென்னிலங்கையில் உள்ள அரசியல் நிலைமைகள் உறுதியற்றனவாக இருக்கும் போது நாம் எமது அரசியல் செயற்பாடுகளின் விளைவுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இனப் பிரச்சினை தொடர்பில் சாதாரண சிங்கள மக்களுக்கு இருக்கக் கூடிய பயங்களை அகற்றுவதனை நோக்காகக் கொண்டு செயற்படுவதும், தமது கடந்த காலத் தோல்விகள் குறித்து வெளிப்படையாக இருப்பதுவும் தமிழ்த் தலைமைகளின் பொறுப்பாகும்.
போரின் போது இராணுவத்தினர் பொதுமக்களை மோசமாகக் கொலை செய்யக் கூடிய வகையில் தாக்குதல்களை மேற்கொண்டது குறித்தும், சரணடைந்தோரினைக் கொலை செய்தமை குறித்தும் சிங்கள மக்களிற் பலர் வெட்கப்படுகிறார்கள்.
இந்தச் சிங்களத் தரப்பினரை ஆதரித்து அவர்களது கரங்களினைத் தமிழ் அரசியல் பலப்படுத்தப் போகின்றதா? அல்லது அவர்கள் தென்னிலங்கையிலே தனிமைப்பட்டுப் போகும் வகையில் தமிழ் அரசியல் தனது செயற்பாடுகளை குறுகிய பார்வையுடன் முன்னெடுக்கப் போகின்றதா?
உச்சமான தீர்வினைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனப் பிடிவாதமாக இருந்த விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் உள்ள சமாதானத்தினை விரும்பிய தரப்புக்கள் பலவீனப்பட்டுப் போவதற்கு வழி செய்தனர்.
அதே சமயம், போர் நிறுத்த காலகட்டங்களில் அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு மாறாக, “மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுங்கள்” என்று சந்தர்ப்பவாதமாகக் கோரிக்கைகளை முன்வைத்து, அதன் மூலம் கிடைத்த வெளிகளை இராணுவக் கட்டமைப்பினை பலப்படுத்தவும், மக்களின் மீதான தமது பிடியை அதிகரிக்கவும் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திவந்தனர்; விடுதலைப் புலிகள் நிச்சயம் விட்டுக்கொடுப்பு உள்ளவர்களாக மாறுவார்கள் என்ற உண்மையான நம்பிக்கையில் தென்னிலங்கையில் உள்ள சமாதானத்தினை நேசிக்கும் தரப்புக்கள் விடுதலைப் புலிகளின் சில நிலைப்பாடுகளுக்குத் தமது ஆதரவினை வழங்கினர்.
ஆனால், பிரச்சினையினை இராணுவ நடவடிக்கை மூலமே தீர்க்க முடியும் என்ற தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குத் தரப்புக்களால் முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு வலுச் சேர்ப்பவையாகவே கள நிலைமைகள் அமைந்தன. இதனால், தென்னிலங்கையில் செயற்பட்ட கடும்போக்குத் தரப்புக்கள், சமாதானத்தினை விரும்பும் தர்ப்புக்களை மிக எளிதாக புறந்தள்ள கூடியதாயிற்று.
தென்னிலங்கையில் தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலை தளம்பல் மிக்கதாகவும், எளிதில் உடையக் கூடியதாகவும் உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற இன்றைய சூழலில், எம்மிடம் உள்ள நம்பிக்கையினை அழிக்கக் கூடிய, வரட்டுத்தனமான அரசியல் முயற்சிகளிலும், உரையாடல்களிலும் ஈடுபடுவதனை விடுத்து, மாணவர்கள் தமக்கிடையிலே வெளிப்படையாக உரையாடல்களில் ஈடுபடுவது எம்மத்தியில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
இடதுசாரித் தலைவர் வி. காராளசிங்கம் 1963இல் குறிப்பிட்டது போல, “தமிழ் அரசியல் தன்னுடைய அரசியலினை மீளாய்வுக்குட்படுத்தாது, அரசுக்கு எதிரான செயலூக்கம் அற்ற வெறும் கோபத்தையும், நம்பிக்கையின்மையையும் மையப்படுத்தி தன்னைத் தானே எரித்துக்கொள்ளும் பாழ் நிலமாகவே இருக்கப் போகிறதா?”
ஐ.நா. அறிக்கை தொடர்பில் துரோகம் இழைத்ததாக தமிழ் அரசியல் தலமைகளின் மீது குற்றம் சாட்டி, அந்தத் தமிழ் அரசியல் தலைமைகளினை அரசியலில் இருந்து ஒதுக்கிவிட முற்படுவோர் ஒரு சிறு தரப்பினரே என்பதில் ஐயமில்லை.
அவர்கள் மறைமுகமாகவும், மறைவாகவும் முன்வைக்கும் தமிழீழ சுலோகம், கால்ஸ் மார்க்ஸின் “வரலாற்றில் ஏற்படும் நிகழ்வுகள் முதலில் ஒரு துன்பியலாகவும் பின்னர் ஒரு கேலிக்கூத்தாகவும் அமைகின்றன” என்ற பிரசித்தமான வார்த்தைகளை எமக்கு நினைவூட்டுகின்றன.
இந்தக் கேலிக்கூத்தினை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் சக்திகளை இலகுவாக வெற்றிகொள்ள வேண்டுமாயின், தமது எதிர்த்தரப்பினர் மீது ஏவப்பட்ட கொலை அரசியலுக்கு தாம் மௌனமாக ஆதரவு வழங்கியதன் மூலம் தாம் விட்ட பாரிய தவறுக்காக பொதுமக்களிடம் தமிழ் அரசியல் தலைமைகள் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். அத்துடன், மக்கள் முன் இன்று இருக்கக் கூடிய கடுமையான சவால்கள் மற்றும் தெரிவுகள் என்பன பற்றி தமிழ் அரசியற் தலைவர்கள் இதய சுத்தியுடன் விளங்கப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கத்தினை சமத்துவமான முறையிலே முன்னெடுக்கக் கூடிய வகையில் அவர்கள் செயற்பட வேண்டும்.
‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்காக ராஜன் ஹூல் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), என். சிவபாலன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), அகிலன் கதிர்காமர் (சுயாதீன ஆய்வாளர், யாழ்ப்பாணம்), கே. சிறீதரன் ஆகியோர் Internal Political Power Bashing in the Name of Justice for War Victims என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.
Average Rating