தேனி மருத்துவ கல்லூரியில் பிரம்பை சுழற்றி மாணவர்களை வகுப்புக்கு விரட்டிய முதல்வர்!!
கையில் பிரம்புடன் வரும் ஆசிரியரை பார்த்தாலே கை காலெல்லாம் உதறல் எடுக்கும். அப்படி ஒரு காலம் இருந்தது. ‘‘ஒழுங்கா படிக்கலைன்னா வெளுத்துருங்க சார்’’ என்று பெற்றோரும் தன் பங்குக்கு ஆசிரியருக்கு ஊக்கம் கொடுப்பார்கள்.
அந்த காலம் இன்று மாறிவிட்டது. வாத்தியார் கையில் பிரம்பை எடுத்தாலே வேண்டாம் சார், அப்புறமா வருத்தப்படுவீங்க என்று மாணவனே மிரட்டுகிறான்.
கட்டுப்பாடு இல்லாமல் பள்ளியில் தொடங்கும் பயணம் கல்லூரி வரையிலும் நீடிக்கிறது. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதே அரிது. மருத்துவ மாணவர்கள் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தால்தான் நல்ல மருத்துவர்கள் சமுதாயத்துக்கு கிடைப்பார்கள்.
ஆனால் அவர்களும் வகுப்புக்கு மட்டம் போடும் மட்டகரமான சேட்டைகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்களில் 200–க்கும் மேற்பட்டோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தினசரி வகுப்புக்கு சரியாக வரவில்லை. இதுமட்டுமின்றி பயிற்சி டாக்டர்கள் 60 பேரும் உள்ளனர். இவர்களும் முறையாக வந்து பயிற்சி எடுப்பதில்லை. கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி திரியும் மாணவர்கள் பற்றி கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் ராஜமுத்தையா கல்லூரியில் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று சோதனையிட்டார். அப்போது பெரும்பாலான மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கல்லூரி அலுவலர்களுடன் விடுதிக்கு சென்று பார்த்தபோது அனைத்து மாணவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர். சிலர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தும், லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தனர்.
கையில் பிரம்புடன் வந்த முதல்வர் அனைத்து மாணவர்களையும் மிரட்டி ஒழுங்காக வகுப்புக்கு செல்லாவிட்டால் டி.சி.யை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று விடுங்கள். மருத்து வக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் எத்தனையோ மாணவர்கள் அலைந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் வீணடிக்கிறீர்களே என்று எச்சரித்தார்.
உடனே மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றனர். தினசரி வகுப்பிற்கு வராத மாணவர்கள் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கும்படியும் தேவையில்லாத காரணத்திற்காக விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.
அதே போல் பயிற்சி டாக்டர்களும் தினசரி மருத்துவக்கல்லூரிக்கு வர வேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating