பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!
கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது நிரம்பிய கவிதாவின் தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
எனவே கவிதா ராமநாதபுரத்தில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். கவிதாவின் தாய் மாமனான ஒண்டிப்புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (55) என்பவர் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்துக்கு வந்து கவிதாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்வார்.
2 நாட்கள் கோபால கிருஷ்ணன் வீட்டில் கவிதா இருப்பார். பின்னர் கோபால கிருஷ்ணன் அவரை ராமநாதபுரத்துக்கு கொண்டு வந்து விடுவார். திடீரென ஒரு நாள் ஒண்டிப்புதூருக்கு சென்றிருந்த கவிதாவுக்கு காய்ச்சல் அடித்தது.
எனவே கவிதாவை டாக்டரிடம் அழைத்து செல்வதாக கூறி கோபாலகிருஷ்ணன் கூப்பிட்டு வந்தார். டாக்டரிடம் செல்லாமல் தனது நண்பரான பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (70) என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அரசு ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியன். அவர் கவிதாவுக்கு காய்ச்சலுக்காக ஊசி போட்டார். இதில் கவிதா மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் கவிதாவை கற்பழித்தனர்.
மயக்கத்தில் இருந்து விழித்த கவிதா தனது அலங்கோலத்தை கண்டு அலறி துடித்தார். அப்போது அங்கிருந்து கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி கவிதாவை மிரட்டினர்.
இந்த மிரட்டலுக்கு பயந்து கவிதா நடந்ததை வெளியில் சொல்லவில்லை. இது கோபாலகிருஷ்ணனுக்கு சாதகமாக போனது. தனது நண்பர்கள் சிலருக்கும் கவிதாவை கோபாலகிருஷ்ணன் விருந்து படைத்துள்ளார்.
ஒரு நாள் ராமநாதபுரத்தை சேர்ந்தவரும் கோபாலகிருஷ்ணனின் நண்பருமான ராகம் கருப்பசாமி (45) என்பவர் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி கவிதாவை வேனில் கூப்பிட்டு சென்றார். போகும் வழியில் சிலிண்டர் எடுத்துச் செல்லலாம் என்று கூறி கவிதாவை கோவை சுந்தராபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு ‘‘எனக்கு கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் உன்னிடம் நடந்து கொண்டது தெரியும்’’ என்று கூறி மிரட்டி கவிதாவின் கற்பை சூறையாடி உள்ளார்.
மற்றொரு நாள் கோபால கிருஷ்ணன் பொள்ளாச்சிக்கு சென்று தேங்காய் வாங்கி வரலாம் என்று கூறி பஸ்சில் கவிதாவை அழைத்து சென்றார். அங்கு ஒரு தோப்பில் பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவரும் கோபால கிருஷ்ணனின் நண்பருமான கருப்பசாமியும் (60), ராகம் கருப்பசாமியும் இருந்தனர்.
அவர்கள் கவிதாவுக்கு சாப்பாடும், மயக்க மருந்து கலந்த குளிர்பானமும் வாங்கி கொடுத்தனர். இதில் மயங்கிய கவிதாவை 3 பேரும் கற்பழித்தனர். தோப்புக்கு சென்ற நாளுக்கு மறுநாள் தான் கவிதா விழித்துள்ளார். அப்போதும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.
இப்படி கோபாலகிருஷ்ணனின் கொடூரம் அதிகரித்துக் கொண்டே போனது. கவிதா மனம் உடைந்தார். கவிதாவுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் தனுஷ் (17) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. எனவே தனக்கு நேர்ந்ததை கவிதா கார்த்திக் தனுசிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து நான் காப்பாற்றுகிறேன் என்று கூறி கவிதாவை கார்த்திக் தனுஷ் சத்தியமங்கலத்துக்கு தனது அக்காள் வீட்டுக்கு அழைத்து சென்றார். திடீரென கவிதா மாயமானதால் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடி வந்தனர். அப்போது கார்த்திக் தனுசுடன் கவிதா சத்தியமங்கலத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று கவிதாவை மீட்டு ஒண்டிப்புதூரில் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
இதனால் கவிதா மேலும் மனம் உடைந்தார். சம்பவத்தன்று கோபால கிருஷ்ணனும் அவரது மனைவியும் பாப்பம்பட்டி பிரிவு கருப்பசாமியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். வீட்டில் இருந்த கவிதா அழுது கொண்டே இருந்தார்.
அங்கிருந்த கோபாலகிருஷ்ணனின் மகனிடம் கவிதா தனக்கு நேர்ந்ததை கண்ணீருடன் கூறினார். ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணனின் மகன் இதுபற்றி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். கருப்பசாமி தனது மகன் திருமணத்துக்கு மறு நாளே கைதானார். சத்திய மங்கலத்துக்கு கவிதாவை கடத்தி சென்றதாக கார்த்திக் தனுஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
கவிதா கற்பழிப்பு தொடர்பான வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதாக இருந்தது. இதற்காக கோபாலகிருஷ்ணன், பால சுப்பிரமணியன், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
தாய்–2 குழந்தைகள் கொலை வழக்கில் நேற்று தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நீதிபதி சுப்பிரமணியன் இந்த வழக்கில் வருகிற 20–ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
Average Rating