ராசிபுரம் அருகே கணவன் கண்முன் இளம்பெண் கற்பை சூறையாடிய 3 பேர் கைது!!
கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் சரளா (வயது 33). இவரது முதல் கணவர் செல்லகுமார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டு கடந்த 2 ஆண்டுகளாக சரளா பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குழந்தைகள் நெரூரில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சரளாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்ற வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.
2 பேரும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன் குறிச்சி பகுதியில் உள்ள கிழங்கு மில்லில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமகிரிப்பேட்டையை அடுத்த போதகாபட்டி தொட்டி நாயக்கர் தெருவில் வாடகை வீட்டுக்கு குடி வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு 10–30 மணிக்கு இவர்கள் இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தனர். போதகாபட்டி சுடுகாடு அருகே வந்த போது 5 வாலிபர்கள் அவர்களை வழிமறித்தனர். அவர்கள் பாலகுமாரை தாக்கினர். பின்னர் அவரது கண் முன்பே சுடுகாடு பகுதியில் உள்ள முட்புதரில் வைத்து சரளாவை கற்பழித்தனர். கொடியவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமான சரளா மயங்கி விழுந்து விட்டார்.
நேற்று அதிகாலை கணவன்–மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாமகிரிப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் சரிவர விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களை கவுன்சிலர் தலைமையில் ஒரு கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஊரை காலி செய்து விட்டு கரூர் செல்ல முடிவு செய்தனர். நடந்த சம்பவம் குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்து விட்டு ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதில் யாரோ ஒருவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை தீவிரமானது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் சூப்பிரண்டு சந்திரமோகன், ராசிபுரம் டி.எஸ்.பி ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் ராஜா ரண வீரன், சீனிவாசன், ஜெகநாதன் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷகிரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஊருக்கு புறப்பட்டு சென்ற சரளாவையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி விட்டு அவரை மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தி கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் சரளாவை கற்பழித்த நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த 3 வாலிபர்களை கைது செய்தனர். கைதான வாலிபர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1) ஜெய்சூர்யா (20). தனபால் என்பவரின் மகன்.
2) கணேஷ்குமார் (25). பழனிசாமி என்பவரின் மகன்.
3) பிர்லா (25). சின்னசாமி என்பவரின் மகன்.
மேலும் இந்த கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அஜீத் (22), ராஜேஷ் (20) ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating