இவனுக்கு தண்ணில கண்டம்!!

Read Time:7 Minute, 30 Second

Untitled-113S.N.சக்திவேல் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தமிழக வீடுகளுக்கு ஏற்கனவே அறிமுகமான தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு தண்ணில கண்டம்.

தீபக்கின் ஜோடியாக நேஹா அறிமுக கதாநாயகியாகவும், இளங்கோ குமரவேல், செண்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நடனக் கலைஞர் சேண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

லோக்கல் சேனலில் தொகுப்பாளராக இருக்கும் தீபக், பிரபல சேனலில் சேர்ந்து பிரபல தொகுப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வரும் தீபக்கிற்கு, பிரபல ’பிங்க்’ தொலைக்காட்சியில் பணிபுரியும் இளங்கோ தொகுப்பாளர் வேலை வாங்கித் தருகிறார்.

ஆனால் அந்த நிகழ்ச்சி தான் தீபக்கின் எதிரியாகவே அமைந்துவிடுகிறது. ‘வெட்கப்படாமல் கேளுங்கள்’ புரோகிராம் பன்றது நீங்கதான என்று போகும் இடமெல்லாம் மக்கள் கேட்க மற்றவர்கள் சிரிக்க கோபத்தின் உச்சிக்கே போகிறார் தீபக்.

பணக்கார பெண்ணை திருமணம் செய்து தனி தொலைக்காட்சி சேனல் துவங்கலாம் என்று திட்டமிட்டு கடன் வாங்கி திருமண ஏற்பாடு செய்ய, மணப்பெண் ஓடிப்போய் திருமணம் நின்றுவிடுகிறது.

ஊரிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி வரும் தீபக் பேருந்தில் நேஹாவை சந்தித்து பேசி காதலில் சிக்குகிறார். தொடர் சந்திப்புகளில் காதல் வளர்கிறது.

சொந்த திறமையால் முன்னுக்குவரலாம் என்று ஒரு அற்புதமான நிகழ்ச்சியை திட்டமிட்டு, அலுவலகத்தில் கொடுக்க தீபக்கிடமிருந்து அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்கிறார் வடநாட்டிலிருந்து வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். திருமணத்திற்காக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாமல் வட்டிக்காரனிடமும் மாட்டிக்கொள்கிறார் தீபக்.

தனது காதலியான நேஹாவை வேறு ஒருவனுடன் ஹோட்டலில் பார்த்துவிட்டு, நேஹாவிற்கு ஃபோன் செய்ய ‘நான் கோவில்ல இருக்கேன். அப்பறம் பேசுறேன்’ என்று கூறி ஃபோன் கட் செய்யப்படுகிறது.

இப்படி பல பிரச்சினைகளும் சூழ்ந்திருக்க ஒருநாள் சரக்கடித்துவிட்டு பாரிலும், ஊரிலும் பல பிரச்சனைகளை செய்து போலிஸ் ஸ்டேஷனில் கண்விழிக்கின்றனர் தீபக்கும் அவரது இரு நண்பர்களும்.

இரவு என்ன நடந்தது என்பது தெரியாமல் வழக்கம்போல வாழ்க்கையைத் தொடங்க தீபக் எதிரிகளாக நினைக்கும் வடநாட்டு தொகுப்பாளர், வட்டிக்காரன் ஆகியோர் இறந்துவிடுகின்றனர்.

அத்துடன் ஒவ்வொரு இறப்பின்போதும் மர்ம நபர் ஃபோன் செய்து ‘நீ சொன்ன மாதிரியே கொலை பண்ணிட்டேன்’ என தகவல் சொல்லவும் வெளவெளத்துபோகிறார் தீபக்.

யார் அந்த கொலைகளை செய்வது? அவர்கள் ஏன் தீபக்கிற்காக கொலைகளை செய்ய வேண்டும் எனபதையெல்லாம் சரவெடி காமெடிகளுடன் விளக்குகிறது கடைசி ஒரு மணிநேரம்.

இரண்டாம் பாதியில் வெடித்து சிரிக்க இரசிகர்களை முதல் பாதி முழுக்க தயாராக்கியிருக்கிறார் இயக்குனர். எங்கும் எந்த தவறும் நடக்காமல் காட்சிகள் சரியாக அமைக்கப்பட்டிருப்பதற்கு திரைக்கதையும், எடிட்டிங்கும் உதவியிருக்கிறது.

செண்ட்ராயன், இளங்கோ குமரவேலை வைத்து அவர்களால் முடிந்த வேலையை மட்டும் சிறப்பாக வாங்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் வருகிறார் ராஜேந்திரன். ஆனால் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிடுகிறார் அந்த மனிதர்.

’மார்க்கு முன்வெச்ச கால பின்வெக்கமாட்டாண்டா’ , ‘சின்ன பசங்க தொழிலுக்கு வந்ததால நடுவுல கொஞ்ச நாள் காமெடி பீஸ் ஆகிட்டேன். இந்த தடவ ரீஎண்ட்ரி எப்டி இருக்கபோது பாரு’ என கர்ஜிக்கும் ராஜேந்திரன் துப்பாக்கியும் கையுமாக கிளம்ப, எத்தன தலை உருளபோகுதோ என்று யோசிக்கவைக்கிறார்.(நான் கடவுள் ராஜேந்திரன் மறக்கக் கூடியவரா?)

தீபக், இளங்கோ குமரவேல், செண்ட்ராயன் கூட்டணி செய்யும் காமெடிகளைவிட சில காட்சிகளில் வரும் M.S.பாஸ்கர் அடித்த லூட்டிகள் அதிக கைதட்டல்களை பெறுகின்றன. நடனக் கலைஞர் சேன்டி ஒரு சில காட்சிகளில் வந்தாலும், ‘அடடே! நல்லா நடிக்கிறாரே. டைரக்டர்ஸ் அவரையும் கொஞ்சம் கவனிங்கப்பா’ என சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வளவளவென பேசிக்கொண்டிருக்கும் தீபக் நடிகராக வளர்ந்திருப்பதுடன், நடிப்பும் நன்றாகவே கைகூடியிருப்பது பாராட்டப்படவேண்டியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

’குடி குடியைக் கெடுக்கும்’ என்று டைட்டில் கார்டுக்கு முன்னால் ஹீரோவை பேசவைத்துவிட்டு படம் முழுக்க பாட்டிலும் கையுமாக அலையவிடும் படங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், குடியைப் பற்றி படம் எடுத்தாலும் ஒரே ஒரு டாஸ்மாக் காட்சியை வைத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்குறியவர்.

குடிப்பதால் சீரழியும் குடும்பங்களைப் பற்றி சொல்வதென்றால் ’டாஸ்மாக் காண்டம்’ என்று தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்வதோடு, அது எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதை காமெடி சரக்கு கலந்து நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காசிமேட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து சாவு!!
Next post எட்டி உதைத்தவரை கூட்டமாக வந்து பழிவாங்கிய நாய்!!