திருமணம் செய்ய மறுப்பு: பொதுமக்கள் உதவியுடன் கோவிலில் காதலனை திருமணம் செய்த ஆசிரியை!!
கோவை அருகேயுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் உஷா (வக்கீல்). இவர் நேற்று மாலை 6½ மணியளவில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மரப்பாலம் அருகே சென்றபோது ரோட்டோரத்தில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் சரமாரியாக வாக்குவாதம் செய்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த உஷா அவர்களிடம் சென்று விசாரித்தார்.
அப்போது அந்த இளம்பெண் கோவை சொக்கம்புதூர் சண்முகா நகரை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகள் மஞ்சு (26) என்பதும், தனியார் பள்ளி ஆசிரியை என்பதும் தெரிய வந்தது.
இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர் கொடுமுடியை சேர்ந்த ராமசந்திரன் மகன் சதிஷ்குமார் (28) என்பதும் பொறியியல் பட்டதாரியான இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் காதல் ஜோடி. கடந்த 8 மாதங்களாக காதலித்து வருகின்றனர். மஞ்சுவின் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு குடிவந்த சதிஷ்குமார் மஞ்சுவை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி அவருடன் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மஞ்சுவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதுகுறித்து காதலன் சதிஷ்குமாரை சந்தித்து மஞ்சு கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் சதிஷ்குமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு காதலன் சதிஷ்குமாரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உஷா அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் தெரிவித்தார்.
அங்குகூடிய பொதுமக்கள் காதல் ஜோடியினரிடம் விசாரித்தனர். அப்போது சதிஷ்குமார் ஆசிரியை மஞ்சுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மரப்பாலம் அருகேயுள்ள விநாயகர் கோவிலுக்கு காதல் ஜோடி சதிஷ்குமாரையும், மஞ்சுவையும் அழைத்து சென்ற பொதுமக்கள் அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மாலை மாற்றிய சதிஷ்குமார் தாலி கட்டி மஞ்சுவை மனைவியாக்கி கொண்டார். போராடி காதலனை கணவனாக அடைந்த மஞ்சு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்தார். பின்னர் காதல் ஜோடியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி போலீஸ் நிலைய ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியின் பெற்றோர் மற்றும் உறவினரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு வந்த இருவீட்டாரிடமும் போலீசார் சமரசம் பேசினர். காதல் ஜோடியை பெற்றோர் ஏற்றுக்கொண்டு அவர்களை அழைத்து சென்றனர்.
Average Rating