பிரபாகரனுடன் பேசுவேன்: அதிபர் மகிந்தா ராஜபக்ஷே

Read Time:3 Minute, 51 Second

mahinda_rasabucksay.jpgபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பேச ஆர்வமாக உள்ளேன். அது முடியும் என நம்புகிறேன் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கூறியுள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நாம் அனைவரும் மனிதர்கள். தமிழர்களும், சிங்களர்களும் இலங்கை குடிமக்கள். அது பிரபாகரனாக இருந்தாலும் சரி, ராஜபக்ஷேவாக இருந்தாலும் சரி, அனைவரும் இலங்கையின் குடிமக்கள்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரபாகரனுடன் பேச ஆர்வமாக உள்ளேன். அது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. என்னால் பிரபாகரனுடன் நேருக்கு நேர் பேச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையின் குடிமக்கள் என்ற முறையில் இருவரும் நேருக்கு நேர் முகம் பார்த்து அமர்ந்து பேசலாம், பேச முடியும். எனவே விடுதலைப் புலிகளுக்கு நான் விடுக்கும் செய்தி, பேசலாம், வாருங்கள். பேசினால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கை.

என்ன மாதிரியான ஆட்சி முறை வேண்டும், அரசு நிர்வாகத்தை எப்படி நடத்தலாம் என்பது உள்பட அனைத்து விஷயங்களையும் விவாதித்து முடிவு செய்யலாம். இதைச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அவர்களிடம் கூறி விட்டு பேச்சுக்கு வருமாறு நான் கூற விரும்பவில்லை. எல்லாவற்றையும் விரிவாக, பகிரங்கமாக, மனம் விட்டுப் பேசலாம் என்றுதான் கூறுகிறேன்.

அவர்களுக்கு கட்டாயத்தைக் கொடுத்து பேச வருமாறு நான் அழைக்கவில்லை. திறந்த மனதுடன் வந்து பேச விடுதலைப் புலிகள் முன் வர வேண்டும். இலங்கையில் அமைதி நிலவுதற்கான யோசனைகளை எடுத்துரைக்க நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்.

அந்தக் குழுவில் சிங்களர்களும் உள்ளனர், தமிழர்களும் உள்ளனர், முஸ்லீம்களும் உள்ளனர். பல்துறை அறிஞர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டன் பாலசிங்கம் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் இடம்பெற்றுள்ள விவரங்கள் குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அவர்கள் விரக்தியில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை இப்போது அனுமானிக்க முடியாது. ராஜீவ் கொலைக்காக வருத்தம் தெரிவித்து பாலசிங்கம் கூறியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் விரக்தி அடைந்திருக்கலாம் என ஊகிக்கலாம். அதே சமயம் பேட்டியின் சாராம்சத்தை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது என்பது எனது எண்ணம்.

கருணா குழுவினர் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட இலங்கை அரசு அனுமதிக்காது. இந்த விஷயத்தில் விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டும், பயமும் தேவையில்லாதது என்றார் ராஜபக்ஷே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை
Next post இஸ்ரேலுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகள் கெடு