ரூ.46 கோடி மோசடி செய்த பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை!!
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது.
மோசடி பெண் தொழில் அதிபரின் பெயர் நர்மதா (வயது 36). இவர் சென்னை கோயம்பேடு, பிருந்தாவன் நகர், முல்லை தெருவில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். நர்மதா மீது நாளுக்கு நாள் புகார்கள் குவிந்து வருகிறது. இதுவரை மொத்தம் 115 பேர் வரை புகார் கொடுத்திருக்கிறார்கள்.
புகார் கொடுத்தவர்கள் அத்தனை பேரும் லட்சக்கணக்கில் ஏமாந்துள்ளதாக மனுக்களில் தெரிவித்துள்ளனர். ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம் என்று பணத்தை நர்மதாவின் கவர்ச்சியான பேச்சில் மயங்கி, அவரது காலடியில் கொண்டு கொட்டி இருக்கிறார்கள்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவரும் மனு கொடுத்தவர்களில் ஒருவர் ஆவார். அவர் ரூ.11 லட்சம் ஏமாந்துள்ளார். கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். நர்மதாவின் கவர்ச்சியான பேச்சில் ஏமாந்து பேராசைப்பட்டு, 11 லட்சத்தை பறிகொடுத்து நிற்கிறேன் என்று யுவராஜ் வருத்தத்தோடு பேசினார். அவர் கூறியதாவது:-
நர்மதா ஏமாற்றினார் என்று சொல்வதை விட நாங்கள் ஏமாந்து நிற்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். கேள்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது. ரூ.1 லட்சம் கட்டினால், 3 ஆண்டுகளில் ரூ.2 லட்சமாக திருப்பித்தருகிறேன் என்று நர்மதா ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதை நம்பிதான் நான் ரூ.11 லட்சம் கட்டினேன். அந்த ரூ.11 லட்சமும் 3 ஆண்டுகளில் எனக்கே 2 மடங்காக திரும்பி வந்து விடும் என்றும், அதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் வங்கி காசோலைகளையும் கொடுத்தார். அது தான் அவரது ஏமாற்று வித்தை. பேச்சில் மயக்கி அத்தனை பேருக்கும் பட்டை நாமம் போட்டு விட்டார்.
நர்மதாவின் மோசடி லீலைகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வந்துள்ளது. ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி, அவர் தனது வாடிக்கையாளர்கள் 1,100 பேரிடம் ரூ.100 கோடி வரை சுருட்டி இருக்க வேண்டும்.
ஏமாந்த அனைவருக்கும் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுவதாக நர்மதா சொல்லி இருப்பதாக போலீசார் சொல்கிறார்கள். பணம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சிதான்.
இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.
சிறையில் இருந்த நர்மதாவையும், அவரிடம் மேலாளராக வேலை பார்த்த நடன நடிகர் பரத்குமாரையும் (வயது 24) 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து நேற்று முதல் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, நர்மதாவின் மோசடி லீலைகள் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Average Rating