எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல்ஜோடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது!!
நெல்லை மாவட்டம் அம்பை சந்தை மடம் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ஆறுமுக கார்த்திக் (வயது 25). இவர் அம்பை சந்தை அருகே பழக்கடை வைத்து உள்ளார். அம்பையை அடுத்த சாட்டுப்பத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் இந்துமதி (20). இவர் இடைகால் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் ஆறுமுக கார்த்திக்குக்கும், இந்துமதிக்கும் இடையே காதல் உண்டானது. இருவரும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பலத்த எதிர்ப்பை மீறி காதல் ஜோடி கடந்த மாதம் 11 ந்தேதி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது.
பின்னர் சென்னைக்கு சென்ற அவர்கள் அங்கு ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி முதலில் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் புகுந்தனர். போலீசார் அவர்களை அம்பை மகளிர் போலீசுக்கு அனுப்பி வைத்தனர். அம்பை போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தியதில் இருவருக்கும் திருமண வயது எட்டியதால் காதலர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ அனுமதித்தனர்.
இதற்காக இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச போலீசார் திட்டமிட்டனர். அப்போதும் பெண் வீட்டார் தொடர்ந்து காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு காதல் ஜோடியை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து காதல் ஜோடி வேறு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல திட்டமிட்டது. இதற்காக நேற்று ஒரு வாடகை காரில் மதுரை செல்ல திட்டமிட்டு புறப்பட்டனர். இதை பெண் வீட்டார் நோட்டமிட்டனர்.
காதல் ஜோடியை பிரிப்பதற்காக காதலனை கொலை செய்வது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். கார் சென்ற திசையில் காரின் பின்னால் மற்றொரு கார் மற்றும் பைக்குகளில் துரத்தினர். கார் நெல்லையை கடந்து மதுரை பைபாஸ் சாலையில் சென்றது. இந்த வேளையில் பின்னால் வந்த இந்துமதியின் தந்தை மற்றும் உறவினர்கள் மற்றொரு காரில் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் காதல் ஜோடியை துரத்தினர்.
சினிமாவில் வருவது போன்ற இந்த துரத்தல் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு இடத்தில் காரை மடக்கிய பெண் வீட்டார் காதல் ஜோடியை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் கார் நைசாக தப்பி பைபாசில் சீறிப்பாய்ந்தது. கங்கைகொண்டான் பகுதியை தாண்டி சென்றபோது அங்கு பாதுகப்புக்கு நின்ற போலீசார் இதை பார்த்தனர்.
போலீசாரை கண்டதும் காதல் ஜோடி அவர்களிடம் தஞ்சம் அடைந்து நடந்த விவரத்தை கூறியது. இதை பின்னால் துரத்தியபடி வந்த கும்பல் பார்த்து அங்கிருந்து தப்பியது. உடனே போலீசார் அவர்களை பின்னால் துரத்தினர். சிறிது தொலைவில் போலீசார் விரட்டி சென்று பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அம்பை சாட்டுப்பத்தை சேர்ந்த முருகன்(27), கண்ணன்(31) என்பது தெரியவந்தது. இந்துமதியின் உறவினர்களான அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் கண்ணன் வக்கீலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது தங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்ற இந்துமதியையும், அவளை காதலித்த ஆறுமுக கார்த்திக்கையும் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் துரத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற இந்துமதியின் தந்தை மாரியப்பன் உள்பட 11 பேரை தேடி வருகின்றனர். காதல் ஜோடியை போலீசார் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating