சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருள் தயாரிக்கும் செயற்கை இலை!!
பிரதான சக்தி முதலான சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியை அறிவியலின் துணைகொண்டு வெவ்வேறான சக்தி வடிவங்களாக மாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன. ஆதவனின் கதிர்ப்புக்கள் சுமார் 81000 TW (Tera Watt) அளவிலான சக்தியை புவி மேற்பரப்புக்குக் கொண்டுவருவதாக அண்ணளவான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இச்சக்தி தற்போதைய உலகின் மின்சக்தித் தேவையின் 5000 மடங்கு அளவினதாகும். புவிக்கு வரும் சூரியசக்தியை இயற்கையான தாவரங்கள் தமது ஒளித்தொகுப்புப் பொறிமுறை வாயிலாக தமது உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்துகின்றன.
இதுதவிர, செயற்கையாக ஆக்கப்பட்ட சூரியகலங்கள் போன்றவையும் சூரியஒளியைப் பெற்று அதனை மின்சக்தியாக மாற்றுகின்றன. மிகுதியான சூரியசக்தி எதுவித பயன்மிக்க சக்தி வடிவமாக மாற்றப்படாமல் இருக்கின்றது. இந்த இலவசமாகக் கிடைக்கும் சூரியசக்தியினை பயனுள்ள சக்தி வடிவங்களாக மாற்றும் பொறிமுறைகளைக் கட்டமைக்கும் தேடல்கள் தொடர்கின்றன.
அறிவியலின் ஆய்வுகளால் வடிவமைக்கப்பட்ட சூரியகலங்கள், சூரியசக்தியினை மின்சக்தியாக மாற்றித்தருகின்றபோதிலும் இதிலிருந்து கிடைக்கப்பெறும் வினைத்திறன் போதியதாகக் காணப்படவில்லை. அத்துடன் இச்சூரியகலங்களை கட்டமைக்கும் உற்பத்திச் செலவும் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. சூரியகலங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கிலான ஆய்வுகளும் உற்பத்திச் செலவினைக் குறைக்கும் புதிய வழிமுறைகள் குறித்த தேடல்களும் தொடர்கின்றன.
இது தவிர, சூரியசக்தியை மின்சக்தியாக மாற்றும் பொறிமுறையல்லாமல், வேதிப் பதார்த்தங்களில் உள்ளடங்கும் சக்தி வடிவமாக மாற்றும் வழிமுறைகள் குறித்து அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான ஆய்வொன்றின் முடிவொன்று பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகியுள்ளது.
சூரியசக்தியை வேறொரு வேதிச்சக்தியாக மாற்றும் வழிமுறை தொடர்பான ஆய்வுகளை, அமெரிக்காவின் ஹாவேட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை அறிவியல் பீடம், மருத்துவ பீடம் மற்றும் Wyss நிறுவனம் ஆகியவற்றினைச் சேர்ந்த ஆய்வாளர் குழு மேற்கொண்டு வந்தது. மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து, சூரியசக்தியினை திரவ எரிபொருளாக பயன்படத்தக்க ஐசோபுறப்பனோல் (Isopropanol) வேதிப் பதார்த்தத்தினை ஆக்கும் பொறிமுறை வெற்றிகரமாகக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆய்வு குறித்த விபரங்கள், கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வெளியான Proceedings of the National Academy of Sciences of the United States of America ஆய்விதழில் Efficient Solar-t–o-F–uels Production from a Hybrid Microbial Water -Splitting Catalyst System தலைப்பிலான கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்விற்கு அமெரிக்க விமானப்படையின் ஆய்வுகளுக்கான அலுவலகம், தேசிய அறிவியல் நிறுவகம் என்பவை நிதியுதவி அளித்திருந்தன.
சூரியசக்தியை புதிய சக்தி வடிவில் மாற்றும் புதிய வழிமுறையில் இரு ஊக்கிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பக்டீரியா என்பவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊக்கிகளான கோபோல்ட்-போறேட் (Cobalt-Borate) மற்றும் கலப்புலோகம் நிக்கல்-மொலிப்டெனம்-நாகம் (Nickel- Molybdenum -Zinc alloy) என்பவற்றின் முன்னிலையில், கிடைக்கப்பெறும் சூரிய ஒளியின் சக்தியால், நீர் மூலக்கூறு ஐதரசன் மற்றும் ஒட்சிசன் வாயுக்களாக உடைக்கப்படுகின்றது. பின்னர், வெளிவரும் ஐதரசன் வாயுவினை மரபணு மாற்றப்பட்ட பக்டீரியாவான Ralstonia eutropha நுகர்கின்றது. இந்நுகர்வின்போது ஐதரசன் வாயு பக்டீரியாவின் உடலில் அனுசேபத் தொழிற்பாட்டிற்கு உட்பட்டு, ஐதரசன் அயனாகப் பிளக்கப்பட்டு, காபனீரொட்சைட் வாயுவுடன் இணைக்கப்படுகின்றது. இது இறுதியில் ஐசோபுறப்பனோல் (Isopropanol) ஆக மாறுகின்றது. தாவரத்தில் நடைபெறும் ஒளித்தொகுப்பில் நுகரப்படும் அனைத்து தாக்குபொருள்கள் (சூரிய ஒளி, நீர் மற்றும் காபனீரொட்சைட்) அனைத்தும் இப்பொறிமுறையிலும் ஈடுபடுத்தப்படுவதால், புதிய பொறிமுறைத் தொகுதி ‘செயற்கை இலை’ என அழைக்கப்படுகின்றது.
இங்கே உருவாக்கப்பட்ட ஐசோபுறப்பனோல் ஆனது பெற்றோலிய எரிபொருள் உற்பத்தித் தயாரிப்பில் பக்கவிளைவாக வெளிவரும் ஒரு வேதிப்பதார்த்தமாகும். இதனை நிலக்கரியிலிருந்தும் உற்பத்தி செய்யமுடியும். மேற்குறிப்பிட்ட அணுகுமுறையில் ஐசோபுறப்பனோல் இனை உற்பத்தி செய்கையில் வளிமண்டல காபனீரொட்சைட் உபயோகிக்கப்படுவதுடன், உற்பத்திப் பொறிமுறைக்கான சக்திக்கு சூரியசக்தி நுகரப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சூரிய ஒளியிலிருந்து வேதிப்பதார்த்தம் ஆக்கும் தொகுதியின் வினைத்திறன் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள பொறிமுறையானது கிடைக்கப்பெறும் சூரியசக்தியின் 1 சதவீதத்தினை மாத்திரமே ஐசோபுறப்பனோல் வேதிப்பதார்த்தத்தில் சக்தியாகச் சேமிப்பதாகக் காணப்படுகின்றது. இந்த வினைத்திறனை 5 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆய்வாளர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
அ.ஹரின் சுலக்ஸ்ஸி,யாழ். நகர்
Average Rating