காதலை எதிர்த்து அவசர திருமணம்: கோவையில் காதலனுடன் விஷம் குடித்த பெண்!!
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சரஸ்வதி (வயது 23). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதையடுத்து மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்றது. உறவினர் வகையில் சென்னையை சேர்ந்த அசோக் என்ற வாலிபரை மாப்பிள்ளையாக தேர்வு செய்தனர். இன்று (திங்கட் கிழமை) சென்னையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வினியோகித்தனர். நேற்று பெண் வீட்டார் திருமணத்துக்காக சென்னை புறப்பட தயாராக இருந்தனர். இந்த நிலையில் அலங்காரம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரை காணாமல் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சரஸ்வதியை தேடிச் சென்ற போது அவர் மாயமானது தெரிய வந்தது. இதனால் திருமண வீடு பரபரப்புக்குள்ளானது. உறவினர்கள் ஆளுக்கொரு திசையில் சரஸ்வதியை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே சென்னையில் மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண் மாயமான தகவல் தெரியாமல் திருமணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர்.
மாப்பிள்ளை அழைப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் மாயமான மணப்பெண் சரஸ்வதி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது பெற்றோர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் புதுப்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். அப்போது கோவை ரேஸ்கோர் நடைபாதையில் வாலிபரும், இளம் பெண்ணும் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே சிங்கா நல்லூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு விஷம் குடித்து சிகிச்சை பெறுவது மாயமான புதுப்பெண் சரஸ்வதி என்பதும், அந்த வாலிபர் அவரது காதலர் கார்த்தி என்பதும் தெரிய வந்தது. சரஸ்வதியிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் கூறியதாவது:–
நான், சிங்காநல்லூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை கடந்த சில மாதமாக காதலித்து வந்தேன். என் காதல் விவகாரம் எனது வீட்டாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவசரம், அவசரமாக எனக்கு உறவுமுறையில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் என் எதிர்ப்பையும் மீறி சென்னையில் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தனர்.
இந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் இருந்த நான் எனது வீட்டார் நேற்று சென்னைக்கு புறப்பட்டு செல்லும் சமயத்தில் வீட்டில் இருந்து வெளியேறினேன். பின்னர் எனது காதலனுக்கு தகவல் தெரிவித்தேன். அவர் அங்கு வந்தார். நாங்கள் எங்காவது சென்று புதிதாக வாழ்க்கை தொடங்க முடிவு செய்தோம். ஆனால் போலீசாரும், பெற்றோரும் எங்களை தேடுவதை அறிந்தோம்.
அவர்கள் பிடியில் சிக்கினால் எங்கள் இருவரையும் பிரித்து விடுவார்கள் என அஞ்சினோம். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். எனவே நாங்கள் இருவரும் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம்.
வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிய எங்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேற்கண்டவாறு சரஸ்வதி கூறினார். பின்னர் தயவு செய்து எங்களை பிரித்து விடாதீர்கள் என போலீசாரிடம் கெஞ்சினார்.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமணம் நின்று விட்டதாக அறிவித்தனர். இதனால் திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating