காதல் விவகாரம்: மகளின் காலில் விழுந்து தொழில் அதிபர் கதறல்!!
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். தொழில் அதிபர். இவரது மகள் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் (வயது 25). பி.டெக்.. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவருக்கும் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இப்ராஹிம் (27) என்ற வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. காதலர்கள் பல்வேறு இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் காதல் விவகாரம் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் வீட்டுக்கு தெரிய வந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாங்கள் ஒன்று சேர முடியாது என எண்ணிய லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் வீட்டில் இருந்து வெளியேறி காதலனுடன் சென்று விட்டார்.
மகளை காணாது அதிர்ச்சியடைந்த ஜேசுதாஸ் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என்று செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் காதலன் இப்ராஹிம் உடன் வீட்டை விட்டு வெளியேறி ஆயிஷா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் செய்து கொண்டு திருச்செந்தூர் அருகே காயல்பட்டிணம் என்ற இடத்தில் இப்ராஹிம் உடன் குடும்பம் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஜேசுதாஸ் கோவை ஜே.எம்.5–வது நீதிமன்றத்தில் தனது மகள் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பினை ஆசை வார்த்தைகள் கூறி இப்ராஹிம் கடத்தி சென்று விட்டதாகவும், மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி செல்வக்குமார் மாயமான லீப்லின் ரஜனி குயின் யாஸ்பினை கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் காயல்பட்டிணம் சென்ற போலீசார் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் மற்றும் இப்ராஹிமை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
இதன்காரணமாக லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை கோர்ட்டில் குவிந்திருந்தனர். இப்ராஹிமுக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் வந்திருந்தனர்.
போலீசார் காதல் ஜோடியை கோர்ட்டுக்கு இன்றும் மதியம் 12 மணிக்கு மேல் அழைத்து வந்தனர். அப்போது லீப்லின் ரஜனி குயின் யாஸ்பினின் பெற்றோர் அவரை கண்டதும் கதறியழுதபடி மகளை தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அதற்கு லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த அவர்கள் மகள் என்றும் பாராமல் அவரது காலில் விழுந்து கதறினர். ஆனால் லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் பெற்றோரின் கதறலை பொருட்படுத்தாமல் காதலன் இப்ராஹிமுடன் கோர்ட்டுக்குள் சென்றார். ஜே.எம்.5–வது கோர்ட்டில் நீதிபதி செல்வக்குமார் முன்பு லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் நீதிபதி தனிஅறையில் ரகசிய வாக்குமூலம் பெற்றார். பின்னர் தீர்ப்பு அளித்தார். அதில் பெண்ணுக்கு 25 வயது பூர்த்தியாகிவிட்டதால் அவர் சுயமாக முடிவெடுக்கலாம். எனவே லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் யாருடன் செல்ல விரும்புகிறாயோ அவர்களுடன் அவர் செல்ல கோர்ட்டு அனுமதிக்கிறது என்றார்.
இதையடுத்து லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் தனது காதல் கணவர் இப்ராஹிம் உடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த லீப்லின் ரஜனி குயின் யாஸ்பினின் பெற்றோர் அழுதபடியே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். லீப்லின் ரஜனி குயின் யாஸ்பின் தனது கணவருடன் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating