3 வயது சிறுவன் அடித்துக்கொலை?: தாயிடம் விசாரணை– கள்ளக்காதலன் ஓட்டம்!!
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரோஜா(வயது 33). இவர்களது 3 வயது மகன் முத்து. பெருமாள் தனது மனைவி மற்றும் மகனை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
அதன் பின்னர் கோவை வந்த சரோஜா கணபதி வி.ஜி.ராவ்நகர் விவேகானந்தர் வீதியில் தனது மகனுடன் வசித்து வந்தார். வாழ்க்கை படகை ஓட்ட கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சரோஜாவுக்கும் சின்னசேலத்தை சேர்ந்த மாட்டுத்தரகர் மகேந்திரன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மகேந்திரன் அடிக்கடி கோவை வந்து சரோஜாவுடன் உல்லாசமாக இருப்பார். ‘நீயின்றி நானின்லை’ என்ற நிலைக்கு இருவரும் வந்துவிட்டனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சென்ற மகேந்திரன் அங்கு தனது கள்ளக்காதலியை அழைத்தார். சரோஜாவும் மறுப்பேதும் தெரிவிக்காமல் தனது மகன் முத்துவை அழைத்துக்கொண்டு பள்ளிபாளையம் சென்றார். அங்கு தனது ஆசைக்காதலனுடன் உல்லாசமாக இருந்தார். பின்னர் இருவரும் முத்துவை அழைத்துக்கொண்டு கோவைக்கு கிளம்பினர்.
பள்ளிபாளையத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது முத்து வயிறு பசிக்கிறது என்றான். எனவே சரோஜா தனது மகனை மகேந்திரனிடம் விட்டு விட்டு சாப்பாடு வாங்கச் சென்றார். சாப்பாடு வாங்கிவிட்டு திரும்பி வரும் போது முத்து கன்னத்தில் காயத்துடனும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் அழுது கொண்டிருந்தான்.
ஏன் அழுகிறாய்? என்று முத்துவிடம் கேட்ட போது அவனுக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. முத்துவை அடித்தீர்களா? என்று சரோஜா கேட்ட போது அவரிடமும் சரியான பதில் இல்லை. இந்த நிலையில் முத்துவின் உடல்நிலை மிகவும் மோசமானது.
எனவே பள்ளிபாளையத்தில் இருந்து மகேந்திரன், சரோஜா இருவரும் முத்துவுடன் ஆட்டோவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர். எனவே சிறுவனின் உடலுடன் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து ரெயிலில் கோவைக்கு கிளம்பினர். சிறுவனை ஏன் துணியால் மூடி வைத்திருக்கிறீர்கள்? என்று சக பயணிகள் கேட்ட போது ‘மகனுக்கு காய்ச்சல், எனவே துணியால் மூடிவைத்திருக்கிறேன்’ என்றார். பயணிகளும் அத்துடன் விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் ரெயில் வடகோவை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. அங்கிருந்து சரோஜாவையும், சிறுவனின் உடலையும் ஆட்டோவில் ஏற்றி கணபதிக்கு அனுப்பிவிட்டு மகேந்திரன் தப்பிவிட்டார். சரோஜா தனது மகன் குளிர் காய்ச்சலால் இறந்துவிட்டான் என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இந்த நிலையில் முத்து இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் கோவை வந்தனர். அவர்கள் சிறுவன் மர்மமாக இறந்தது குறித்து சரோஜாவிடம் கேட்டனர். சரியான பதில் இல்லை.
எனவே சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சரோஜா மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் சிறுவன் எப்படி? இறந்தான் என்பது தெரியவரும்.
Average Rating