ராஜீவ்காந்தி, பிரபாகரன் ரகசிய ஒப்பந்தம்-பாலசிங்கம் பகீர் தகவல்
ராஜீவ்காந்திக்கும், பிராபகரனுக்கும் இடையே ரகசி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசாங்கத்திற்கு அனுமதி புலிகளின் நிதித்தேவைக்கு மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கவும் ராஜீவ் முன்வந்ததாக பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளின் விஷயத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ் காந்தியை கொன்றதே நாங்கள் தான் விடுதலைப்புலிகள் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு பகிரங்கமாக தெரிவித்தது. இக்கொலையை மன்னித்து இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புவதாக பாலசிங்கம் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
பாலசிங்கத்தின் இந்த பேட்டி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளை மன்னிக்கமாட்டோம் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
பாலசிங்கத்தின் இந்த பேட்டி புலிகள் மீது மேலும் ஆத்திரத்தை கிளப்பவே உடனடியாக புலிகள் பல்டியடித்தனர். ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லையென்று புலிகள் மறுத்தன. பாலசிங்கத்தின் பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக புலிகள் விளக்கமளித்தனர். நடந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம் தான் தெரிவித்ததாக புலிகளின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்தார்.
இந்த பின்னணியில் ராஜீவ்காந்திக்கும் ,பிரபாகரனுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்ததாக சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி நேற்றிரவு பகீர் செய்தி வெளியிட்டது.
ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசாங்கம் அமைய ராஜீவ்காந்தி உறுதியளித்திருந்தார். இதற்காக இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெற்றிருந்தார். விடுதலைப்புலிகளின் அரசாங்கத்தில் இலங்கை அரசின் தலையீடு இருக்கவே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது போக புலிகளின் நிதிக்காக ராஜீவ்காந்தி மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. 80 களின் இறுதியில் இலங்கையில் வடமராஜ் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்களையும் , நிவாரணப்பொருட்களையும் போட உத்தரவிட்டார்.
ஆபரேசன் பூமாலை என்ற ஆப்பரேசன் மூலம் இந்திய போர்ப்படை விமானங்கள் இலங்கையின் வடபகுதியில் நுழைந்து உணவு பொட்டலங்களை போட்டு வந்தது. இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தமிழர்பிரச்சனையை தீர்க்க ராஜீவ்காந்தி மளமளவென்று காரியங்களில் இறங்கினார். பிரபாகரனை டெல்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார். அப்போது தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலி அரசு அமைய அவர் ஏற்பாடு செய்ததாக பாலசிங்கத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் பண உதவி விவகாரத்தில் சிறிய பிரச்சனை வெடிக்க நாளடைவில் இந்தவிரிசல் மேலும் அதிகமானது. ஒருகட்டத்தில் ராஜீவ் காந்தியை வெறுத்த விடுதலைப்புலிகள் சமயம் பார்த்து அவரை போட்டு தாக்கிவிட்டனர். அதுவரை விடுதலைப்புலிகளுக்கும் தார்மீக ஆதரவு அளித்து வந்த இந்தியர்கள் புலிகளின் மீது வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர். சம்பவத்திற்கு பிறகு இந்தியாவின் அணுகுமுறையே மாறிப்போய்விட்டது.
எத்தனையோஅரசியல் கொலைகளை புலிகள் செய்திருந்தாலும், ராஜீவ்காந்தி படுகொலை புலிகளின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாக பாலசிங்கம் மிகவும் வேதனையுடன் தமது சுயசரிதையில் மனம் விட்டு எழுதியிருப்பதாக தெரியவந்துள்ளது.
பாலசிங்கத்தின் இந்த பகீர் தகவல்கள் இந்தியாவில் மேலும் புயலை கிளப்பும் என தெரிகிறது.