உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் தேடி அலைந்து கண்டுபிடித்த கதாநாயகன்!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த ஜூன் 2013 ஆண்டு 30 சுற்றுலா பயணிகளையும், தனது மனைவி லீலாவையும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கு சுற்றுலா சென்றார்.
பத்ரிநாத்தில் உள்ள புகழ் பெற்ற ஆன்மீக தலமான சர் தாம் கோயிலுக்கு அவர்கள் சென்ற அவர்கள் அங்கு தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்தில் பெருத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் விஜேந்திர சிங் மனைவி லீலா காணாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு லீலா இறந்து விட்டதாக கூறிய உத்தரகாண்ட் அரசு நஷ்ட ஈடாக 9 லட்ச ரூபாயையும் விஜேந்திரருக்கு வழங்கியது.
எனினும் மனம் தளராமல், கடவுளின் மீது நம்பிக்கை வைத்த விஜேந்திர சிங் தனது மனைவியை தொடர்ந்து தேட ஆரம்பித்தார். மனைவி இல்லாமல் ஊருக்கு திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஒவ்வொரு கிராமமாக தனது மனைவியின் புகைப்படத்தை காண்பித்து யாராவது அவரை பார்த்தார்களா என்று கேட்டறிந்தார். தனது தேடும் பணியின் போது சாலையோரத்திலும், குளக்கரையிலும், கிராம மக்களின் வீட்டிற்கு வெளியேவும் படுத்து உறங்கிய அவர், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக மனைவி லீலாவை தேடினார்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப, விஜேந்தரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனது மனைவியை தேடிய அவர் கடைசியாக உத்தரகாண்டில் உள்ள கோங்கோலி கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களிடம் தனது மனைவியின் புகைப்படத்தை காண்பித்தார். அப்போது புகைப்படத்தில் உள்ளவரை போல் ஒரு பெண் மனநிலை சரியில்லாமல் அப்பகுதியில் நடமாடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் தனது மனைவி அங்குள்ள சாலையோரம் தனியே நிற்பதையும் அவர் கண்டார். கண்களில் நீர் ததும்ப மனைவியை நெருங்கினார். அவரது கையை பிடித்து ஆறுதல் கூறினார். மனநிலை சரியில்லாத போதும் தாலி கட்டிய தெய்வத்தை லீலாவும் அடையாளம் கண்டு கண்ணீர் மல்கினார்.
பின்னர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு விஜேந்தர் அல்வாருக்கு திரும்பினார். அங்கு திருமணமான தனது இரு மகள்களை கண்டவுடன் லீலா உற்சாகமடைந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக உள்ள போதிலும், தனது மகள்கள் அவர்களது புகுந்த வீட்டுக்கு சென்ற போது, அவர்கள் தலையில் கை வைத்து ஆசி வழங்கியதுடன், சிறிதளவு பணத்தையும் கையில் திணித்தார். இது தானே தாய்ப்பாசம்…
விஜேந்தரும் மனைவியிடம் என்ன நடந்தது என்பதை கேட்காமல், லீலா கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வந்தால் போதும் என்ற நினைப்புடன் பொறுமை காத்து வருகிறார். காத்திருப்பது அவரும், அவரது குடும்பம் மட்டுமல்ல. நாமும் தான்…
Average Rating