திண்டிவனம் அருகே ½ பவுன் நகைக்காக மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற தோழி!!
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, லாரி டிரைவர். இவரது மகள் சசிரேகா (வயது 14). ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியின் 9–ம் வகுப்பு மாணவி.
கடந்த 31–ந் தேதி காலையில் சசிரேகா வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் சசிரேகாவை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா பிணமாக மிதந்தார். இது பற்றி அறிந்த குடும்பத்தினர் அந்த மாணவியின் உடலை கண்டு கதறி துடித்தனர். இதுபற்றி கிளியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். கிணற்றில் மிதந்த சசிரேகாவின் உடலை மீட்டனர். அந்த இடத்தில் கிடைத்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். பிறகு சசிரேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
சசிரேகா பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். பின்னர், கொலையாளியை கண்டறிந்து கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சசிரேகா சாவு பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் சமாதானப்படுத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சசிரேகா மர்மசாவு குறித்து கிளியனூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த மாணவி சாவுக்கான காரணம் என்ன? என பல கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சசிரேகா கொலையின் பின்னணி தெரியவந்தது.
கொலையான சசிரேகா படிக்கும் பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் மாணவி மொளசூரை சேர்ந்த அனிதா (வயது 16). இவர் சசிரேகாவின் தோழி. நேற்று முன்தினம் சசிரேகா பிறந்தநாள். எனவே புதிதாக வாங்கிய தங்க கம்மலை காதில் அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்று இருந்தார். அவர் மாலையில் பள்ளியில் இருந்து மீண்டும் திரும்பியபோது அனிதாவும் உடன் சென்றது தெரியவந்தது. எனவே அனிதாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், சம்பவ நாளில் சசிரேகா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக அனிதா கூறினார். பின்னர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அந்த மாணவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘கிடுக்கிப்பிடி’ விசாரணையில் ½ பவுன் தங்க கம்மலுக்கு ஆசைப்பட்டு சசிரேகாவை கொலை செய்ததை அனிதா ஒப்பு கொண்டார். இதுபற்றி அனிதா கூறியதாவது:–
சம்பவ தினத்தில் மாலையில் பள்ளியில் இருந்து நானும், சசிரேகாவும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றோம். மொளசூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கலாம் என்று சசிரேகாவிடம் கூறினேன். அதற்கு அவள் சம்மதித்தாள். எனவே 2 பேரும் அந்த கிணற்றின் அருகே உட்கார்ந்து பேசிகொண்டிருந்தோம்.
அப்போது அவளுடைய புதிய கம்மலை நான் அணிந்து பார்க்க ஆசையாக இருக்கிறது என்று கூறினேன். எனவே அவள் தனது கம்மலை என்னிடம் கழற்றி கொடுத்தாள் அதை நான் அணிவதுபோல் நடித்தேன். அப்போது எதுவும் அறியாமல் உட்கார்ந்திருந்த சசிரேகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்தேன். பிறகு எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு சென்றுவிட்டேன். போலீசாரின் தொடர் விசாரணையில் நான் திக்குமுக்காடி உண்மையை ஒப்புகொள்ள நேர்ந்துவிட்டது.
இவ்வாறு அனிதா கூறினார்.
அதன்பேரில் மாணவி அனிதாவை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த சசிரேகாவின் 2 கம்மல்களையும் பறிமுதல் செய்தனர்.
Average Rating