திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!
ஈரோடு செங்கோடம் பள்ளம் பகுதியில் உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பெரியசாமி (வயது 40). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிமாரி (வயது 36).
ரமேஷ் பெரியசாமி நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அவரது மனைவி தேவிமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது இவர்களது வீட்டுக்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் தேவிமாரியிடம் திருமண பத்திரிகை கொடுப்பதற்கு வந்து உள்ளதாக கூறினார்.
இதை நம்பிய தேவிமாரி கதவை திறந்து அவரை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார். டிப்-டாப் உடை அணிந்த அந்த வாலிபர் தனக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும், அதற்கான திருமண பத்திரிகை கொடுப்பதற்காக வந்து உள்ளதாகவும் கூறினார்.
நான் உங்கள் கணவரின் நண்பர் அவரிடம் திருமண பத்திரிகையை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதை தேவிமாரி முழுமையாக நம்பினார். அந்த வாலிபரை நாற்காலியில் உட்கார வைத்த அவர், அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார்.
இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் திடீர் என்று தேவிமாரியை முதுகில் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களை பறித்தார்.
இந்த நேரத்தில் அந்த வாலிபரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த தேவிமாரி வீட்டுக்கு வெளியே உள்ள காம்பவுண்டு கேட் அருகே வந்து திருடன்… திருடன்… என்று சத்தம் போட்டார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த ஆசாமி காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து அவன் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார்
இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாலாஜி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அவர் தேவிமாரியிடம் விசாரித்தார். அவரிடம் தேவிமாரி நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறி நடித்து காட்டினார்.
இது பற்றி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் நூதன முறையில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை செய்த டிப்-டாப் வாலிபரை தேடி வருகிறார்கள்.
அந்த வாலிபர் கொண்டு வந்த திருமண பத்திரிகை எங்கு அச்சடிக்கப்பட்டது? அது பழைய பத்திரிகையா? அல்லது புதிதாக அச்சடிக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிகிறார்கள்.
மேலும் தேவிமாரியின் கணவர் பெயரை தெரிந்து வைத்து உள்ள அந்த வாலிபர் தேவிமாரி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு வந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வழக்கமாக இதுபோல நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஒன்றிரண்டு பேர்களாக வருவார்கள். ஆனால் இந்த திருட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டுமே வந்து உள்ளார்.
எனவே இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளன.
இது பற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாலாஜியிடம் கேட்ட போது, ‘‘நூதன முறையில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே இந்த வழக்கில் துப்பு துலங்கி விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவான்’’ என்று கூறினார்.
Average Rating