உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி: 1 கோல் போட்டு பிரான்ஸ் வீழ்த்தியது

Read Time:5 Minute, 27 Second

Foot.gif18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 4-வது கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரேசில்-பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்த்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு பிரேசிலுக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

கோல் அடிக்க இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் வீணடித்து விட்டனர். கோல் எதுவும் விழாமல் இருந்தாலும் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது.அந்த அணி கேப்டன் ஷீடேன், ஹென்றி, ரிபரி, அபிதல், வியரா ஆகியோர் ஒருங்கிணைந்து ஆடி னார்கள். பிரேசில் அணியில் ரொனல்டினோ, ராபர்ட்டோ கார்லோஸ் திறமையை வெளிப்படுத்தினர்.

2-வது பகுதி ஆட்டத்திலும் பிரான்ஸ் ஆதிக்கம் தொடர்ந்தது. 57-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷீடேன் பந்தை தூக்கி அடித்தார். பிரான்ஸ் முன்கள வீரர் தியரி ஹென்றி அருமையாக கோல் அடித்தார். இந்த கோலை பிரேசில் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உலக கோப்பையில் ஹென்றி அடித்த 3-வது கோலாகும். இந்த கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற முன் னிலை பெற்றது.

கோல் வாங்கிய அதிர்ச்சியில் பிரேசில் வீரர்கள் அனைவரும் முன்னேறி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அதிக விறுவிறுப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் பிரான்ஸ் பின்கள வீரர்கள் பிரேசில் கோல் அடிக்க விடாமல் இருக்கும் வகையில் அற்புதமாக ஆடினார்கள்.

61-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 2-வது கோலை போட வாய்ப்பு கிடைத்தது. ரிபரி அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு விலகி சென்றது. மேலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை பிரான்ஸ் வீரர்கள் தவற விட்டனர்.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் பிரேசில் வீரர்கள் கடுமையாக போராடினார்கள். பதில் ஆட்டக்காரர் ரோபினோ கோல் அடிப்பதை தவற விட்டார்.

இதே போல ரொனால்டினோ பிரிகிக்கில் அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. 88-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் வளையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதை பிரான்ஸ் கோல் கீப்பர் பார்கஸ் அருமையாக பிடித்தார்.

கடைசி வரை பிரேசில் அணியால் பதில் கோல் அடித்து சமன் செய்ய முடிய வில்லை. பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

1998ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தற்போது 2-வது முறையாக பிரான்சிடம் பிரேசில் அடி வாங்கி இருக்கிறது.

உலக கோப்பை போட்டியில் பிரேசில் தொடர் வெற்றிக்கு பிரான்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஷீடேனின் அருமையான ஆட்டம்தான் காரணம். பிரேசிலின் இந்த அதிர்ச்சி தோல்வியால் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பிரேசில் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்கள் சோக மயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

முன்னதாக நடந்த கால் இறுதியில் போர்ச்சுக்கல் 3-1 (பெனால்டி ஷுட்) என்ற கோல் கணக்கில் இங்கி லாந்தை வீழ்த்தியது.

5-ந்தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரை இறுதி போட்டியில் ஜெர்மனி-இத்தாலி 4-ந் தேதி பலப்பரீட்சை
Next post ஈராக் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்து 60 பேர் பலி