மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அங்கிருந்து இங்கு செல்வதும், இங்கிருந்து அங்கு செல்வதும் என ஏற்ற, இறக்கங்களுடன் அப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் மகிந்தாவின் பக்கத்திற்குத் தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் மைத்திரி தொடக்கம் ரிசாத். சம்பிக்க ரணவக்க, என அதிகமான வீரர்கள் எதிரணியின் இல்லத்திற்குள் திடீர்பிரவேசம் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.
மகிந்தாவைப் பொறுத்தவரை மைத்திரி ஒருவர் தான் எதிர்பார்க்காத, ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஏனெனில் மகிந்தாவின் அரசியல் இரகசிய நகர்வு, தந்திரோபாயம் தெரிந்த முக்கிய நபர் மைத்திரிபால சிறிசேன என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே தான் மகிந்த ராஜபக்ஸ பலவிதமான நெருக்கடிக்குள் சிக்கி திணறி வருகின்றார்.
இந்த விடயம் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறிய போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்நோக்கியிருந்தார். ஆயினும் கருணாவின் மீதுள்ள நம்பிக்கையின் பொருட்டும், கருணாவின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு அலட்சியப்படுத்தியதன் காரணமாகவும், போதிய காப்பீடுகளை செய்யாமல் இருந்ததன் விளைவுமே விடுதலைப்புலிகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. அந்த நிலையினை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய நிலையில் தற்போது மகிந்த ராஜபக்ஸ உள்ளார்.
அரசியல் முன்நகர்வு, மக்கள்ஆதரவு, ஆதரவாளர்கள், இறுதிநேர ஆயுத்தங்கள், அவற்றை எதிரிக்கு எட்டாமல் பாதுகாத்தல், எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தல் என பலவிடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ராஜபக்ஸ தள்ளப்பட்டுள்ளார். அதுவும் மிகவும் குறைந்த அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே தான் மைத்திரி, மகிந்தாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் என குறிப்பிடுவது பொருத்தமானது.
மகிந்தாவின் எதிரணியில் உள்ள சந்திரிக்கா மகிந்தாவைப் பொறுத்தவரை புதியவர் அல்ல. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒருவராகவே சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்கா உள்ளார். முன்னாள் அமைச்சர் ரிசாத்தைப் பொறுத்தவரை அவர் எந்த அணியில் இருந்தாலும் ஒன்றுதான் என்ற நிலைப்பாடே உள்ளது.
ஏனெனில் முஸ்லீம் மக்கள் குறிப்பிட்ட காலங்களில் மகிந்த அரசிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ள நிலையினை அவதானிக்க முடிந்தது. அது ரிசாத் அரசில் இருக்கும் போதே ஏற்படத் தொடங்கியிருந்தது. உனைஸ் பாரூக் எதிரணிக்கு மாறிய போதே அந்நிலையினை காண முடிந்தது.
இந்நிலையில் இறுதியில் எதுவும் செய்ய இயலாத தருணத்திலே ரிசாத் வெறுங்கையுடன் இலகுநடையிலே எதிரணியின் இல்லத்திற்கு வந்திருந்தார்.
ஏனையோரைப் பொறுத்தவரை மகிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை. யாழில் டக்ளஸ் கட்சி தாவியிருந்தால் தமிழ் மக்களின் அதிகவீதமான வாக்குகள் மைத்திரிபாலவிற்கு கிடைத்திருக்கும் என்பது ஓரளவு ஏற்கக்கூடிய விடயமாகவே தெரிகிறது.
அரசதரப்பு சங்கதிகள் இப்படி இருக்க எதிரணியின் நிலைபற்றியும் சற்று அலசுவோம்.. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மிகவும் வலுவானவராகவே மைத்திரிபால விளங்கியுள்ளார். அந்த பதவியின் பலத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பல காலங்களாக ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை மைத்திரி காத்திருந்தது மட்டுமல்ல தமது நடவடிக்கைகளை மிகவும் இரகசியமாக நகர்த்தியிருந்தமையே அவரது பலமாகும். இந்நிலையே மைத்திரி அரச அமைப்பை எந்தளவு அவதானித்து தமது நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளார் என புரிந்து கொள்ள போதுமானது.
சந்திரிக்காவைப் பொறுத்தவரை எதிரணியின் முள்ளந்தண்டே அவர்தான் என்பது ஊரறிந்த விடயம். ராஜபக்ஸவை விட மைத்திரிபால சிறிசேனவின் பலத்தை அறிந்த ஒரே ஒரு நபர் சந்திரிக்கா அம்மையார் மட்டுமே. ஏனெனில் மைத்திரிபால கட்சியில் மரியதைக்குரியவராகவும், செல்வாக்குடையவராகவும் இருப்பதை உணர்ந்து அவரை போட்டிக் களத்தில் இறக்க வேண்டும் என்பதை தமது அரசியல் சாணக்கியத்தால் கணித்து இரகசியமாக செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
எதிரணிக் கூட்டமைப்பு என்பது சந்திரிகாவின் கூட்டமைப்பே என மகிந்த ராஜபக்ஸ கூறுவது ஏற்கக் கூடியதே. எனவே மகிந்தாவிற்கும் சந்திரிகாவிற்கும் இடையிலான போட்டியே என்பது அனைவரதும் கணிப்பாக உள்ளது. ரணிலைப் பொறுத்தவரை வெறும் ஆலோசகர் என்ற நிலையிலே தொழிற்படுவதாகவே தெரிகிறது. அடுத்த அடுத்த நிலைகளிலே தான் ஏனையோர் உள்ளனர்.
அப்படியாயின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்கு என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததே. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி” இதுதான் கூட்டமைப்பின் நிலை என பரவலாக அனைவராலும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்து ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டும் இன்னும் புத்தி வரவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
மைத்திரிக்கு ஆதரவு கொடுத்தது பற்றிய எந்த விதமான விளக்கத்தையும் பகிரங்கமாக கூட்டமைப்பால் கூற முடியாது. இந்நிலையில் எதிரணியில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆறு கோடி சமாச்சாரம் கூட்டமைப்பிற்கு மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல வவுனியாவில் தெற்கு பிரதேச சபையில் பல உறுப்பினர்களின் இழப்பிற்கும் வழிவகுத்ததோடு ரவிகரன், அனந்தி போன்ற மாகாண சபை உறுப்பினர்களின் கருத்து முரண்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. இவர்கள் எந்நேரமும் அரச தரப்பின் பக்கம் சாயலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே சிறிது ஏற்படத் தான் செய்கிறது. எது எப்படி இருப்பினும் கூட்டமைப்பின் பலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்பது உண்மை.
ஆனந்தசங்கரி ஏற்கனவே முரண்பட்ட நிலையில், சுரேஷ் பிரேமச்சந்திரன் முரண்பட்டும் வெளியே செல்ல முடியாத நிலையிலும், அடைக்கல நாதன் எந்நிலையிலும் அரச தரப்பின் இல்லத்திற்குள் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பிலும், சித்தார்த்தன் நெருக்கமும் இன்றி, விலகலும் இன்றி வெறும் அவதானிப்பாளராகவும் உள்ள நிலை தான் கூட்டமைப்பின் நிலை. இது வெறும் அரசியலை அடிப்படையாக கொண்ட கூட்டே அன்றி தமிழ் மக்களின் விடுதலைக்கான கூட்டு என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கூட்டமைப்பின் உள் வீட்டு சங்கதிகள் இப்படி இருக்க “நாய் கேட்ட கேட்டிற்கு வேற… ஞாயிற்றுக்கிழமை லீவும் கேட்டுதாம்” என்பதற்கு ஏற்ப மைத்திரிக்கு ஆதரவு கொடுத்தமையால் தமது கொள்கையில் தளர்ச்சி நிலை ஏற்பட காரணமாகவும், எதிர்காலத்தில் கூட்டமைப்பு என்ற பதத்திற்கு நாமம் இட்டு அழிவடைவதற்கும் பிள்ளையார் சுழி இடுவது போலவே தெரிகிறது. இது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை விட தமிழரசுக் கட்சியை தனிப்பெரும் கட்சியாக மாற்றும் செயற்திட்டத்தின் ஆரம்பம் எனக் கூறுவதே பொருத்தமானதாகும்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முடிவு என செவிசாய்க்க தயாராக இல்லை.அவர்கள் தமது முடிவை அதாவது தெரிவை முன்வைப்பதற்கு தயாராகி விட்டார்கள்.அது மகிந்தாவாக இருக்கலாம், மைத்திரியாக இருக்கலாம். எது எப்படி எவ்வாறு இருப்பினும் இத்தகைய முடிவு கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்காது என்பது எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Average Rating